வலைப்பூ, வலைமொட்டு, வலைபிட்டு என தமிழ்-இணையத்தில் வருடாந்திரமாக எழுதப்படும் டாப் டென் சம்பிரதாய குறுங்கட்டுரைகளில் நிச்சயம் இருப்பது “புதுவருடத்தில் என்னவெல்லாம் சாதிப்பது” (வருட முடிவில் என்னவெல்லாம் கோட்டைவிட்டேன் என்று பட்டியலிடுவது இதன் மாறுவேடமே). அடுத்து, அவ்வருட புத்தகக் காட்சி சென்றுவந்ததின் அனுபவப்பகிர்வு.
2012 பு.காட்சியகத்திற்கு சென்றேன், சுழன்றேன், தலைவலியுடன் திரும்பினேன். உத்திரவாதமாக நொடிக்கொருதரம் காற்றை மூக்கிலிருந்து கார்பண்டைஆக்ஸைடாய் வெளியேற்றும் சகஜனசாகரத்தினூடே, வெள்ளைவேட்டிசூழ் வெள்ளாவியாம் பெரிய சைஸ் அஞ்சனப்பெட்டியில் பனுவலைப்போற்றும் சிற்றெறும்பென நான்கைந்து மணிநேரம் உலாவியதில், தலைவலி.
கட்டுரையின் தலைப்பில் “புத்தகங்கள்” என்று தனிப்படுத்திக் குறிப்பிடுவதின் காரணம், டிக்கெட், கார கடலை, டி-ஷர்ட் (இயல் இசை ஆடை படிக்கவும்), டீ, கொடுத்த காசிற்கு மிச்சம், மேல்மூச்சு, கீழ்மூச்சு, பெருமூச்சு என்று புத்தகம் தவிர பு.காட்சியில் ஏகத்திற்கு வாங்கியிருக்கிறேன். இங்கு வாங்கிய புத்தகங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியலுக்கு செல்லுமுன், இவை ஏதோ பேயோனின் வேண்டுகோளுக்கிணங்கி நான் வழங்கும் “வாங்கிய புத்தகங்களின்” (கவனிக்கவும், ‘படித்த’ இல்லை) பட்டியல் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். பேயோனுக்கு பட்டியல், புத்தகங்களுக்கு பதில், அவருக்கு பிடித்தமான லத்தீன் அமெரிக்க அல்லது புனைவிற்கு புலிட்ஸர் வெல்லும் புலம்பெயர்ந்த புருட எழுத்தாளர்கள் சிலரையே அவர்களது சாமக்கிரியைகளுடன் வி.பி.பி.யில் அனுப்பிவைப்பதாக உத்தேசம்.
எதற்கிந்த பட்டியல் பதிவென்றால், 2008இல் இவ்வகை அனுபவப் பரவசத்தை பகிர்ந்தது. இவ்வாண்டிற்கான பு.காட்சி சார்ந்தவைகளை இணையத்தில் தேடி, அதில் என் 2008 புத்தகப் பட்டியல் பதிவை அடைந்து படித்து, “இன்னமும் நீ இவ்வகை புத்தகங்களையே வாங்குகிறாயா” என்று ஒரிருவர் காலரைப் பிடித்ததால், ஒரு தன்னிலை விளக்கமாய் இப்பட்டியல் பதிவு. அட்லீஸ்ட் இங்கு குறிப்பிடும் 2012 புத்தகங்களுக்காவது இனி காலர் பிடிக்கப்படட்டுமே.
இனி…
***
புத்தகப் பட்டியல் (புத்தகம், எழுதியவர், வகை, பதிப்பாளர், என்கிற வரிசையில்)
நாஞ்சில் நாடன் எழுதியவை
- பனுவலை போற்றுதும் – கட்டுரைகள் – தமிழினி.
சொல்வனத்தில் வெளிவருகையிலேயே படித்தது; “கிண்டிலில்” கூட பெரிய எழுத்துருவில் பி.டி.எஃப். கோப்பாய் அடக்கியுள்ளேன்… இருந்தாலும் புத்தகவடிவில்…
- காவலன் காவான் எனின் –கட்டுரைகள் – தமிழினி.
- நதியின் பிழையன்று நறும்புனல் இன்பம் – கட்டுரைகள் – தமிழினி.
- சூடிய பூ சூடற்க – சிறுகதைகள் – தமிழினி.
- தீதும் நன்றும் – கட்டுரைகள் – விகடன்.
விகடனை இன்னமும் புரட்டுவதே இவ்வகை எழுத்தையும் காண்பதால்தானே. புத்தக வடிவில் மீண்டும் ஒருமுறை குமரியில் தொடங்குவோமே…
- பனுவலை போற்றுதும் – கட்டுரைகள் – தமிழினி.
ஆம், அடுத்த நாள், இரண்டாவது முறையாக வாங்கியது. எழுதியவர் கையொப்பமிடுவதற்காக. தமிழுலகில் நான் விரும்பி வாங்கிய முதல் (கடைசியுமான?) ஆட்டோகிராஃப்.
கண்டதும் அவரே அடையாளங்கண்டு முறுவலிக்க, நான் சந்தேகமாய் என்னை அறிமுகிக்க முயல, “தெரியுங்க…” என்று என்னை அவர் மகிழ்த்தி நெகிழ்த்த… உடனிருந்த இருவர், அவர் மூலம் என்னை அடையாளப்படுத்திக்கொண்டு, நான் எழுதுவதை தொடர்ந்து வாசிப்பதாய் அளவளாவ… ஒரே காரணம், நாங்கள் அனைவரும் இணைய-எழுத்தில் சந்திக்குமிடம், சொல்வனம். தன்யனானேன்.
மற்ற எழுத்தாளர்கள்.
- பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் – அரவிந்தன் நீலகண்டன் – கிழக்கு.
முதல் நாள் கிடைக்காமல், அடுத்த நாள் சுடச்சுட வாங்கியது. கம்யூனிஸத்தின் வளர்ச்சி, சிதைவு என வரலாற்றை நன்றாக தொகுத்துள்ளார். முன் பகுதிகளில் வரும் விஷயங்கள் கார்ல் மாக்ஸ், ருஷ்ய புரட்சி, லெனின், ஸ்டாலின், NKVD, KGB, பனிப்போர் என்று ஏற்கனவே ஒரளவிற்கு எனக்கு அறிமுகமிருந்தது (என்பது தொன்னூறுகளில் ருஷ்யாவில் நிகழ்ந்த மாற்றங்களின் விளைவுகளை நேரடியாக சந்தித்த ருஷ்ய நண்பர் வாயிலாக). என்றாலும், உலகில் பல நாடுகளில் சமகாலத்தில் கம்யூனிஸம் எவ்வகையில் வளர்ந்து உருமாறியது என்பதை தொகுப்பாய் படிக்கையில் ஏன் அறச்சீற்றமுள்ள ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஏதோ ஒருகட்டத்திலாவது கம்யூனிஸ எண்ணங்களினால் வசீகரிக்கப்பட்டு, தொட்டுத், துலங்கி, வெளிவருகிறான் என்பது உறுதிபடுகிறது. இறுதி காண்டத்தில், இன்று கம்யூனிஸத்தின் கோட்பாடுகளெல்லாம் பிழன்று, தகர்ந்து, “மிச்சமிருப்பது அறச்சீற்றம் மட்டுமே” போன்ற கட்டுடைப்புகளையும் முன்வைத்து, கம்யூனிஸத்தின் மீது நேரு, அம்பேத்கார் போன்றோருக்கு இருந்த எண்ணங்களையும் விளக்கி, அதன்மூலமே என்னத்தான் அரசியல் நிலைப்பாடுகளில் கருத்து வேற்றுமையிருந்தாலும், நாட்டின் ஒற்றுமை என்று வருகையில் தீர்க்கதரிசியாக நாட்டுத் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தழைத்து, தேசியத்தையே அதன் சுபிட்சத்தையே முன்னிருத்தவேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பது எனக்கு பிடித்திருந்தது.
தமிழ் இந்துவில் ஜடாயு எழுதியுள்ள இப்புத்தகத்தின் விமர்சனம்.
(பின் சேர்க்கை) இப்புத்தகம் பாடம் என்றால், நாண்டீட்டெய்ல் போல படிக்க வேண்டியது அடுத்து வருவது…
- விலங்குப் பண்ணை – ஜியார்ஜ் ஆர்வெல் — தமிழாக்கம் பி. வி. இரமசுவாமி — கதையல்ல நிஜம்? — கிழக்கு
ஆர்வெல் எழுதிய அனிமல் ஃபார்ம்-மின் புதிய தமிழாக்கம். செய்திருப்பவர் பி.வி.இராமசுவாமி. சுமார் இருபத்தியைந்து வருடம் முன் ஒரளவு உட்கருத்து கேள்விப்பட்டு அறிந்து, ஆர்வெல்லின் புத்தகத்தை தேடிப்பிடித்து ஜெராக்ஸ் காப்பியில் ஏற்கனவே இருமுறை வாசித்திருக்கிறேன். இன்றைக்கு சுலபமாக “கிண்டில்” வடிவம் இணையத்தில் கிடைக்கிறது. என்றாலும், திறமையான மொழியாக்கத்தினால், ஒரளவு சரளமான தமிழில் வாசிக்கையில் மொழி முட்டுக்கட்டைகளிடாமல் பாலமாகி கருத்துகள் ஒரிஜினல் சாறுடன் நம்மை அடைகிறது.
இப்புத்தகத்தை மேலும் விவரமாக சொக்கனும் அறிமுகம் செய்திருக்கிறார்.
மொழியாக்கம் ஒரிஜினலை விட அதிக பக்கங்களோ (அதிக வார்த்தைகளா)? பத்ரியின் மொழிபெயர்ப்புகள் பதிவை உற்றுவாசிக்கையில், தமிழ்மொழியாக்கம் திறம்படவேண்டின் இப்படி ஆகும் என்பது பொதுக் கருத்தா?
உடையும் இந்தியா – ராஜிவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன் – கிழக்கு.
ஆங்கிலத்திலா தமிழிலா என்று டிபேட்டிவிட்டு தமிழாக்கமும் அரவிந்தரே செய்துள்ளதால், இரண்டு மொழிகளிலும் வாங்கியது.
தற்சமயம் விமர்சன கருத்து ஏதுமில்லை. சான்றேடுகளும் பின்குறிப்புகளுமே புத்தகத்தின் உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதம். இவற்றை முதலில் இணையத்தில் அனைவரும் அணுகுமாறு இலவசமாய் எங்காவது (கிழக்கு பதிப்பகத்தின் வெப்ஸைட்டிலேயே) ஏற்றிவிட்டு, மினி எடிஷனாய் மறுபதிப்பு செய்தால், புத்தக கனமும் விலையும் குறையும். எழுதியவர்களின் உழைப்பு, தமிழில் படிக்கவிழைவோரில் மேலும் பலரை சென்றடையலாம்.
- தமிழருவி – தமிழருவி மணியன் – கட்டுரைகள் – விகடன்.
அப்பா, பெரியப்பா, ஒண்ணுவிட்ட சித்தப்பா, என்று உறவினர் பலரின் இன்றைய ஆதர்ச அரசியல் விமர்சகர் (அன்றையிலிருந்து, அஸுஷுவல், சோ). வீக்கெண்டில் கூடுகையில், இவரின் அவ்வாரத்தைய விகடன் கட்டுரையிலிருந்து மேற்கோளிட்டு ரகளை பரப்புவார்கள். எனக்கு ஓரளவே புரியும். அதான், படித்துப்பார்த்துவிடுவோம் என்று வாங்கியது.
மூங்கில் மூச்சு – சுகா – கட்டுரைகள், விகடன்.- தாயார் சந்நிதி – சுகா – கட்டுரைகள், கிழக்கு.
வெகுநாட்களாய் படிக்கவிழைந்தது; சமீபத்தில் நேரில் சந்தித்தபோது ஞாபகமாய் விசாரித்தார்; இதற்குமேல் ஒத்திப்போட்டால் அரும்பும் நட்பிற்கு ஒவ்வாது.
- ஆனந்த விகடன் காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை – விகடன்.
என் பிறப்பிற்கு முன்பிருந்தது தமிழின் பொற்காலம் என்கிற மாயையில் அமிழ்ந்து மீண்டெழ…
- வந்தார்கள், வென்றார்கள் – மதன் – விகடன்.
முதல் காப்பி தொலைந்துவிட்டது (வட்டார வழக்கில், சுட்டுகினாங்கோ).
- மாலதி, ஸ்ரீமான் சுதர்ஸனம் – தேவன் – கிழக்கு.
இரண்டும் தேவனில் இதுவரை வாங்காமல் விட்டிருந்தவை.
- சிரிக்காத மனமும் சிரிக்கும் – பாக்கியம் ராமசாமி – நகைச்சுவை கட்டுரைகள் – வானதி.
நகைச்சுவை யார் எழுதினாலும் படிப்பது; பாக்கியம் எழுதினால் பாக்கியமே.
- கமலா கல்யாண வைபோகமே – நகைச்சுவை கட்டுரைகள் – அகஸ்தியன் (கடுகு) – விகடன்.
முன்னுரையில் அகஸ்தியன், தன்னை ஈர்த்தவராக வில்லியம் ஹாஸ்லிட் அப்ஸன்-ஐ குறிப்பிடுகிறார் (அலெக்ஸண்டர் பாட்ஸ் எனும் டிராக்டர் விற்பவர் பற்றி நூற்றுக்கணக்கான நகைச்சுவை கதைகள் எழுதியுள்ளார் — குட் ரீட்ஸ் பக்கம்). ஆனாலும் மேலிருக்கும் மூன்றுமே அயர்வான தினங்களில் தூங்கும்முன் அமைதிக்கு ஏற்ற தமிழின் பி.ஜி.வுட்ஹௌஸ் வகை மென்நகை பரவலாக கைகூடும் எழுத்தே.
- விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – நாவல், கவிதா.
வெகுநாட்களாக படிக்கவிழைந்தது; முப்பெரும் சமயசித்தாந்தங்களுக்கு முன்னுள்ள தமிழுலகம் எப்படித்தான் இருக்கும்…அனுபவித்திடுவோமே.
- சங்கச் சித்திரங்கள் – ஜெயமோகன் – கட்டுரைகள், தமிழினி.
டிசெம்பர் 2011 தமிழ்ப்பாரம்பர்ய கச்சேரியில் இவரது குறுந்தொகை கவிதைகளின் அறிமுக உரை கேட்ட தாக்கத்தில் வாங்கியது.
- நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் – நாவல் – தமிழினி.
தன் சொல்வனம் கட்டுரையில் நாஞ்சில் நாடன் பரிந்துரைத்ததில் வாங்கியது.
- அன்பின் வழியது உயிர் நிழல் – பாதசாரி – கட்டுரைகள், தமிழினி.
புரட்டுகையில் கருத்தும், நகைச்சுவையும் கவர்ந்ததால்.
ஒரு குடும்பத்தின் கதை – அ. கா. பெருமாள் – தமிழினி.- செவக்காட்டுச் சித்திரங்கள் – வே. இராமசுவாமி – கதைகள் – விகடன்.
- கதை கேளு கதை கேளு – நாட்டுப்புற, வட்டார கதைகள் – சிறுகுடி பார்வதி தண்டபாணி – விகடன்.
புரட்டுகையில் ஈர்த்ததால், இவைகளை வாங்கியுள்ளேன்.
- சிறிது வெளிச்சம் – கட்டுரைகள் – எஸ். ராமகிருஷ்ணன் – விகடன்.
- அகம் புறம் – கட்டுரைகள் – வண்ணதாசன் – விகடன்.
இதுவரை இவர்களிருவரையுமே விரிவாக படித்ததில்லை. கட்டுரைகளில் தொடங்குவது கற்பனைகளை விடுத்த அறிமுகமாகும் என்பதால், இந்நூல்களிலிருந்து…
எந்த தில்லில் வாங்கியிருக்கிறேன்? இப்படி ஏற்கனவே “இராமபிரானைக் கற்போம்” என்கிற தலைப்பில் ஸ்ரீ பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ கோபால தேசிக மஹாதேசிகன் மெகா ஐந்து பாகமாய் வால்மீகி, கம்பர், துளசிதாஸர், துணைக்கு ஆழ்வார், வள்ளுவர் என திருஷ்டாந்தம் அருளியுள்ளதில், முதல் பாகத்தை ஒரளவு உள்வாங்க முயல்வதால் ஏற்பட்டுள்ள இராமாயணத்தின் மீதான என் பொருந்தாக் காதலில்…
- நல்ல தமிழில் எழுதவேண்டுமா – அ. கி. பரந்தாமனார் – பாரி.
மனதிற்கு இதமாய் எழுதும் எவரோ, ஏதோ கட்டுரையில், என்றோ குறிப்பிட்ட புத்தகம். பழனியப்பா (நீங்கதான் ஃபோன் போட்டீங்களா?), வானதி (நல்ல புக்கு சார் அது; இங்க இல்ல பாரிக்கிட்ட கேட்டுப்பாருங்க), வாயிலாக பாரியை அடைந்து கொடை கொடுத்து, கவி பெற்றது. ஒருநாள் நானும் நல்ல தமிழில் எழுதிடுவேனோ…
- கடல் புறா (முன்னுரை), கன்னிமாடம், ஜல தீபம், ராஜ முத்திரை, மன்னன் மகள் – சாண்டில்யன் – வானதி.
“ஹிஸ்டோரிக்கல் சாக்கில் எரோட்டிக்காவா, உன்ன திருத்த முடியாதுரா” என்று இல்லாள் இரைந்தாலும், “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” பரிந்துரைத்ததால் சத்தியமாய் இப்புத்தகங்களின் இலக்கிய மதிப்பீடுகளை சரிபார்க்கவே வாங்கினேன்.
இல்லைப் பாட்டியும் இந்தாப் பாட்டியும், கொல்லிமலைக் குள்ளன், சூரப்புலி போன்ற குழந்தைகளுக்காக அவர் எழுதிய கதைகளின் தொகுப்பு (பாலமித்ரா, ரத்தினபாலா படித்த காலங்களில், நான் படிக்காதது). எட்டு வயது மகள் உடனே படிக்க விழைந்து, தினந்தோரும்-ன்னா, அதிகாலையில்-ன்னா, முள்எலி-ன்னா, இரை-ன்னா என்று அவ்வப்போது கேட்பதையெல்லாம், டெய்லி, யெர்லிமார்னிங், பார்க்குபைன், ப்ரே என்று வெறுமனே நான் ஆங்கிலப்படுத்தியதுமே புரிந்துகொண்டு கதையைத் தொடர்வது, சர்ரியலான வெறுப்பு.
(மகள் சென்ற ஆண்டில் வாசித்த புத்தகங்களின் பட்டியலை அவள் வலைப்பூவில் பாருங்கள். வெறுப்பிற்கான காரணம் புரியும்)
***
மெட்ராஸின் எதிர் கோடிகளுக்கிடையிலான குலுக்கல்களில், ஆட்டோவிற்கு அழுத (இரண்டு x ஐநூறு) ரூபாய்க்கு ஒரு தமிழ் எழுத்தாளரின் மொத்த படைப்புகளையும் வாங்கியிருக்கலாமே என்கையில் நெருடுகிறது. இதைப் படித்துவிட்டு ஆட்டோக்காரர் அடுத்தவருடத்தில் இதே சவாரியின் விலையை குறைக்கமாட்டார். செலவு விகிதங்களை சரிகட்ட, பதிப்பகத்தார் புத்தகங்களை விலையேற்றாமல் இருக்கவேண்டும்.
ஆனாலும், அவளுக்கு புத்தகக் காட்சியில் வாங்கினேன் என்பதால் அரைமணியாகினும் ஒரே அமர்வில் தமிழில் படித்து “அப்பா, ஐ ஹவ் ஃபினிஷ்ட் எ ஸ்டோரி இன் தமிழ்” என்று மகள் உரைக்கையில் நிறைகிறது.




