அருண் நரசிம்மன்

புத்தகங்கள்: வாசித்தவை, வாங்கியவை

அதாவது, 2012இல் வாசித்தவை, 2013இல் வாங்கியவை. ‘வாசித்தவைகள்’ ஏற்கனவே உள்ளிட்டிருக்கும் பட்டியல் (2012 புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகங்கள்) சேர்த்து, என்னுடன் சமீப வருடங்களில் புழங்கும் புத்தகங்கள். ‘வாங்கியவை’, நேற்று (சனவரி 12) 2013 புத்தகக் காட்சியில் வாங்கியவை. புத்தகக் காட்சி நடந்துகொண்டிருப்பதால், உங்களுக்கு உபயோகமாகலாம் என்று இச்சமயத்தில், ஓரிரு குறிப்புகளுடன் இவற்றை பட்டியலிட முனைந்தேன். உண்மை வேண்டுமெனில், இவ்வகையில் ‘பட்டியல்கள்’ எழுதுவது மிக எளிது; அதற்கேற்றபடி ‘தன்னிலை விளக்கம்’ கொடுக்கத் தெரிந்திருக்கவேண்டும். அவ்வளவே.

தன்னிலை விளக்கம்: இங்கும் மேலுள்ள சுட்டியில் பட்டியலிட்டுள்ளதுமான அனைத்து புத்தகங்களுமே என்னால் சில நேரங்களில் ரசிக்கமுடிந்தவைகளே. சிலபகுதிகளிலாவது, என்னை யோசிக்கவைத்தவையே, வைப்பவையே. நேற்று வாங்கிய, இனி வாசிக்கப்போவதும், அவ்வகையில் நிச்சயம் இருக்கும். தேர்வு என்று தரம் பிரிப்பது கடினம்; அது விமர்சகர்கள் வேலை. நான் வெறும் வாசகன். விமர்சகர்கள் பரிந்துரைகளை முழுவதுமாய் நம்பாத, நேரடியாக எனக்குப் புதியதாய் கிடைக்கும் எழுத்திற்கு காசுகொடுக்கத் தயாராய் உள்ளவன். எதையும் வாசிப்பேன்.

சாய்வு (சாய்சு) என்றால், கதைகளைவிட கட்டுரைகளையே விரும்புவேன். நாவல்கள் பெரிதாக இருக்கவேண்டும். சிறுகதைகள், ஒரே எழுத்தாளரின் தொகுப்புகளாய். எவ்விதமான நகைச்சுவையும், எவ்விதமான ‘இலக்கிய அந்தஸ்து பெற்ற’ அவலச்சித்திரிப்பையும் விட உகந்தவையே. அதேபோல, எவ்விதச் சித்திரிப்புகளிலும், அனுபவப் பகிர்வுகளிலும், எழுத்தின் சுயகௌரவம் முக்கியம் என்று கருதுவேன். இது மிகவும் அகவயமான மதிப்பீடே என்றால், கெட்டி அட்டைப் புத்தகங்கள், உள்ளடக்கமும் நன்றாக இருக்கும் என்று கருதுவேன், என்பதையும் தெரிந்துகொண்டுவிடுங்கள்.

இப்போது புத்தகங்கள்.

*

2013-books-reco-arunn

[பட்டியலில், பதிப்பகங்கள்: த – தமிழினி | கா – காலச்சுவடு | ச – சந்தியா | உ – உயிர்மை | கி – கிழக்கு | பு – புதுப்புனல் | யு – யுனைட்டட் ரைட்டர்ஸ் | வி - விகடன் பிரசுரம் | உ - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்]

2012இல் வாசித்தவைகளில் இருந்து: (பரிந்துரைகள் என்றும் கொள்ளலாம். அநேகமாக முழுவதுமாய் வாசித்தவைகளில் இருந்தே குறிப்பிடுகிறேன். அனைத்தும் உங்கள் வாசிப்பிற்கு ‘நன்றாக இருக்கும்’ என்கிற உத்திரவாதமில்லை.)

 • அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு – 1 & 2 (கி) – திட்டமிட்ட எழுத்துவகை; நிதானம், தெளிவு, வீச்சு, சாதாரணனின் அன்மை, பொருளடக்கத்தின் விலாசம், மறுவாசிப்பில் புலப்படும் பொருள்கள்.
 • நாஞ்சில் நாடன் – சமீபத்திய கட்டுரைகள், தொகுப்புகள் –ஏற்கனவே இவரது கட்டுரைகளுக்கு அறிமுகமாகாதவர்கள் (யாராவது உண்டா என்ன?) காவலன் காவான் எனின் (த) | சூடிய பூ சூடற்க (த) | இவற்றில் தொடங்கலாம். சுஜாதா கட்டுரைகளை வாசித்தால் என்போன்றோருக்கு ‘நாமும் எழுதலாம் போலருக்கே’ என்று தோன்றும்; இவரது கட்டுரைகளை வாசித்தால், ‘நாம் எழுதுவதை நிறுத்திவிடவேண்டும்’ என்று தோன்றும்.
 • அ. முத்துலிங்கம் – அமேரிக்க உளவாளி (கி) | அமேரிக்காக்காரி (கா) | உண்மை கலந்த நாட்குறிப்புகள் — சுவாரஸ்யமான கட்டுரைகள்; திட்டமிட்ட எழுத்துவகை; சுவாரஸ்யமானவை என்பதால் ‘இலக்கியத் தகுதியை’ இழந்துவிட்டிருக்கலாம்.
 • பல நேரங்களில் பல மனிதர்கள் – ‘பாரதி’ மணி (உ) – நாஞ்சில் நாடனின் முன்னுரையில் தொடங்கியதும், புத்தகத்தை வாசித்துமுடித்ததுமே வேறுவேலை என்றாகிவிடும்.
 • தலையணை மந்திரோபதேசம் – நடேச சாஸ்திரியார் (த) – அந்தக் காலத்து தஞ்சாவூர் வசைகள் தெரியவேண்டுமா?
 • அன்பின் வழியது உயிர் நிழல் – பாதசாரி (த) — கட்டுரைகள்
 • சிலந்தி – எம் .ஜீ. சுரேஷ் (பு) – (வித்தியாசமான துப்பறியும் நாவல்)
 • குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர் (கி) – கார்லொஸ் காஸ்டானிடா பாணியில், சித்தர்கள் காலப்பிறழ்வுகள் என்று தமிழில் கலக்கல் நாவல்
 • எம். எஸ். கல்யாணசுந்தரம் – பொன்மணல் (த) | பகல் கனவு (த) | இருபது வருடங்கள் (த) – ‘அந்தக் கால’ அருமையான எழுத்து.
 • கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் – தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன் (கா)
 • அமைதியான ஒரு மாலைப்பொழுதில் – தமிழில்: எம். எஸ். (யு) – ரே பிராப்பெரி, ஐஸாக் பாஸிவிஷ் சிங்கர், ராபர்ட் சில்வெர்பெர்க் போன்றோரின் பதினைந்து உலக இலக்கியச் சிறுகதைகள்.
 • கன்னிவாடி – க. சீ. சிவக்குமார் (த) – கிராமியச் சிறுகதைகள்; இவ்வகை ‘நொஸ்டால்ஜியா’ நம் அநேகருக்கு சாய்ந்துகொள்ள அடிக்கடித் தேவைப்படும்.
 • மறந்துபோன பக்கங்கள் – செங்கோட்டை ஸ்ரீராம் (மேலே குறிப்பிட்ட ‘நொஸ்டால்ஜியா’ கட்டுரைகள் வடிவில்)
 • ஏறக்குறைய உண்மைக்கதை – ரா. ஸ்ரீனிவாசன் (த)
 • இடாகினிப் பேய்களும்… – கோபிகிருஷ்ணன் (த) – …நடைப்பிணங்களும், சில இடைத்தரகர்களும் (முழுத் தலைப்பு)
 • அனுபவங்கள் அறிதல்கள் – நித்ய சைதன்ய யதி (யு)

*

2013 புத்தகக் காட்சியில் வாங்கியவை (சிலநாள்களில் பட்டியல் புதுப்பிக்கப்படும். சனவரி, 19, 2013: புதுப்பித்தாயிற்று. இவ்வருடத்திற்கு தமிழில் அவ்வளவுதான்.)

 • அசோகமித்திரன் — 18ஆவது அட்சக்கோடு (கா) | 1945இல் இப்படியெல்லாம் இருந்தது (கா) — கடந்த ஐந்தாண்டுகளில் எழுதிய 22 சிறுகதைகளின் தொகுப்பு | அழிவற்றது (கா) — 2010, 2011 இல் எழுதிய சிறுகதைகள்
 • லா. ச. ராமாமிருதம் — சிந்தா நதி (ச) | பாற்கடல் (ச) | புத்ர (ச) | அபிதா (ச) | பிராயச்சித்தம் (ச) | கல் சிரிக்கிறது (ச) | ஜனனி (ச) — சிறுகதைகள் | உயிர்மை பதிப்பகம் லா. ச. ரா. சிறுகதைகளை நான்கு தொகுதிகளாய் வெளியிட்டுள்ளது. முதல் மூன்று கிடைக்கிறது. சந்தியா பதிப்பகம் இவ்வரிசையில் உள்ளவைகளை நேர்த்தியாய் வெளியிட்டுள்ளது.
 • ஹிந்துமதம் ஓர் அறிமுகத் தெளிவு – ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (ச)
 • தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்தம் (ச) — (வாசித்துவிட்டேன். சென்ற நூற்றாண்டின் நாற்பது ஐம்பதுகளில் ஒரு நோக்கத்தோடு எழுதப்பட்டவை. தனிமனித இலக்கியரசனையில், சிலவற்றைத் தவிர பொதுவாக வெகுசுமார்.)
 • தமிழ்நாடு: நூற்றாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் – திரட்டித் தொகுத்தவர் ஏ. கே. செட்டியார் (ச)
 • என் சரித்திரம் – உ. வே.சா. (டாக்டர் உ. வே. சா. நூல் நிலையம்) | விகடன் பிரசுரமும் பெரிய சைஸில் (அதனால் குறைவான பக்கங்கள்) இதைப் பிரசுரித்திருக்கிறார்கள்.
 • மணல் கடிகை – எம். கோபாலகிருஷ்ணன் (த) – ஆசிரியர் கோவையைச் சேர்ந்தவர்; ‘தமிழினி’ வசந்தகுமார் ‘இவரும் எழுத்தாளர்தான்’ என்று என்னை அறிமுகம் செய்துவைத்ததும் (அவர் பாணிக் கிண்டல் அது) அழகான எழுத்தில் புத்தகத்தினுள் கையொப்பமிட்டுக்கொடுத்தார்.
 • அ. கா. பெருமாள் – படிக்கக் கேட்ட பழங்கதைகள் (த) | காலம் தோறும் தொன்மங்கள் (த) | தென்குமரியின் சரித்திரம் (கா) | அர்சுனனின் தமிழ்க் காதலிகள் (கா)
 • நாஞ்சில் நாடன் – கான் சாகிப்: நாஞ்சி நாடனின் சமீபத்திய சிறுகதைகள் (த) (பின்பணிக்காலம் தொடங்கி 17 கதைகள் உள்ளது; எழுத்துரு சற்று பெரியதாக, வாசிக்க வசதியாக உள்ளது)
 • பாதசாரி – பேய்க்கரும்பு (த) – கட்டுரைகள் – இவரது முந்தைய கட்டுரைகள் அன்பின் வழியது உயிர்நிழல் (சென்ற வருடம் வாங்கியவை பட்டியலில் உள்ளது) எனைக் கவர்ந்தவை.
 • ஆ. மாதவன் கதைகள் (த) – விமர்சகர்கள் பரிந்துரைத்தது; இரண்டு பகுதிகளாய்த் தொகுத்தவை
 • The Humonk – V. Amalan Stanley (…it assures us that it is possible to live in harmony and peace amidst difficulties…) (த) – வசந்தகுமார் படித்துப்பாருங்கள் என்று கொடுத்தது. செய்துவிடுவேன்.
 • Saranagati: surruender unto him – Swami Tejomayananda – Central Chinmaya Mission Trust
 • Art of Contemplation – Swami Chinmayananda – Central Chinmaya Mission Trust
 • யுவன் சந்திரசேகர் – ஏமாறும் கலை (கா) – புதிய 12 சிறுகதைகள் | பயணக் கதை (கா) — நாவல். மூன்று நண்பர்கள் அவர்கள் பார்வையில் கூறும் ஒரே பயணத்தின் கதை; உபகதைகள் உட்பட.
 • மா. கிருஷ்ணன் – மழைக்காலமும், குயிலோசையும்: இயற்கையியல் கட்டுரைகள் (கா) | கதிரேசன் செட்டியார் காதல் – துப்பறியும் நவீனம் + படங்கள் (மதுரை பிரதர்ஸ் பதிப்பு – காலச்சுவடு நிலையத்தில் கிடைக்கும்). வாசித்துவிட்டேன். துப்பறியும் கதை எப்படி அமையவேண்டும் என்று அறிந்து எழுதியிருக்கிறார் (அனைத்து துப்புகளும் வெளிப்படையாய் வாசகருக்கும் தெரியும்). எனக்குப் பிடித்திருந்தது.
 • பி. ஏ. கிருஷ்ணன் – புலிநகக் கொன்றை (கா) – நாவல் | கலங்கிய நதி (கா) – நாவல் | திரும்பிச் சென்ற தருணம் (கா) – கட்டுரைகள் | அக்கிரகாரத்தில் பெரியார் (கா) – கட்டுரைகள்; தலைப்புக் கட்டுரையையும் சேர்த்து பலதும் செரிவான அவதானங்கள் நிரம்பியவை. அசோகமித்திரன் பற்றிய மதிப்பீடு நான் உடன்படுவது.
 • பெருமாள் முருகன் — ஆளண்டாப் பட்சி (கா) – உழவு, கூட்டுக்குடும்பச் சிதைவு பற்றிய நாவல்.
 • Wetland Birds of Tamilnadu: A Pictorical Field Guide தமிழகத்தின் நீர்புல பறவைகள் – Robert B. Grubh, Shailaja R. Grubh – Inistitute of Restoration of Natural Environment (IRNE) publication (காலச்சுவடு நிலையத்தில் கிடைக்கும்) – அழகிய கலர் படங்களுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் விளக்கங்களுடன் உள்ளடக்கம். அடிக்கடி ‘இயற்கை நடை’, ‘பறவை கண்கானிப்பு’ என்று போகையில், வார்ப்லர், கார்ப்லர், என்று அருகில் இருப்பவர்கள் அடையாளம் காட்டுகையில், தமிழில் இவைகளுக்கெல்லாம் பெயர்களே இல்லையா என்று வெறுத்துப்போய் கடையில் பரிந்துரைத்ததும் உடனே தலையாட்டிவிட்டேன். (கூடவே பைனாகுலரும் விற்கலாமோ.)
 • மௌனி படைப்புகள் (கா) – கெட்டி அட்டையுடன் நேர்த்தியான பதிப்பு.
 • சுந்தர ராமசாமி – ஜே. ஜே. சில குறிப்புகள் (கா) – “புளியமரத்தின் கதை” வாசித்துவிட்டேன்; அடுத்ததை முயல்வோம் என்று வாங்கியது. | நினைவோடை தி. ஜானகிராமன் (கா) – கிருஷ்ணன் நம்பி பற்றிய நினைவோடை கிடைக்கவில்லை; மீண்டும் போவதற்குள், எடுத்துவைக்கிறேன் என்றுள்ளார். (எடுத்து வைத்திருந்தார்!) | நினைவோடை கிருஷ்ணன் நம்பி (கா)
 • கு. அழகிரிச்சாமி — ராஜா வந்திருக்கிறார் (கா) – இவரது சிறுகதைகள் வாசிக்காமல் இலக்கிய வாசிப்பு பூரணமாகாது என்பதைவிட, தொடங்காது எனலாம். முழுத் தொகுப்பை கெட்டி அட்டையானாலும், கையில் தூக்கவே முடியவில்லை (இரண்டு பகுதிகளாய்ச் செய்திருக்கலாம்). அதனால், இதை வாங்கினேன்.
 • முச்சந்தி இலக்கியம் – ஆ. இரா. வேங்கடாசலபதி (கா) – வாசகனாய் இருந்தால் நிச்சயம் ஒருமுறை வாசித்துப்பார்த்துவிட வாங்குவோம்.
 • அ. முத்துலிங்கம் – குதிரைக்காரன் (கா) – சிறுகதைகள் | மகாராஜாவின் ரயில் வண்டி (கா) – சிறுகதைகள் – கட்டுரைகளில் எனக்குப் பிடித்தமான எழுத்து என்பதால், இப்போது இவரின் கதைகளை வாசிக்க முனைந்துள்ளேன்.
 • பசுமைப் புரட்சியின் கதை – சங்கீதா ஸ்ரீராம் (கா) – ஜெயமோகன் முன்னுரையுடன்.
 • நியூஸிலாந்து – துளசி கோபால் (ச) – துளசிதளம் இணைய வலைப்பூவில் எழுதிக்கொண்டிருப்பவர்; நியூஸிலாந்தில் பல வருடங்கள் வசிப்பவர். இவர் எழுதியுள்ள நியூஸிலாந்து வரலாறு.
 • புத்தம் புது வீடு — ஹெப்ஸிபா ஜேசுதாசன் (கா) — அசோகமித்திரன் கட்டுரைகளில் வாசித்த பரிந்துரையில் வாங்கியது.
 • எம். வி. வெங்கட்ராம் — வேள்வித் தீ (கா) | நித்யகன்னி (கா) — பதிவைப்பார்த்து, மின்னஞ்சலில் கிடக்குமிடம் குறிப்பிட்ட அன்பருக்கு நன்றி.
 • கலீலியோ முதல் கலாம் வரை — நெல்லை சு. முத்து (உ)
 • விளையாட்டு விஞ்ஞானம் — அ. சுப்பையா பாண்டியன் (வி)
 • மௌனியின் மறுபக்கம் — ஜே. வி. நாதன் (வி)
 • தமிழருவி மணியன் — கனவு மெய்ப்பட வேண்டும் (வி) | எங்கே போகிறோம் நாம் (வி) |
 • ஞாநி — ஓஹோ பக்கங்கள் (கா)
 • தென்னாட்டுச் செல்வங்கள் — இரண்டு பாகங்கள் — சில்பி (வி). வாங்கியதை பதிவில் அறிவித்த பத்ரிக்கு நன்றி. அதனால்தான் தெரியவந்து வாங்கினேன்.

*

இதுவரை கிடைக்காதவை (2013 புத்தகக் காட்சியில் எங்கு கிடைக்கலாம் என்று எனக்குத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்)

 • எம். வி. வெங்கட்ராம் – நித்திய கன்னி | இருட்டு | உயிரின் யாத்திரை (நாவல்கள்) — அப்டேட்: நித்தியகன்னி காலச்சுவடு பதிப்பில் கிடைத்துவிட்டது.
 • கிருத்திகா – புகை நடுவில் | சத்தியமேவ | பொன்கூண்டு (நாவல்கள்) (இவரது வாசவேஸ்வரம் வாசித்துவிட்டேன்). அப்டேட்: புகை நடுவில், காலச்சுவடு பதிப்பில் உள்ளது.
 • பராங்குஸம் – கதைகள் (சுதேசமித்ரன், மணிக்கொடி, தேனீ இதழ்களில் வெளியானவை)
 • டி. கே. சி. – தமிழ்க்குரல் (‘கல்கி’ கட்டுரைகள்)
 • காப்பிய இமயம் – என். வி. நாயுடு, ம. ரா. போ. குருசாமி — பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு – பதிப்பில் இல்லை (யாம், விசாரித்துவிட்டேன்)
 • இலட்சுமணப்பெருமாள் கதைகள் – (தமிழினி, பதிப்பில் இல்லை)
 • பாலகாண்டம் – இலட்சுமணப்பெருமாள் – (தமிழினி, பதிப்பில் இல்லை)
 • ரஸிகன் கதைகள் – சிதம்பர ரகுநாதன் – (தமிழினி, பதிப்பில் இல்லை)
 • கோபிகிருஷ்ணன் — தூயோன் | மானுட வாழ்வு தரும் ஆனந்தம் – (தமிழினி, பதிப்பில் இல்லை)

*

இவற்றை மனதில்கொண்டு, நீங்கள் ரசித்த, நான் வாசிக்கவேண்டிய புத்தகங்களை (2013 புத்தக காட்சியிலேயே கிடைக்கவேண்டும் என்பதில்லை) தெரிவித்தால் தன்யனாவேன்.

வாழ்க வாசிப்பு.

Print Friendly
Comments are closed.