வலைப்பூ, வலைமொட்டு, வலைபிட்டு என தமிழ்-இணையத்தில் வருடாந்திரமாக எழுதப்படும் டாப் டென் சம்பிரதாய குறுங்கட்டுரைகளில் நிச்சயம் இருப்பது “புதுவருடத்தில் என்னவெல்லாம் சாதிப்பது” (வருட முடிவில் என்னவெல்லாம் கோட்டைவிட்டேன் என்று பட்டியலிடுவது இதன் மாறுவேடமே). அடுத்து, அவ்வருட புத்தகக் காட்சி சென்றுவந்ததின் அனுபவப்பகிர்வு.
2012 பு.காட்சியகத்திற்கு சென்றேன், சுழன்றேன், தலைவலியுடன் திரும்பினேன். உத்திரவாதமாக நொடிக்கொருதரம் காற்றை மூக்கிலிருந்து கார்பண்டைஆக்ஸைடாய் வெளியேற்றும் சகஜனசாகரத்தினூடே, வெள்ளைவேட்டிசூழ் வெள்ளாவியாம் பெரிய சைஸ் அஞ்சனப்பெட்டியில் பனுவலைப்போற்றும் சிற்றெறும்பென நான்கைந்து மணிநேரம் உலாவியதில், தலைவலி.
கட்டுரையின் தலைப்பில் “புத்தகங்கள்” என்று தனிப்படுத்திக் குறிப்பிடுவதின் காரணம், டிக்கெட், கார கடலை, டி-ஷர்ட் (இயல் இசை ஆடை படிக்கவும்), டீ, கொடுத்த காசிற்கு மிச்சம், மேல்மூச்சு, கீழ்மூச்சு, பெருமூச்சு என்று புத்தகம் தவிர பு.காட்சியில் ஏகத்திற்கு வாங்கியிருக்கிறேன். இங்கு வாங்கிய புத்தகங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
» Read more..

இணையமும் அதில் வலைப்பூக்களும் பூத்துக்குலுங்கும் காலத்திற்கு முந்தைய ஒரு பிராயத்தில் புத்தக புழுவில்லையாகினும், பூச்சியாயிருந்தேன். படித்த புத்தகங்களை ஒரு குயர் கோடுபோட்ட நோட்புக்கில் பட்டியலிட்டேன். பத்து வருடமாக பட்டியலிட்டதில், என்னிடம் உள்ள புத்தகங்கள் என்றில்லாமல், அக்கம்பக்கத்தில் ஓசியில் படித்தவை என சுமார் ஐநூறு புத்தகங்கள் தேறியது. புனைவு, வினவு, அறிவியல், அவியல், என பலசரக்கு தலைப்புகள் பட்டியலில் அடக்கம். எதற்கு இந்த சுய விளம்பரப் பட்டியல் என்று தெரியவில்லை; கேர்ள்பிரண்ட்ஸ்களிடம்கூட காட்ட எத்தனித்ததில்லை. டூ விட்டுவிடுவார்களோ என்று பயம்.








