சிறுகதை – கதவை திறந்து பார்த்தால்

ப்படியும் இன்று பெட்டியைத் திறந்து பார்த்துவிடவேண்டும்.

என்னத்தான் இருக்கும் உள்ளே? எப்படித்தான் இருக்கும் அவ்வுலகம்?

இருட்டாய் இருக்கும், கண் சரியாய் தெரியாது, துழாவ வேண்டும். இருப்பது ஆபத்து என்று உணர்ந்தால் பெட்டியை விட்டு விலகி ஓடிவிடு. எத்திசை என்பது முக்கியமில்லை. நெடிய கால்கள் கொடுக்கும் வேகத்தில் ஓடிவிடு. பெரிய மீசை பத்திரம்.

பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே என் குலத்தாருக்கே பெரிய மீசை. அமேரிக்கா, ஆப்பிரிக்கா என கண்டமெட்டிலும் வேரின்றி காலூன்றினாலும் மீசையைக் களையோம். ஸ்டார்பக்ஸில் டாலர் காபியை முகர்கையிலும், நடுத்தரவர்க ஜீன்களுக்கென்றே பிரத்யேக மெக்ஸிகன் டாக்கோ பெல்லின் என்சிலாடாக்களை வாயெல்லாம் சீஸ் வழிய புசிக்கையிலும், இடர்படும் மீசையை மழியோம். என் சொந்த கிராமத்திலும் இவ்வாறே. தேவர் மகனென்ன, அத்தைக்கே மீசை முளைக்கும் எங்கள் குலத்தில், தேவரின் தெய்வத்திற்கும் மீசை உண்டு.

நாங்கள் மீசையை சற்றே முறுக்கி, மூக்கை துருத்தி, மேல்பார்வைபார்த்தால் அநேகர் அம்பேல். வுடு ஜூட், அலறி ஒளிவார். பயம்.

பயம். உணர்ந்து சலித்த மற்றொரு உணர்ச்சி. காடென்றும் வீடென்றும் கட்டிட வெற்றிடமென்றும் விரியும் எங்களுரில் அநேக பெண்களுக்கு என்னிடம் பயம். என் குறுகுறு மீசையில் பயம். குறுக்கும்நெடுக்குமாய் அலைபாயும் என் சுறுசுறுப்பில் பயம். அங்கம் அவிழ ஆடையணிந்துள்ள அணங்கையின் அழகை அள்ளிவிடுவேனோ. கண்ணாடி பீரொவின்முன் களைந்து களைபெறும் காரிகையை கண்ணடித்திடுவேனோ. இல்லை கன்னத்தில் என்னடி காயம் எனுமளவில் கடித்து ஏதேனும் மாயம் செய்திடுவேனோ.

ஒட்டுமொத்த பெண்குலத்திற்கே சப்ஜாடாய் என்னிடம் எதற்கோ பயம்.

தாத்தா இருந்தவரை லேசாய் உணர்ந்தது, இன்று அவர் போனபிறகு உறைக்கிறது. உறைகிறது.

பயம். அது பசியோடு சேர்ந்தியங்கும் என் பழங்குடிமையான உணர்வன்றோ. இருத்தலின் நிரந்தரத்திற்கு இறை தேடும், என் முடிவிலியின் தொடர்சிக்கு துணை தேடும், நான் என்பதே நாங்களில் ஒருவன் என முழங்குவதற்கு சூழலில் வாசமதனைத் தெளித்தோடும் சாதாரண எனக்கும் அது உள்ளுணர்வில் உறைந்ததன்றோ.

தாத்தாவிடம் பாடம்கேட்டுத்தான் பயம். அன்றிலிருந்துதான் அவ்வுணர்வு பயம். பளீரென்ற வெளிச்சத்தை கண்டால் ஏற்படுவது. அசூயையும் ஆர்வமும் ஆச்சர்யமும் பரிதவிப்பும் கலந்த பயம். கடவுளோ கந்தசாமிபிள்ளையோ என்று இனம்காணா உணர்வு.

ஆனாலும் இந்தப் பெண்கள். தொட்டால் சிணுங்கி கொலையும் செய்யத்துணியும் இவ்வகை பெண்களைக்கண்டாலே பயம்.

என்ன, பயத்தில் சிலருக்கு நாக்கு வரளும். எனக்கு அவ்வாறு நிகழாது.

பெட்டியா, பெண்ணா.

ஒன்றினால் மற்றொன்று.

சொல்கிறேன்.

*

நான் ஒன்றும் அப்பிராணி இல்லைதான். என் வயதுக்கேற்ற கிளரொளி இளமை மிளிர்ந்தாலும், ஊர் பெண்களிடம் சர்வ ஜாக்கிரதை. காரணம் இருக்கிறது.

அழகர்மலை திருவிழாவில் கோவில் கூடத்தில் மோகனாம்பா ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்த ஒருத்தியின் மேலாக்கு விலகலை வெளிச்சமா இருட்டா எனத் தெரியாமல் பக்கத்து தூணுடன் உரசியபடியிருந்த என் தாத்தா கண்டு, மருண்டு, திரண்டு… மங்கையின் மல்லிகையை முகரத்தான் குனிந்தாராம்; பெண்மையின் மயக்கத்தில், நெய்யிட்ட நெருப்பாகி, மனம் செயலற்ற பயமாகி, மையிட்ட நங்கையின் பொய்யிட்ட மனதைத் தொட்டு…

வுடுவாளா பாதகி; காலில் போட்டிருந்ததை கழட்டி… கழனியில் கையிட்ட காமுகனை வழட்டி, அதிசிய குருதிகொட்ட, ஜனம் கைவிட்ட கேஸாகி…

கோவில்ல எப்படி தாத்தா செருப்பு என்று கேட்டால் பதில் சொல்லமாட்டார்.

இது ஆணுக்கு ஏற்படும் இயல்பான பெண் கவர்ச்சிடா; நா என்ன இப்ப கேள்விப்படராமாதிரியா செய்யறேன். வேறு குலமில்லையா, அதான் என்ன அவளுக்கு பிடிக்கல. பயம். ஆனா பாரு, அதே ஆட்டத்துல பக்கத்துல ஒருத்தன் ஒத்தரூவா காசு சைஸ்ல பொட்டு வச்சுகிட்டு முட்ட கண்ணோட லட்சணமா இருந்த ஒருத்திய தோள்ல தவில் வாசிச்சான். அவ என்ன செருப்பாலயா அடிச்சா. இத்தனைக்கும் பாக்க சகிக்கமாட்டான். ஏன்னா அவன் அவ குலம். பெண்ணோட சல்லாபம் இயல்பா அமையணும்டா. இவ்வளவு ஏன், அதே ஆட்டத்துல பக்கத்து தூணுக்கு பின்னாடி நின்னு, மோகனாம்பாவயே வச்சகண் வாங்காம… இத்தனைக்கும் அந்தாளுக்கு என்ன மாதிரி மீச கூட கிடையாது. பச், அத்த வுடு. ஏதோ அன்னிக்கி அவகிட்ட செருப்பால மரண அடி வாங்கினாலும், தல தப்பியது தம்பிரான் புண்ணியம்.

தாத்தா இதையெல்லாம் வெளிப்படையா சொல்வாரா என்ன. எனக்கே பேச்சு வராது. கிழத்துக்கு எங்கே.

தாத்தா பேச்சிழந்தது அப்பாவின் மரணத்தில். இப்படித்தான் தோன்றுகிறது. அதற்கு முன்னால் அவர் பேசியிருந்தால் குழந்தையான நான் உணர்ந்திருக்கமாட்டேனோ.

பசியில் பத்தும் பறந்திட்ட ஒரு காலத்தில், உணவைத் திருடிய குற்றத்திற்காக என் அப்பாவை பூட்ஸ் காலால் மிதித்தே கொன்றிருக்கிறார்கள் அரக்கர்கள். பிறகு வந்த கலவரத்தில் உற்றார் உறவினர் என்று பல குடும்பங்களை புகை ஆட்கொண்டுவிட்டது. மரணப் புகை.

அப்போ எனக்கு சிறுவயசு. இல்லையெனில் நீண்ட என் மீசையை முறுக்கி தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றிருப்பேன். இப்பவும்தான். எப்பவாது ஜெகத்தினை அழிக்கனும். அதற்காகத்தான் குறுக்கும் நெடுக்குமாய் இப்படி ஒடுகிறேனோ.

அதற்கு முன் பெட்டியைத் திறக்கவேண்டும்.

தாத்தாவினால்தான் பெட்டியை அறிந்தேன். அவருக்காகத்தான் இன்று அதை எப்படியாவது திறந்துவிடப்போகிறேன். செத்தாலும் பரவாயில்லை.

சொல்கிறேன்.

*

அப்பா, குடும்பம், உறவினர் இழந்து, மிச்சம் மீதி இருந்தவர் இடம்பெயர்ந்து காலப்போக்கில் கிடைத்த இடங்களில் தங்கிவிட்டோம். தாத்தாவும் நானும், வேறு சிலரும் இப்போது இங்கே.

இங்கு ஊரின் மேட்டுக்குடி மாளிகையில் அவரது வேலை. அங்கேயே வாசம். சிறைவாசம். வேலையும் அதற்கேற்றார்போல திருட்டு வேலை. அவ்வப்போது இருட்டில் திருட்டில் எனக்கும் பங்கு உண்டு. பிழைக்க வேணுமே. பிழைப்பு வேணுமே. உங்களது எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானமாயிருக்கலாம். தாத்தாவுக்கும் எனக்கும் வயிறே பிரதானம். எங்கள் குலமே பஞ்சத்தில் அடிபட்ட குலம். பசிதான் உயிருடன் இருப்பதை உணர்த்தும்.

அப்பா செத்தாலும் புத்தி வராது.

அதானே, செத்தபிறகு எப்படி புத்தி?

இத்தனையிலும் தாத்தா வாஞ்சையாக என்னை வளர்த்தவர். அவரது பாதி பேச்சிலும் மீதி ஏச்சிலும், மீசை துடிதுடித்ததிலும் குலத்தின் உண்மை இருக்கும். உங்களுக்கு எப்படியோ, எங்கள் குலத்திற்கே இவ்வகை மரபுவழி ஞானம் அதிகம். லேசில் விடமுடியாது. வழிவழியாக தொடு உணர்வின் சங்கேதத்தில் இவ்வகை நிரூபணமற்ற ஞாபகங்கள்தான் எத்தனை.

இளவயதின் திமிரடங்க இரவுகளில் என் முக்கிய பொழுதுபோக்கு, நண்பர்களுடன் விளையாட்டு. காட்டில் ஓட்டம். மரம், செடி, பரம், கரம், புதர், புத்தர் என்று கண் மண் தெரியாத சடுகுடு ஓட்டம். ஆனந்தத்திற்காக ஆடும் களியாட்டம். காலத்தில் தொடங்கி அகாலத்தில் ஓய்கையில் மூச்சே நின்றுவிடுமென்ற களிவெறி மிச்சம்.

அன்றும் அப்படித்தான், விளையாடி பின், வாசனையுடன் வீடுநோக்கிப் பயணித்தேன். செரித்த உணவின் கழிவுதான் என் வாசனை என்றில்லை. குவித்த புருவமும் கோவைச்செவ்வாயுமாய் எனக்கென்றும் பிறந்திருப்பவளுக்காக காற்றினில் விரவும் என் மகரந்தமும் வாசனைதான்.

குற்றுயிராய், அதிசய குருதிசொட்ட, கிடந்தார் தாத்தா. அலறிவிட்டேன். வழக்கம்போல சப்தம் வரவில்லை.

தாத்தாவிற்கு கேட்டிருக்காது. செவிடு.

ஏதேதோ சொன்னார்; சொல்ல நினைத்தார். உடைந்த கால்களை இழுத்து இழுத்து தவழ்ந்தார். ஹிஸ்ஸ்ஸ் என்று ஹீனமாய் ஏதோ முனகினார். மாளிகை. பெட்டி. திற. உணவு. வாசனை. வாழ்வு. சுவர்கம்.

அமைதியானார்.

வழக்கமோ இயற்கையின் பழக்கமோ, வீட்டில் பிணத்தை வைத்திருக்கவிடுவதில்லை. அணிவரிசையாய் வந்தவர்கள், கைகொடுத்து தூக்கி தோளின்மீதுவைத்துக்கொண்டு, அலைபாய்ந்து, தடுமாறி, எடுத்துச்சென்றனர். யாரிவர்கள். நிச்சயம் எங்கள் குலமில்லை. மீசையில்லையே. ஆனால் எங்களைப்போல் பஞ்சத்தில் அடிபட்டவர்களே. அவர்களுக்கும் வயிறே பிரதானம். எனக்கு உதவுபவர்களை கேட்கவா முடியும், மேல் ஜாதியா கீழ் ஜாதியா என்று.

தாத்தாவின் சபலபுத்தியால்தான் மாளிகையிலிருந்து அடித்துத் தூக்கியெறியப்பட்டிருக்கிறார். பெண் விவகாரம்தான். அழகர்மலை விஷயம் உண்மைதான் போலுள்ளது. போஷித்த மாளிகையின் மகராசியை, பூஜையில் கவிழ்ந்த வாளிப்பை மேலே விழுந்து… மாபாதக செயலாம். எனக்கு அதற்குமேல் தெரிந்துகொள்ள நாட்டமில்லை. பயம். செய்துபார்க்கத்துணிந்திடுவோமொ என்ற பயம்.

ஆனாலும் தாத்தாவிடம் கற்றது பயம் மட்டுமில்லையே. காலையில் மாலையில், இருட்டில், கண் கூசும் கும்மிருட்டில், வெளியுலகை உணர்தியவர் அவர்தான். உணவு இறைச்சியை, இனப் புணர்சியை, அரவமென ஹிஸ்ஸிடுவதும் பறவையென க்ரீசிடுவதும் இன்னும் எத்தனை. தாத்தாவிடம் என் கனவுகளை செரித்திருக்கிறேன்.

என்னத்தான் பெண் பித்தர் என்றாலும் தாத்தா என் சித்தர்.

தாத்தாவிற்காக அவர் கண்ட அந்தப் பெட்டியைத் திறந்துவிடவேண்டும்.

*

பெட்டி இருக்கும் இடத்திற்கு அருகில்தான் நாங்கள் காலைக்கடன்களுக்காக ஒதுங்குவோம். அப்படி ஒருநாள்தான் எதிர்ச்சையாக கண்டோம் பெட்டி இருக்கும் இடத்திற்கான வழியை.

குகைப்பாதை நிலத்தடியில் இட்டுச்சென்றது எங்களை பெட்டிக்கு.

சற்று ஒதுங்கினாற்போல், புதர்களுக்கிடையே புற்று. பாம்புகள் இருக்கும் என்று தெரியும். எம்மை ஒன்றும் செய்யாது என்றும் தெரியும். நீங்கள் எப்படியோ, தேவையென்றால் எங்களாலும் பாம்புகளைப்போல் ஹிஸ்ஸ்ஸ் என்று சப்தமிடமுடியும். குலத்தின் வம்சாவளி அறிவு. ஆனால் பாம்புகளை கேலிசெய்வதில்லை. பயம். பரஸ்பர பயம். அருவருப்பு. துவேஷம். யுகாந்திரங்களாக எங்களுக்குள் பந்தம். இயற்கையின் நியதி.

எம்மில் சிலர் ஒப்புக்கொள்வதில்லை. பசித்தால் புசி. கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு சாப்பிடவேண்டியதுதான். செவிடுகளுக்கு ஒரே பசி வயிற்றில்தான். உறுபசி. எது உணவு என்று பார்க்கக்கூடாது. ஆகாரத்தில் மீனமேஷம் பார்த்தால் பிறகு வம்சாவளியே அருகிவிடும். உயிரினம் வாழ்வதற்கு உண்பது இயற்கையின் நியதியே. இப்படியும் எங்கள் ஆன்றோர் வாக்கு.

இப்பொதெல்லாம் செத்த பாம்புகளை மட்டும் உண்கிறோம். யமன்தான் வேறு உருவில் வருகிறானே.

இப்படி பாம்புகளை தேடித்தான் அன்று அப்புற்றைக் கண்டோம். புற்று இல்லை அது. பெரிய குகை. பலர் நுழையலாம். தலை இடிக்காமல்.

கூட்டம் கொடுக்கும் தைர்யத்தில் நுழைந்தோம். பாம்புகள் இல்லை. ஆனால் இடத்தை ஆராய்வதற்கு சிரமமிருக்கவில்லை.

எலி விசர்ஜனங்கள் கமழ்ந்து குமட்டும் வளைந்த குகைப்பாதையில் சுழன்று கை கால் பிடித்து, உருண்டு, படுத்து புரண்டு, மேலேறி வந்துவிட்டோம் பெட்டிக்கருகே.

மூடியற்ற பெட்டி. ஒரு ஓட்டையுமில்லை. சாவித்துவாரங்கள் இல்லை. வழுவழுவென தேக்குமரத்தால் ஆனது போலும். ஒருவித பழைய வாசனை. எனக்கு ரொம்பப் பிடிக்கும். நண்பர்களுக்கும்தான்.

மூடியிருந்ததை நெம்பித்திறக்கவேனும்.

பலர் கூடி, முயன்று, முட்டுகொடுத்து, க்ரீச்சிட்டு, பயத்தில் மலமிட்டு, வாசனை பரப்பி…

பெட்டியின் கதவு லேசாக உயர்ந்தது.

தலையை நுழைக்குமுன்…

பளிச் என்று சுற்றிலும் இருட்டு பீறிட்டது. அப்பிராந்தியமே இருளில் மூழ்கிவிட்டதுபோல். பார்வையை ஓர் இடத்தில் நிலைபெற கண் வலித்தது. பெட்டியின் கதவைப் பிடித்திருந்த என் கை நடுங்கியது. ஐயோ, நசுங்கிவிடும்போலிருக்கிறதே…

விடமாட்டேன். தாத்தாவுக்காக. அவர் காட்டிய சொர்க்கம் அது என்ன? சாவதற்குமுன் கண்ட சாகஸி யார்? இவ்வளவு தூரம் வந்தாயிற்று. உயிரே போனாலும் பரவாயில்லை. வாழ்வது ஒருமுறை. வீரனாய் வாழ்வோம். குலப் பெருமையென்ன செய்திடும் நிறக் கருமையென்ன செய்திடும்,

ஆறு கால்களையும் உந்தி, இறக்கைகளை குறுக்கி, என் நான்கு முதுகினால், வெள்ளை குருதி பிதுங்கி வழிய, பெட்டியின் கதவை நெட்டித் திறந்து…

 

ஊர்ப்பெரியவரின் தாழ்வார பூஜையறையின் தரையிலிருந்த எலி குடைந்த பழைய மரப்பெட்டியினுள் இருந்து, அதன் கதவிடுக்கில் வெளிவந்து, ஆதிக்க மனிதனின் மின்சார ஒளி உலகில் விக்கித்து விழுந்தது கரப்பான் பூச்சி.

*****

பண்புடன் இணைய இதழின் புத்தாண்டு மலருக்காக நண்பர் ஸ்ரீதர் நாராயணன் கேட்டுக்கொண்டதினால் எழுதிய மென்-விஞ்ஞான புனைவு | [கதை சுட்டி]

Print Friendly