தெய்வங்களுக்கு கோவிலில் ஆரத்தி எடுக்கையில் அப்பெயர் வரக் காரணம் கூறி அர்ச்சகர்கள் சிலாகிப்பார்கள். நாம் உச் கொட்டிக்கொண்டு மேலும் இரண்டு முறை கண்ணத்தில் போட்டுக்கொண்டு வருவோம்.
அவ்வகையில் என் பெயர் காரணம் பற்றி பலர் எனக்கு பற்றிக்கொள்ளும் அளவிற்கு யூகித்து சிலாகித்து படுத்தி இருக்கிறார்கள். இனிமேலும் படுத்துவார்கள். பார்த்ததும் பல காரணங்களுக்காக, கண்ணத்தில் எல்லாம் போட்டுக்கொள்ளாமல், அர்ச்சனை மட்டும் செய்வதால், நானே ஒரு சுய பெயர் விளக்கம் கொடுத்துவிடலாம் என்று இதை எழுதுகிறேன்.
என் இயற்பெயர் ஒம்மாச்சி. இப்பூவுலகத்திற்காக அஃதை அருண் என்று என் தந்தையார் சுருக்கி விட்டார்.
அரூணில் உள்ள ‘ண’ ஸமஸ்கிருதத்தில் 2ஆவது ‘ண’ என்பதை உலகிற்கு உணர்த்தி சீர்திருத்துவதற்காக செய்ததாக எங்கள் வீட்டில் உள்ள சுவர்கோழிகளிடம் ஒரு யூகம் உலவுகிறது.
இது சரியோ தவறோ, என் தந்தையின் இச்செயலால், தமிழில் மூண்று சுழி சுழிக்கப்பெற்றுள்ளேன்.
ஆங்கிலத்திலும், மேற்கூறிய தேவநாகிரியின் ‘ண’ களின் பாகுபாட்டு சூக்ஷமத்தினால், என் பெயர் Arunn நாட் Arun.
என்ன சார் நியூமராலஜியா என்று கேட்டு என் விஞ்ஞான சிந்தனை நிலையையே அயோக்கியப்படுத்தும் அநேகரிடமிருந்து ஒரு ‘n’ ஸைலெண்ட் என்று கூறி தப்பித்துக்கொள்வேன்.







