நேற்று இரவு தூங்கும் முன் கேட்பதற்கு இசை களஞ்சியத்தில் கையை ஆழமாக விட்டு துழாவி சுற்றிலும் மற்ற பல காஸெட்டுகள் சரிந்துவிழ ஒன்றை எடுத்து பார்த்தால், அனந்தலக்ஷ்மி சடகோபன் எல்பி ரெக்கார்டிங்கில் பாடிய ஒரு கலெக்ஷன் மாட்டியது. அன்னமே என்று ஆரபி வர்ணத்தில் தொடங்கி தமிழில் நிறைய பாடியிருந்தார். அறுபதுகளிலும் அதற்கு முன்னரும் பிரபலமாய் இருந்த ராகமாலிகா பல்லவி ஒன்றை இதில் பாடியிருந்தார்.
சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி, தர்பாருக்கு
எந்த நான்கு ராகங்களில் என்பது புரிந்திருக்கும்.
அரியக்குடியார் ராகம் தானம் பல்லவியாய் விஸ்தரித்து பாடி ஜின்டாமிர்தம் செய்து பிரபலபடுத்தியதுதான். ஆனாலும் “அப்ரிஜ்டு வெர்ஷனில்” அனந்தலக்ஷ்மி அவர்கள் சுருக்கிவரைந்ததிலும் நிறைய சத்து இருந்தது. சங்கராபரணத்தில் பாடிய, இதுவரை நான் கேட்டிராத, சில சங்கதிகள் பிரமிப்பை ஏற்படுத்தியது. தர்பாரை “ககாரிஸ” பாடித்தான் காட்டிக்கொடுக்கவேண்டும் என்பதெல்லாம் இல்லை என்பதை அனாயாசமாக நிருபித்திருந்தார்.
ஒரு விஷயம் சற்று ஆச்சரியபடுத்தியது. “கமபாமக, ரிகஸாரிக” என்ற ஒரு பழகிய மெலடி உள்ளது. மதுரை மணி ஐயர் அவர்கள் காம்போதியில் அடிக்கடி மேல்ஸ்த்தாயியில் பிரயோகித்து வயலின் பக்கவாத்தியத்தில் கீழ்ஸ்தாயியில் உடன் அதையே வாசிக்க ரசிகர்களை சிலிர்ப்படையவத்தது. அவர் மருமான் ஷங்கரநாராயணன் அவர்கள் இப்போதும் பாடி சிலிர்ப்படையவைப்பது. இந்த ஸ்வரகோர்வையை அனந்தலக்ஷ்மி ஷங்கராபரணத்தில் பாடியிருந்தார். முதல்முறையாக கேட்கிறேன். விஷயம் தெரிந்த வயதில் மூத்த நண்பரிடம் இதுபற்றி கேட்டேன். அந்தகாலத்தில் அழகாய் இருந்தால், கேட்பதற்கு இனிமையாய் இருந்தால் அடுத்த ராகத்திலும் எடுத்து உபயோகித்துவிடுவார்கள். ராக ஸ்வரூபமெல்லாம் மாறாமல் வருகையில் தப்பேதுமில்லை என்றார். சரியாகத்தான் இருந்தது.
அனந்தலக்ஷ்மி அவர்கள் அறுபதுகளிலும் எழுபதுகளிலும், கணேச பாகவதர், சாத்தூர் சுப்ரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர், நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, வி.வி.சடகோபன் போன்ற வல்லுநர்களிடம் கற்று தேர்ந்திருக்கிறார். ஹிந்துஸ்தான இசைமுறையிலும் வாமன் ராவ் ஸ்தோலிகர் என்பவரிடம் கற்று தேர்ச்சிபெற்றவர். தமிழ் பாடல்களில் சிறப்பு பயிற்சி செய்தவர். அம்புஜம் கிருஷ்ணாவின் காணமழை பொழிகின்றான் போன்ற “அந்த கால” ஹிட் பாடல்களை இவர் ட்யூன் அமைத்ததாக கேள்வி. இந்த காஸெட்டில் அந்தபாடலையும் அருமையாக பாடியிருக்கிறார். மேலும் விசாரித்ததில் குமரகுருபரரின் மீனாக்ஷிஅம்மை பிள்ளை தமிழிலிருந்தும் சிலவற்றை இசைவடிவம் கொடுத்திருக்கிறாராம். கேட்டுப்பார்கவேண்டும்.
மேற்கூறிய நண்பருடன் சென்ற வருடம் அகதெமியில் காலை கச்சேரி கேட்ட ஆயாசத்தில் வெராண்டாவில் உலவிக்கொண்டிருக்கையில், என்னை சற்று நிறுத்தி ஒரு ஓரமாக அமர்ந்திருந்த முதிய பெண்மனி ஒருவரிடம் “இவனுக்கு உங்கள் பாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும்” என்று அறிமுகப்படுத்தினார். “ரொம்ப சந்தோஷம், எப்பவோ பாடியது அதெல்லாம்” என்று பட்டுபுடவை தலைப்பை இழுத்து போர்த்திகொண்டு கைகூப்பியவரிடம், பதறி இதை நான் செய்ய வேண்டும் என்று கூறினேனேதவிர பதற்றத்தில் கை எழவில்லை. ஏனென்றால், என்னை அறிமுகப்படுத்திய நண்பர் என் பக்கமும் அதற்குள் திரும்பி “இவர்தான் அனந்தலக்ஷ்மி சடகோபன்” என்று கூறியிருந்தார்.
என் கல்யாணத்தில் இவர் பாட்டுதான் அன்று, என்று சந்தோஷமாக கூறினார் நண்பர். காதில் புஷ்பராகம் மின்ன அனந்தலக்ஷ்மி இன்னமும் குனிந்துகொண்டார், வெட்கமாக சிரித்துக்கொண்டே. வேறு எதுவும் பேசத்தோண்றாமல் வருகிறேன் என்று சிரித்துக்கொண்டே விடை பெற்றோம். அந்தகாலத்தில் இலக்கணமாக பாடுவதில் வல்லவர், கலியாணத்திற்கு பிறகு டெல்லி சென்றுவிட்டதால் தமிழ்நாட்டில் ஸ்தாபித்துகொள்ளவில்லை. ஆனால் டெல்லி ஆலிந்தியா ரேடியோவில் பிரபலமாய் இருந்தார் என்று நண்பர் பேசிக்கொண்டிருந்தார்.
கர்நாடக இசை சாகரத்தில் திளைத்து ஏதேதோ நிர்பந்தங்களில் என்போன்ற பேண்ட் போட்ட கத்துகுட்டிகளின் கேள்விஞானத்தில் கரைபடாத, சிறைபடாத குடவிளக்காய் மிதந்துகொண்டிருப்பவர்கள் அனந்தலக்ஷ்மி போல் இன்னும் எத்தனை பேர்களோ. அறைவேக்காட்டு வியாபார கச்சேரிகளில் RTP பாடினாலே “ஒஹ், ஃபுல் ஹெவி மேட்டர் யு நொ” என்று தியாகராஜருக்கு பேஸ்பால் கேப்போட்டு நுனிநாக்கு ஆங்கிலத்தில் மாருதிகாரில் வீடுவரை சிலாகித்துகொண்டுவரும் என்னை குடத்தினுள் இருந்தபடியே முடிந்தால் மன்னிப்பார்களாக.







