ஏலியன்ஸ் மறைமுகத் தேடலும் எக்ஸோ கிரகங்களும்

நம் ஏலியன்ஸ் தேடலில் இரண்டு வகை; நேரடித் தேடல், மறைமுகத் தேடல். ரேடியோ வானியல் முறையில் ஏலியன்ஸ்களிடமிருந்து செய்தி சமிக்ஞைகளை தேடுவது நேரடித் தேடல். இவற்றை செட்டி (SETI) என்ன செய்கிறது என்று ஏற்கனவே அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளோம். மறைமுகத் தேடல் ஏன் எதற்கு எப்படி என்று அறிமுகப்படுத்திக்கொள்வோம். அதற்கு முதலில் நேரடித் தேடலின் ஒரு முக்கியமான தடுமாற்றத்தை புரிந்துகொள்ளவேண்டும்.

ரேடியோ சமிக்ஞை தேடலில் ஒரு சங்கடம் இருக்கிறது. உலகில் எந்த விஷயமும் ஒளியின் வேகத்தை விட அதிகமாக பிரயாணம் செய்யாது. இது பிரபஞ்சத்தில் எந்த ஓரத்திலும் செல்லுபடியாகும் அடிப்படை இயற்பியல் விதி. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தின் வழி இந்த கட்டுப்பாடு இருப்பதை அறிகிறோம். ரேடியோ அலைகளும் இந்த கட்டுப்பாட்டிற்குள்ளேயே. இதனால், உதாரணமாக, ஒரு முப்பது ஒளி வருட தூரத்திலிருக்கும் நட்சத்திரத்தின் அருகிலிருந்து ரேடியோ செய்தி வருகிறது என்றால், நாம் வாங்கும் அச்செய்தி பலகோடி முப்பது வருடங்களுக்கு முந்தையது. வளியில் பிரயாணம் செய்து வரவே முப்பது ஒளிவருடங்களாகிறது.

ஒரு ஒப்புவமைக்கு, சூரியனிலிருந்து புறப்படும் ஒளிக்கதிர் பூமியை அடைய சுமார் 8 நிமிடங்கள் பிடிக்கும். இதைப்போல் ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் ஒளி  பிராயணம் செய்தால் எவ்வளவு தூரத்தை கடந்திருக்கும்; அதைப்போல் முப்பது வருடம் ஒளி பிராயணம் செய்து வரும் தூரத்திலிருந்து சமிக்ஞை வருகிறது என்கிறோம்.

இதனால்,நேரடித்தேடலாய் ரேடியோ அலைவரிசைகளில் செய்திகள் சமிக்ஞைகள் என்று நாம் தேடுவது, நிச்சயமாக நமக்கு பலமில்லியன் வருடங்கள் முன்னரே பிறந்து வளர்ந்து முதிர்ந்த ஏலியன்ஸ் சமுதாயத்தையதே என்பதை உணரவேண்டும்.

இப்படி யோசிக்கையில் புரிவது நாம் உறையும் பால்வீதி காலக்ஸிகுள்ளேயே இருக்கும் வேறு ஏதோ ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கிரகத்தில் நம்மைப்போலவே பிரபஞ்சத்தில் இளமையாக இருக்கும் ஒரு ஏலியன்ஸ் சமுதாயத்தினர் நம்திசையைநோக்கியே அனுப்பியிருந்தாலும், அவர்களது ரேடியோ அலைவரிசை செய்தி இன்னும் பலகோடி வருடங்களுக்கு  நமக்குக் கிடைக்காது. உலகத்துடன் நாம் உயிருடனிருப்போமா என்பதே சந்தேகம்.

இந்தக்கருத்து வலுப்பெற்றதும், எப்படியும் நம்மைவிட முதிர்ந்த சமுதாயத்தினரையே தேடுகிறோம் என்றால், அவர்கள் அறிவும் தொழில்நுட்பமும் இந்நேரம் வளர்ந்து, ரேடியோ செய்திகள் எல்லாம் பழசாகிப்போய், வேறு வழிகளில் தொடர்புகொள்ள முயன்றுகொண்டிருந்தால் எனக்கேள்வி எழுகிறது. மேலும், தொழில்நுட்பரீதியாக நமக்கு பலகோடி வருடங்கள் முன்னரே வளர்ந்திருந்தால் அவர்களது தொழில்நுட்பம் நமக்குப் புரியுமா, ரேடியோ வானியல் வழிமுறையை விட்டு, வேறு எப்படித் தேடுவது? இங்குதான் செட்டி (SETI) புனர்ஜென்மம் எடுத்துள்ளது. மறைமுகத் தேடல்கள் என்கிற திசையில்.

சிலவற்றை விளக்குவோம். அறிவியலின் விளிம்பு விஷயங்கள் விரவியிருக்கும் விந்தையான தேடல் இது.

முதலில் எக்ஸோ கிரகங்கள்.

[2008இல் ருசுவாக்கப்பட்ட ஃபாமல்ஹாட் நட்சத்திரத்தை சுற்றும் இரண்டு எக்ஸோ கிரகங்கள் உபயம்: http://www.gemini.edu/node/11150 ]

நம் சூரிய குடும்பத்தில் தற்போது பூமி, முன்னர் செவ்வாய், வெள்ளி, ஏன் வியாழன், சனி இவைகளின் கோள்கள் எனச் சில இடங்கள் உயிர் வசிப்பதற்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது இல்லையா. அதுபோல சூரிய குடும்பத்தை தவிர்த்து, நம் ஆகாச கங்கை காலக்சியிலோ, அருகிலிருக்கும் காலக்சிகளிலோ வேறு நட்சத்திரத்தை சுற்றும் கிரகங்கள் உயிர் வசிப்பதற்கான சூழ்நிலையுடன் இருக்கலாமே என்று கணித்து அவ்வகை கிரகங்களை எக்ஸோ-கிரகங்கள் என்று விளிக்கிறர்கள்.

எக்ஸோ-கிரகங்களை வானியலாளர்கள் கண்டுகொள்ள மூன்று வழிகள் இருக்கிறது. டிரான்ஸிட், ரேடியல் மற்றும் நேரடி பார்வை முறைகள். டிரான்ஸிட் முறையை விளக்குவோம், ஏனெனில் இம்முறையை வைத்து சமீபத்தில் கண்டறிந்த கிரகமே Gleise 581c. இதை நோக்கித்தான் மெட்டி முறையில் 2009இல் ரேடியோ செய்தி அனுப்பியுள்ளோம்.

2009இல் டிரான்ஸிட் முறை வைத்து கண்டறிந்த மற்றொரு கிரகம் CoRoT Exo 7b என்பது. இதுவரை சூரிய மண்டலத்திற்கு வெளியே கண்டதிலேயே மிகச்சிறிய கிரகம் இதுதான் (பூமியை விட 1.8 மடங்கு பெரியது).

CoRoT-Exo-7b பெயர் காரணம் உண்டு. CoRoT என்பது ஐரோப்பியர்களால் 2006இல் ஏவப்பட்ட பூமியை சுற்றிவரும் ஒரு தொலைநோக்கி செயற்கைகோள். ஹப்பிள் (Hubble) தொலைநோக்கி போல. CoRoT என்பது Convection (வெப்பசலனம்), Rotation (சுழற்சி), Transit என்பதன் சுருக்கம். இந்த விஷயங்களை நட்சத்திரங்களிலும், (இருந்தால்) அதன் கிரகங்களிலும் தொலைநோக்கி ஆராய்ந்து செய்தி அனுப்புகிறது. Exo என்பது சூரியமண்டலத்திற்கு அப்பால் என்பதை குறிக்கிறது. 7b என்பதில், ஏழு மோனோசெரஸ் கூட்டத்தில் உள்ள நட்சத்திரத்தின் (நாம் வைத்த) எண். 7b, சுற்றும் கிரகத்திற்கு பெயர். மேலும் தகவல் http://smsc.cnes.fr/COROT/ மற்றும் http://en.wikipedia.org/wiki/COROT-Exo-7b வலைதளங்களில் இருக்கிறது.

நாம் தொலைநோக்கி வழியாக ஒரு நட்சத்திரத்தை பார்த்துக்கொண்டிருக்கையில் நமக்கு அது ஒரு பிரகாசத்துடன் தெரியும். நெடுஞ்சாலையில், இரவில் எதிரில் வரும் காரின் ஹெட்லைட் போல. இந்த நட்சத்திரத்தை ஒரு கிரகம் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றால், அது சுற்றும் நட்சத்திரத்தை காட்டிலும் அநேகமாக மிகச்சிறியதாக இருக்கும். நம் பூமி, சூரியனைப்போல. மேலும், நட்சத்திரத்தை சுற்றும் கிரகம் நமக்கும் நட்சத்திரத்திற்கும் நடுவே (நட்சத்திரத்திற்கு மிக அருகே) இயங்கிக்கொண்டிருக்கும் இல்லையா. அதனால் அது நட்சத்திரத்தை வலம் (அல்லது இடம்) வருகையில், நாம் தொலைநோக்கி வழியாக பார்க்கும் நட்சத்திரத்தின் பிரகாசத்தை தன் பாதையில் சற்று குறைத்துவிடும். எதிரில் வரும் காரின் ஹெட்லைட்டின் குறுக்காக அப்படி ஒரு சிலந்தி போனால் சற்று வெளிச்சம் குறைவது போல. அப்படி குறைந்த பிரகாசத்தின் அளவை நட்சத்திரத்தின் சரியான பிரகாசத்துடன் ஒப்பிட்டு, அதன் மூலம் ஒரு கிரகம், நட்சத்திரத்தை சுற்றுகிறது என்று அனுமானிப்பார்கள்.

அருகே உள்ள படத்தை பாருங்கள். புள்ளியாக கிரகம் இடமிருந்து வலமாக நட்சத்திரத்தை சுற்றுகையில் பிரகாசத்தை குறைப்பது விளங்கும்.


ஒரு நட்சத்திரத்தை பல நாட்கள், மாதங்கள் தொலைநோக்கியில் கவனிக்கையில், இப்படி பிரகாச குறைவு தொடர்ந்து மறுபடி மாறுபடி துள்ளிக்குதிக்கும் ஈசிஜி கிராஃப் போல ஏற்படுவதை வைத்து, நட்சத்திரத்தை சுற்றும் புதிய எக்ஸோ-கிரகத்தை அறிவார்கள். இதற்கு டிரான்ஸிட் (transit) கண்டுபிடிப்பு முறை என்று பெயர்.

கார் ஹெட்லைட் முன் சிலந்தி செல்கையில் எவ்வளவு கம்மியாக பிரகாச குறைவு ஏற்படுமோ, அவ்வளாவு கம்மியாகவே தொலைதூர நட்சத்திரத்தின் முன் அதற்கு அருகில் சுற்றும் கிரகம் செல்கையிலும் ஏற்படும். ஆனாலும் இந்த கம்மியான பிரகாச குறைவையே கண்டுகொள்ளும் வகையில் ஃபோட்டோமீட்டர்கள் பொருத்திய தொலைநோக்கிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

இவ்வகையில் நாஸா வடிவமைத்து 2010இல் பூமியைச்சுற்றுவருமாறு கெப்ளர் (Kepler spacecraft) தொலைநோக்கியை அனுப்பியுள்ளனர். இந்த தொலைநோக்கி இயங்குவதற்கான ஆற்றலை சூரிய ஒளியிலிருந்தே பெருகிறது. ஆனால், இதன் ஃபோட்டோமீட்டர்கள் மிக நுன்மையானவை. பல வருடங்களுக்கு சேர்ந்தார்ப்போல 100,000 நட்சத்திரங்களின் ஒளியின் பிராகச ஏற்ற இறக்கங்களை சரிபார்க்க வல்லதாம். நாஸா ஏம்ஸ் ஆராய்ச்சி மையம் இத்தகவலை கூறுகிறது. கெப்ளர் தொலைநோக்கி பற்றி மேலும் அறிய http://kepler.nasa.gov/ வலைதளம் உதவும். இதனால் இந்த ஃபோட்டோமீட்டரை அருகில் இருக்கும் நம் சூரியன் பக்கம் திருப்பாமல், நேர்த்தியாக சூரியனுக்கு வெளிப்புறம் திருப்பி எக்ஸோ கிரகங்களை ஆராயவேண்டும். இப்படிச் செய்து அனுப்பிய ஒரு வருடத்திற்குள்ளாகவே இதுவரை கெப்ளர் 7 எக்ஸோ கிரகங்களை டிரான்ஸிட் முறையில் கண்டுள்ளது.

இதுவரை விளக்கியது டிரான்ஸிட் முறை. இதைபோல கிரகத்தை கண்டுகொள்ள ரேடியல் முறையும் இருக்கிறது. இரண்டு முறையிலும் தேடி நிஜமாகவே கிரகமா இல்லை நட்சத்திரம் சும்மா அணைந்து அணைந்து எரிந்து ஏமாற்றுகிறதா என்று சரிபார்த்துவிடுவார்கள்.

மேலும், கிரகம் நட்சத்திரத்தை தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதால் இந்த பிரகாச குறைவு மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிகழுமாகையால், இதன் நிகழ்-கால-தாமதத்தை வைத்து கோளம் ஒருமுறை சுற்றிவர ஆகும் காலத்தை, அ தாவது அதன் ஒரு வருட காலத்தை, கணக்கிடமுடியும். அதேபோல, தொலைநோக்கியில் தெரியும் நட்சத்திரத்தின் மொத்த பரப்பையும் கோளம் குறுக்கிடுகையில் ஒரு தருணத்தில் அதன் நிழலால் ஏற்படும் பிரகாசகுறைவின் பரப்பையும் வைத்து கோளம் எவ்வளவு பெரியது (உருண்டை என்று எடுத்துக்கொண்டு, அதன் விட்டம் எவ்வளவு) என்றும் கணக்கிடமுடியும்.

ஆனால் இவ்வழிகள் மூலம் எவை இந்த கிரகங்கள், அவற்றில் உயிர் வசிப்பதற்கான சாத்திய சூழ்நிலை இருக்கிறதா என்றுதான் கண்டறியமுடியும். நிச்சயம் உயிர் இருக்கிறது, இல்லை இருந்து அழிந்துவிட்டது, அவற்றின் குணாதிசியங்கள் என்றெல்லாம் சொல்லமுடியாது. செவ்வாய், பூமி, என்று உயிர், மாற்று உயிர் பற்றி நிரூபணத்துடன் தேடுவதில் உள்ள சிரமங்களை ஏற்கனவே பார்த்ததை நினைவில்கொள்ளவேண்டும். இவ்வகை எக்ஸோ கிரகங்களை கண்டு, தொடர்ந்து கண்காணித்துவந்தால், ஒருவேளை அங்கு நம்மைப்போன்ற உயிர் இருந்தால் அவை நமக்கு செய்திகள் அனுப்பினால் கண்டறியலாம். இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியது, நமக்கு அருகில் இருக்கும் எக்ஸோ கிரகம் என்று அறியப்படும் Gleise 581c கிரகத்திலிருந்தே ரேடியோ செய்தி இங்கு வருவதற்கு இருபது வருடங்களாகும். இதை நாம் கேட்டு, புரிந்து, பதில் செய்தி அனுப்பினால் போய் சேர இன்னும் இருபது வருடங்களாகும்.

[கெப்ளர் விண்கல தொலைநோக்கி கண்டுள்ள ஐந்து பெரிய எக்ஸோ கிரகங்கள். உபயம்: http://science.nasa.gov/science-news/science-at-nasa/2010/04jan_fiveplanets/ ]

கண்டறிந்துள்ள மற்ற நூற்று சொச்ச எக்ஸோ கிரகங்கள் இதைக்காட்டிலும் அதிதொலைவில். இதற்கென்றே பிரத்தியேகமாக வளியில் உலகை சுற்றிவரும் நாஸா விண்கலனான கெப்ளர் முதலியவை கொண்டு இதுவரை எக்ஸோ கிரகங்கள் சுமார் 500 கண்டுபிடித்திருக்கிறர்கள். அக்டோபர் 2010 வரை சரியாக 492. கெப்ளர், கோரோட் தொலைநோக்கிகள் கண்டுபிடிப்பதை வைத்து, இந்த தளத்தில் http://exoplanet.eu/catalog.php பட்டியல் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. எவற்றிலும் உயிர் இருக்கிறது என்று நிரூபணம் இதுவரை இல்லை.

அதனால், இவ்வகை எக்ஸோ-கிரகங்களின் கண்டுபிடிப்பு, கண்காணிப்பு அனைத்தும் ஏலியன்ஸ் பற்றிய நம் மறைமுகத் தேடலில் சேரும்.

அடுத்து நேனோ ஊடுருவிகள் வகை மறைமுகத் ஏலியன்ஸ் தேடல்.

Print Friendly