ஏலியன்ஸ் மறைமுகத் தேடலும் நுண்னூடுருவிகளும்

ஏலியன்ஸ் – வளி-அறிவு-ஜீவராசிகள்– என்பவரை நேரடியாக ரேடியோ வானியல்முறையில் தேடுகிறோம். அதைப்போல மறைமுகத்தேடலும் செய்கிறோம். மறைமுகத் தேடல் பற்றி ஏன் எதற்கு எப்படி என்று அறிமுகப்படுத்திக்கொண்டுவருவதில் சென்றகட்டுரையில் விளக்கிய எக்ஸோ கிரகங்களுக்கு அடுத்து, பூமிக்கு அருகில், ஏலியன்ஸ்களுக்கான வேறு வகையான மறைமுகத் தேடல் ஒன்றை சுருக்கமாக பார்ப்போம்.

நேனோ ஊடுருவிகள் (ப்ரோbஸ்), வைரஸ்கள் புலப்படுகிறதா என்று தேடுவது.

இதை புரிந்துகொள்ள வேறு திசையிலிருந்து அணுகுவோம்.

வீட்டில், அலுவலில், கணினிகளை உபயோகித்திருப்பீர்கள். என்பதுகளில் இருந்த கணினியின் திறனைக்காட்டிலும் பலமடங்கு திறனுடன் அதே சைஸில் அல்லது மேலும் சிறிதாக இப்போது கிடைக்கிறது. தொடர்ந்து இப்படி திறன் பல்கியும், சைஸ் குறைந்தும் கணினிகள் வெளிவருவதற்குக் காரணம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் Moore’s Law என்று ஒரு விஷயம் இதுவரை அமலாகிவருவதால்.

சுருக்கமாக இதன் ஒரு நிர்ணயத்தை இவ்வாறு கூறலாம்: ஒவ்வொரு இரண்டு வருட அவகாச கழிவிலும், கணினி சிப்புகளிலுள்ள டிரான்சிஸ்டர்களின் அடர்த்தி இரட்டிப்பாகும்.

அதாவது, கணினியின் எலக்ட்ரானிக்ஸ் அங்கங்கள் சுருங்கிக்கொண்டே வருகிறது.

சுருங்குவதால் மற்றொரு பயனும் உண்டு. மின்சாரமும், ஒளி போன்று மின்காந்தக்கதிரியக்கம்தானே. இதனால் இரண்டு இடங்களுக்கிடையே மின்சாரம் வழியாக தகவலை அனுப்புகையில், ஒளி வேகத்தை விஞ்சி அனுப்பமுடியாது. இது கணினி சிப்புகளில் தகவல் பரிமாற்றத்திற்கான வேகத்தடை. ஆனால், தொடர்ந்து சுருங்கிவருவதால், சிப்புகளில் ஏதோ இரண்டு இடங்களுக்கிடையே உள்ள இடைவேளி சுருங்கி, இதனால் மின்சாரம் மூலம் தகவல் பரிமாற்றமும் வேகமாக நிகழ வாய்ப்புள்ளது.

இப்படியே சுருக்கிக்கொண்டே போனால், எங்கு முடியலாம்?

என்னத்தான் சுருக்கிவரைந்தாலும் பருப்பொருளினாலான சிப்புகளில் ஏதோ இரண்டு புள்ளிகளிற்கிடையேயான தூரத்தை ஒருஅணுவைவிடசிறிதாக குறைக்கமுடியுமா? குறைத்துக்கொண்டே வந்தாலும், ஒவ்வொரு டிரான்சிஸ்டரும் கிட்டத்தட்ட ஒரு அணு அளவிற்காவது இருக்கவேண்டிய கட்டாயம் வந்துவிடுமல்லவா?

அணுவிற்கும் சிறியதாக, நேரடியாக தகவல்களை அணுக்கரு துகள்களின் சுருளின் (ஸ்பின்) வலம் இடம் என்று சுழலும் மாற்றத்தை இரண்டடிமான (பைனரி) எண்களுக்கு சரிசமனிட்டு கணினிகளின் சிப்புகளை கட்ட முடியும். ஆனால் இதுநாள் வரை இயற்பியல் சித்தாந்த உருவில் தடை உள்ளது.

குவாண்டம் கணினி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அணு அளவு சிறிதான துகள்களில் தகவலை சேமிக்கமுற்படுகையில், துகளே அலையாக, அதன் வேகத்தை நிர்ணயிக்கையில் அதன் இருப்பிடம் துல்லியமாக நிர்ணயிக்கமுடியாமல், தகவல் பரிமாற்றத்தில், மறு ஒலிபரப்பில் பிழைகள் ஏற்படும், இவ்வகை குவாண்டம் இயற்பியலின் குணங்களை எதிர்கொள்வது இதுநாள்வரை சவாலாக உள்ளது.

ஆனால் எதிர்காலத்தில் இந்த வகை குவாண்டம் கணினிகள் நேனோ சைஸ்களில் தகவல்களை சேர்த்து பரிசீலித்து பல வேலைகளை செய்யலாம்.

[குவாண்டம் கணினி மாதிரி. உபயம்: http://www.fastcursor.com/computers/quantum-computer-photo-gallery.asp ]

இதைவிட விந்தையாக, இந்த வகை நேனோ-மீட்டர் சைஸில் கட்டமுடிந்த குவாண்டம் கணினிகளை, அணுவைக்கொண்டு மட்டுமல்லாமல், அதற்கு சற்றே பெரிதான சைஸில், ஆனால் உயிர் இருக்கும் வைரஸ் எனப்படும் (ஏற்கனவே பார்த்த) சாதா உயிர்களை வைத்து கட்டமுடியுமா என்றும் ஆராய்ந்து வருகிறார்கள்.

அதாவது, அணுகருதுகள்களின் சுருளைப்போல, இவ்வைரஸ்களின் மரபணுவில் (டி.என்.ஏ.) பல தகவல்கள் பொதிந்துள்ளன. மரபணுக்களின் தோற்றத்தின் வேற்றுமைகளைக்கொண்டு, இல்லை அவற்றை சற்றே (ரசாயனமுறையில்) மாற்றி, தகவல்களை சேமிக்கமுடியுமா, ஒன்றுடன் ஒன்று பகிர்ந்து அனுப்பிவைக்கமுடியுமா என்பது தற்போது ஆராய்ச்சி நிலையில் உள்ளது.

போதும்.

இதெல்லாம் ஏலியன்ஸ் மறைமுகத் தேடலில் எங்கு வருகிறது? சொல்கிறேன்.

இவ்வகை நேனோ-மீட்டர் சைஸ் வைரஸ், மற்றும் சிறு கணினி சிப்புகளின் முக்கியமான குணங்களைச் சேர்த்து, நேனோ புரோப்ஸ், நுண் ஊடுருவிகள், செய்யமுடியும் என்று எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உயிரியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

[நாய்மென் புரோப். உபயம்: http://www.daviddarling.info/encyclopedia/V/vonNeumannprobe.html ]

மைக்ரோ ஃபிலிம் என்று எதிரி நாட்டின் ராணுவ ரகசியங்களை உள்ளடக்கிய ஒரு வஸ்து ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கதாநாயகியின் ஜாக்கெட் மற்றும் தொப்புள் பொத்தானாகவோ வருமே; நீலத் திருட்டுமுழியுடன் ஜேம்ஸ்பாண்ட் அதை வாயால் கவ்வி பதுக்குவதை சென்ஸாருக்கு மால் வெட்டி திருச்சி சிப்பி தியேட்டர்வரை காட்டுவார்கள். அப்பொத்தானைவிட பல கோடி மடங்கு சிறிதாக நேனோ சைஸ்களில் குவாண்டம் கணினி சிப்புகள் செய்யமுயல்வது, நிறைய தகவல்களை சேமித்தபடி. விசித்திரமாக, இந்த நேனோ சிப்புகள் தங்களுள் சேமித்த தகவல்களையும் சேர்த்து தங்களையே அச்சு அசலாக பிரதி எடுத்துக்கொள்ளமுடிந்தவை. வைரஸ்கள், நுண்னுயிர்கள் போல.

என்னய்யா விளையாடுறிங்களா, இப்படி பிரதியெடுக்கும் மேட்டெரெல்லாம் ரோபோட்டுகளினால் செய்யமுடியுமா என்றால், முடியும்போலத்தான் தெரிகிறது. உலகஜீவிகளான நாமே 2005 வாக்கில் செய்துவிட்டிருக்கிறோம். இங்கு படித்துப்பருங்கள் http://news.bbc.co.uk/2/hi/science/nature/4538547.stm

இவ்வகை நுண்னூடுருவிகளுக்கான ஐடியாவைக்கொடுத்தவர் கணித, கணினி மேதை வான் நாய்மன் (John von Neumann). இவ்வகை ஊடுருவிகளை நாய்மன் ப்ரோப்ஸ் என்று அழைக்கிறார்கள். ஆர்தர் சி. கிளெர்க்கின் பிரசித்திபெற்ற 2001 ஸ்பேஸ் ஒடிஸி அறிவியல்புனைவில் சந்திரனில் இருப்பதாய் சொல்லப்படும் மோனோலித் இவ்வகை பிரதியெடுத்துக்கொள்ளமுடிந்த நாய்மன் புரோபே. பல விஞ்ஞானபுனைவாசிரியர்கள் இவைகளின் சாத்தியங்களை சாகஸங்களை விளையாடியிருக்கிறார்கள் (லாரி நிவன் மற்றும் டேவிட் ப்ரின் குறிப்பிடப்படவேண்டியவர்கள்).

இவ்வகை பிரதியெடுத்துக்கொள்ளமுடிந்த நேனோ நுண்னுயிர் ஊடுருவிகளின் முன்னோடி பிரேஸ்வெல் புரோப். 1960இல் ஜான் பிரேஸ்வெல் (நியூஸிலாந்து ஸ்பின் பௌளரில்லை இவர்; இங்கிலாந்துகாரர்) முதலில் இவ்வகை சிறிய சைஸ் தானியங்கி விண்(வெளிக்)கலன்களின் உபயோகத்தையும், அவைகள் நம் ஏலியன்ஸ்கள் மறைமுகத் தேடலுக்கு தோதான வழி என்றும் பரிந்துரைத்தார்.

[படம் உபயம்: http://www.daviddarling.info/encyclopedia/B/Bracewellprobes.html ]

சரி, ஏலியன்ஸ் தேடலில் இந்த நேனோ ஊடுருவிகள் எதற்கு?

நாம் தேடும் ஏலியன்ஸ் சமுதாயத்தினர் நம்மைவிட நிச்சயம் யுகாந்திரங்களாய் மூத்தவர்களே என்றால், அவர்களதுதொழில்நுட்பமும் நம்மைவிட பன்மடங்கு அபிவிருத்தியாகி ரேடியோ வானியல் மேட்டர்களையெல்லாம் விட்டு பிரபஞ்சத்தில் எங்கும் எளிதாக பயணிக்கும் இவ்வகை ஊடுருவிகளை வடிவமைத்து அனுப்பியிருக்கலாம் என்பது அணுமானம்.

பிரேஸ்வெல் ஊடுருவிகள் நுண்னுயிர்கள் இல்லை. பிரதியெடுத்துக்கொள்ளாது. மனிதர்கள் உட்கார்ந்து பயணம் செய்யமுடியாத, சிறு தனியங்கி ரோபாட் விண்வெளிக்கப்பல்கள். ஆனால் சுலபமாக குறைவான ஆற்றல் செலவழித்து பல ஒளியாண்டுகள் பிரபஞ்சத்தில் பயணிக்கமுடிந்தவை. உயிர், வளி-அறிவு-ஜீவராசிகள் இருக்கலாம் என்று அணுமானிக்கப்படும் ஒரு சூரியகுடும்பத்தினுள் சென்றதும் குறுவலைவரிசைகளில் ரேடியோ சமிக்ஞைகளை பத்து திசைகளிலும் ஒலிபரப்பமுடிந்தவை. அதற்கான பிரத்தியேக ஆற்றலை தன் பிரபஞ்சப்பயணத்தில் அதுவரை சேமித்துவைத்திருக்கும்.

கவனித்தீர்களா, இங்கும் ரேடியோ அலைகள் அனுப்பப்படுகின்றன. அப்படியென்றால், இவ்வலைகளை கண்டறிய அருகிலுள்ள ஏதோ உலகில் ரேடியோ தொலைநோக்கி வேண்டுமே? ஆமாம். இரண்டு உயிரிருக்கும் கிரகங்களிலுள்ள டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிஸிவருக்கிடையே காலக்ஸிகளைக்கடந்து சமிக்ஞையாக அனுப்பப்படும் ரேடியோ அலைகள் தொலைதூரத்திற்கு சக்திகுறையாமல் செல்லவேண்டிய நிர்பந்தத்தை முன்னொருகட்டுரையில் விளக்கினோம். ஆனால் இந்தவகை ஊடுருவிகளின் ரேடியோ ஒலிபரப்பில் இவ்வளவு சக்தி தேவையில்லை. ஏனெனில் ஊடுருவிகள் முதலில் தோதான சூரியகுடும்பம்வரை விண்வெளியில் பயணம்செய்துவிட்டு, அச்சூரியகுடும்பத்தினுள் சென்றபிறகே, அங்கு உயிர் இருக்கலாம் எனும் கிரகங்கள் கண்டறியும் வகையில் சிறு தூரங்களை கடந்தால் போதும் என்பதற்கேற்ற சக்தியோடு ரேடியோ சமிக்ஞை அனுப்பினால் போதுமே.

இப்படியாப்பட்ட நேனோபுரோபுகளை, நுண்னூடுருவிகளை, வளியில் தொலைதூரத்திற்கு அனுப்புவது ஒரளவு எளிது. ஏற்கனவே பார்த்த நேரடி தேடலின் அங்கமான ரேடியோ சமிக்ஞையுடன் ஒப்பிட்டால், பூமியிலிருந்தே நூறு ஒளியாண்டு தொலைவு சமிக்ஞை சத்து குறையாமல் பயணிக்குமாறு அனுப்பவிழையும் ரேடியோ சமிக்ஞைக்காகும் ஆற்றலை விட நுண்னூடுருவிகளை, வளியில் தொலைதூரத்திற்கு அனுப்புவதற்கான ஆற்றல் குறைவாகவே தேவைப்படும். ஒருமுறை வசிக்கும் கிரகத்தினைவிட்டு வெளியேற்றி, எத்திசையிலும் உந்தித் தள்ளிவிட்டால் போதுமே.

அதேபோல, நேனோ சைஸ் மற்றும் பொருண்மை (மாஸ்) என்பதால் பல்லாயிரக்கணக்கான நுண்னூடுருவிகளை ஒரே சமயத்தில் வளியில் உந்தி வாரி இரைக்கலாமே.

நம் பூமியின் புவியீர்ப்பு விசையை எதிர்த்து வெளியேறத் தேவையான இறுதி வேகத்தை இவ்வகை நுண்னூடுருவிகளை கொடுத்து, உந்தி சூரிய குடும்பத்தை விட்டே வெளியேற்றுவதற்கு வேண்டிய ஆற்றல், பயொநீர், வாயேஜர் என்று விண்கலன்களை அனுப்புவதற்கு (சார்ந்த தகவல்களை செட்டி என்ன செய்கிறது கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள்) நாம் செலவழித்ததைக்காட்டிலும் குறைவுதான்.

இதனால் நாம் அறிவதுயாதெனில்…

நாமே இவ்வளவு லேட்டாய் இந்தவித யோசனைகளில் ஈடுபட்டிருக்கையில், பிரபஞ்சத்தில் வசிக்கும் நம்மை விட வயதான ஒரு ஏலியன்ஸ் சமுதாயம் இதைப்போல நுண்னூடுருவிகளை கண்டுபிடித்து, இந்நேரம் பத்து திசைகளிலும் தசரதர்களாய் அனுப்பியிருந்தால்? அவற்றில் சில ரதர்கள் நம்மை நோக்கி வந்து சூரியகுடும்பத்தினர் புழங்கும் வளியில் சஞ்சரித்துக்கொண்டிருந்தால்?

பூமியருகே அல்லது தோராயமாக சூரிய குடும்பத்தினுள் வந்ததும், இவ்வகை நேனோபுரோபுகள், நுண்னுயிர்களாய் வடிவமைக்கப்பட்டிருந்தால், தங்களையே பிரதியெடுத்துக்கொள்ளவும் தொடங்கலாம். உடனே இல்லையென்றாலும், சில பல வருடங்களிலாவது, இந்த நுண்னூடுருவிகள் கூட்டத்தை அல்லது ஒரு பகுதியையாவது (பெரிய சைஸ் கொசு போல நம்முலகருகில் உலவும் வஸ்து) நம் தொலைநோக்கிகளில் கண்டறியலாமல்லவா.

இது போல வஸ்துக்கள் பூமியருகே தட்டுப்படுகிறதா என்று தேடுவது, ஏலியன்ஸிற்கான மற்றொரு மறைமுகத்தேடல்.

செய்துகொண்டிருக்கிறோம். ஒரு ஏலியக் கொசுவும் இதுவரை கடிக்கவில்லை.

அடுத்து ஏலியன் மாஜிக் வகை தேடல். அதற்கு பிரபஞ்ச அறிவுசார் சமுதாயத்தினரின் அறிவுமுதிர்ச்சியை எண்ணிக்கைவகைப்படுத்தும் கர்டஷாவ் அளவையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். செய்வோம்.

சான்றேடுகள்

1) Bracewell, R. N. “Communications from Superior Galactic Communities,” Nature, 186, 670-671 (1960). Reprinted in A.G. Cameron (ed.), Interstellar Communication, W. A. Benjamin, Inc., New York, pp. 243-248, 1963.

Print Friendly