«

»

முத்துக்குமார் கச்சேரி

இன்று கச்சேரி பல காரணங்களுக்காக வித்தியாசமானது. எப்பொழுதும் சைக்கிளுக்கே டிரைவர் வைத்துக்கொள்ளூம் நான், இன்று காரை கச்சேரி கேட்பதற்காக r. k. mutt சாலையிலுள்ள p. s. ஹைஸ்கூலுக்கு ஓட்டிச் சென்றேன்.

வழியில் ttk ரோட்டில் திருப்பத்தில் ஒரு வேன் டிரைவரும், p. s. ஸ்கூலில் டிராயர் போட்டுக்கொண்டு திடலில் ஓடிக்கொண்டிருந்த ஒரு சில மாமாக்களும் நான் திருப்பிய வேகத்தில் கலவரப்பட்டார்கள். மற்றபடி காரும் கூட வந்த நண்பரும், லோகத்தில் ஏனையோரும் நான் ஓட்டிச் சென்றதினால் நலமே.

காரிலிருந்து இறங்கியவுடன் மனைவிக்கு நண்பரின் செல்லில் ஓசியாக இதைப்பற்றி பெருமைபட்டுவிட்டு, தக்ஷிணாமூர்த்தி ஆடிடோரியத்தின் உள்ளே நுழைந்தேன். கச்சேரி துவங்க 7 நிமிடங்கள் இருந்தன.

எங்களைத் தவிர மொத்தம் 4 மாமாக்கள் இருந்தார்கள்.

முத்துக்குமார் சரியாக 5 மனிக்கு ஆரம்பித்தார் பேகடாவின் சஞ்சாரத்தை. இந்த சலமு வர்ணம். துரித காலப் பிரமாணத்தில் நின் நீ..இ..இ…என்று சரணத்தில் மிடுக்காக இழுக்கையில் சற்று கண்ணை மூடினால் 20 வருடத்து முந்தய சேஷகோபாலன் தெரிந்தார் என்று சொல்வதைவிட, முத்துக்குமார் ஒரு குரு கடாக்ஷம் கிடைக்கப்பெற்றுள்ள மாணவர் என்றும், சேஷகோபாலன் நல்ல ஆசிரியர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என்றுமே கொள்ளவேண்டும்.

ஆனால் முன்பே கூறினேன். கச்சேரி வித்தியாசமானது என்று. இது ஒரு பெரிய
கதாகாலக்ஷேபத்திற்கு முன் வந்த ஒரு சற்றே சிறிய ‘பெரிய’ கச்சேரி.

இம்மாதிரி ஒரு பெரிய கச்சேரிக்கு முன்போ, வேறு பெரிய நிகழ்ச்சிக்கு முன்பு பாடப்படும் கச்சேரிக்கோ முதலில் கூட்டம் அவ்வளவாக இருக்காது. போகப் போக கூட்டம் ஜாஸ்தியாகும். அடுத்த ‘பெரிய’ நிகழ்ச்சிக்கு சற்று முன்பாக வந்து இடம் போடவேண்டுமே!

பாடகர் தைவதம் தோன்றும் ஒரிஜினல் நாட்டையில் அருமையாக ஆலாபனை செய்து (மற்றுமொறு வித்தியாசம்: நாட்டையில் ஆலாபனை!) நின்னே பஜன என்ற தியாகராஜரின் கீர்த்தனத்தை பாடுகையில் ஹாலில் கூட்டம் அதிகரித்தது.

பேகடா, நாட்டை, ஐயகோ அடுத்து பந்துவராளி. என்னடா மைலாபூர் மஃபியாவிற்கு பயந்து செய்யும் வழக்கமான கச்சேரி போல் உள்ளதே, அப்பராம பக்திதான் போலும், என்று நொந்துகொண்டிருக்கையில், ராமணாதம் பஜேஹம் என்று துவக்கி நிமிரவைத்தார் பாடகர். ராம்நாட் கிருஷ்னன் பாடும் (ரிஷிமூலம் சங்கர சிவமாகவும் இருக்க அனேக வாய்ப்பு) துரித கால பிரமாணத்தில் அமைந்தது நண்பருக்கு சற்று குறை. ஆனால் வந்து விழுந்த சங்கதிகளும், குமார குருகுஹ மஹிதம் என்று தொடங்கும் வரியில் நிரவலும், ஸ்வரங்களும், சுருங்கச் சொன்னால், electrifying.

ஏதேதோ அசலூர் கழுதையை எல்லாம் கேட்டுக்கொண்டு எங்கு தொலைக்க இருந்தோம் இந்த உள்ளூர் குயிலை? ஆனாலும் குயில் சற்று மேல் ஸ்தாயியில் வாயைத் திறந்து கணீர் என்று பாடுகையில் மைக்கிலிருந்து இன்னும் சற்று விலகிப்பாடினால் தேவலை என்று தோன்றியது. குரல்தான் சற்று க்ரீச்சிடுகிறதா இல்லை அன்று மைக் ‘தீ’மைக்கா தெரியவில்லை.

ஒரு ஸ்லோகத்திற்குப் பிறகு, அனுபல்லவியில் எடுத்தார் அங்காரகம் ஆஸ்ரயாமி, சுருட்டி ராகத்தில். ஒவ்வொரு முறையும் பல்லவியை பாடுகையில் ஸ்பெஷ்டமாக பிரித்து ஆஸ்ரயாமி என்று பாடினார். ஒரு விஷயம். இப்படி அனுபல்லவியில் எடுப்பது mkt செய்வதுபோல் ஒரு effectடுக்காக மட்டும் இல்லை. கச்சேரியில் இது ஒரு time management trick. முதல் பல்லவியும் அதனுடன் இருக்கும் சங்கதிகளையும் பாடாமல் விரைவாக கீர்த்தனத்தை முடித்துவிடலாம் அல்லவா.

பாடகர் வாட்ச்சை ஒரு முறை பார்த்துக்கொண்ட மாதிரி இருந்தது. நிற்க.

பாடகர் நான் சென்ற வாரம் எழுதிய ஸீஸன் கச்சேரியின் தொய்வையை (பார்க்க ஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்) பற்றி படித்திருப்பாரோ என்று சந்தேகிக்கும் படியாக அடுத்து வந்தது ஒரு ராகம். ராகம் ஆலாபனையில் ஜ்யோதிஸ்வரூபிணீ போல இருக்கே, இல்லை இல்லை காங்கேயபூஷணியா என்று சற்றே நிமிர்ந்து உட்கார்ந்து யோசிக்கவைத்து, இறுதியாக ரஸிகப்ரியா என்று தீக்ஷை பெறவைத்தார். எனக்கும் என் உடன் வந்த நண்பருக்கும் வாயெல்லாம் பல்.

ரஸிகப்ரியா 72ஆவது மேளகர்தா ராகம். இளையராஜா காதல் ஓவியம் என்ற படத்தில் ஒரு பாடலை போட்டிருக்கிறார். அவார்ட் வரும் என்று நம்பி வெறுத்திருக்கிறார் (அதே படத்தில் முதல் பாடல் கனகாங்கியில்!).

பாடகர் நன்றாக உழைத்திருந்தார் ரஸிகப்ரியா ராகத்தை. என்ன உழைத்து என்ன, சேஷகோபாலன் சொல்வதுபோல மேடையில் வரவேண்டும் அல்லவா? பிரவாளமாக வந்தது. மேல் ஸ்தாயியை மீண்டும் மீண்டும் சென்று லாவகம் செய்துகொண்டிருக்கையில் பக்கத்தில் மாமி தர்மவதிதானே என்றார். மையமாக புன்னகைத்தேன். வேறு வழி.

கீர்த்தனம் அருள் செய்ய வேண்டும் ஐயா. எதிர்பார்ததுதான். தஞ்சாவூர் s. கல்யாணராமன் அருமையாகப் பாடுவார். உதாரணத்திற்கு ஒரு 1973 கச்சேரி mp3யாக வலையில் உலவிக்கொண்டிருக்கிறது. msg வயலின், காரைக்குடியார் மிருதங்கம். கேட்டுப்பாருங்கள். இப்பாடகர் சில சங்கதிகளை மேற்படி விவாதிமேள நிபுணரிடம் சுட்டிருந்தாரோ என்று தோன்றியது. பல்லவியில் “ஐயா”வை பாடுகையில் ஒரு சில கார்வைகள் மட்டும் மிஸ்ஸிங். ஆனாலும் நன்றாகவே இருந்தது. மிருதங்கம் நன்றாக சப்போர்ட் செய்தார்.

ரஸிகப்ரியாவின் மயக்கத்தில் அடுத்து வந்த 30% கச்சேரி தொய்வையை தூண்டக்கூடிய (பார்க்க ஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்) மெயின் உருப்படி காம்போதியை மன்னித்தேன். நன்றாகப் பாடினார். ஒவ்வொரு சஞ்சாரமும் விஸ்தாரமாக நீட்டி முழக்கி நுணுக்கமான பிடிகளுடன் இருந்தது. வார்த்தை வார்த்தையாக பிய்த்துப் பாடாமல், முழு வாக்கியமாக, மைக் இல்லாத காலத்தின் பாடும் முறையில் ஆலாபனை இருந்தது.

கீர்த்தனம் ரத்னகஞ்சுகதாரிணி. மிஸ்ர சாபு தாளம். (மற்றுமொறு வித்தியாசம் – மெயின் உருப்படிக்கு மிஸ்ர சாபு. பலே!). முத்தய்யா பாகவதர் இயற்றியது. நான் முதன் முதலாக கேட்கிறேன். நண்பர் காதை கடித்தார். BA/MA மியூஸிக் படிப்பவர்களுக்குப் பாடமாம். சிறியதாக இருப்பதால் எளிதாகக் கற்றுக் கொடுத்து காம்போதிக்கு ஒன்று என்று கணக்கு காட்டிவிடலாம் என்று சில ஆசிரியர்கள் நினைக்கிறார்கள் போலும்.

பல வருடங்களாக கேட்டு, அனுபவித்து, ரஸித்து முடித்துவிட்டிருக்கும் காம்போதியையும் வேளை சரியாக இல்லை என்றால் சொதப்ப முடியும் என்று காட்டினார் வயலின் வித்துவான். ஆலாபனையிலே அபஸ்வரங்கள் வேறு. ஆனால் நிரவல் முடிக்கையில் நன்றாக வாசித்து பாடகரிடம் சபாஷ் வாங்கினார். வேகமாக ஸ்வரப் பிரஸ்தாரங்களிலும் ok. ஆனால் கணக்கு சற்று அவ்வப்போது இடித்தது. எடுப்பிற்கு வராமல் திணறியது. மொத்ததில் அன்று its not his day.

இந்து சேகர ஹரிகேஸ சுந்தராங்க விஹாரினி என்று சமத்திற்கு சற்று முன் துவங்கும் வரியில் நிரவல், ஸ்வரம். பிறகு தனி.

மற்றுமொறு வித்தியாசம், தனியில் ஒருவரும் எழுந்து செல்லவில்லை. ஆனால் மெட்ராஸில் பல வருடங்களாக கச்சேரி கேட்கும் நான் அடுத்த நிகழ்ச்சிக்கு இடம் போய் விடுமே என்ற பயமே இதற்குக் காரணம் என்பேன்.

ஆனாலும் அருமையாக வாசித்தார் பாலாஜி. சபாஷ். ஒரு நாள் மொத்த கூட்டம் இவருக்காகவே உட்காரும்.

இருந்த 10 நிமிடத்தில் இரண்டு துக்கடா பாடி நேரத்திற்கு முடித்தார் கச்சேரியை.

வெளியே பாடகருடன் பேசிக்கொண்டிருக்கையில் ரூபவதி பாடுவதாக இருந்து, இங்கு அது எடுக்காது என்று ரஸிகப்ரியாவை பாடிவிட்டாராம். அடுத்த கச்சேரியில் பாடிவிட்டால் போகிறது.

காரை 7 மணி பீக் ட்ராஃபிக்கில் அடையார் சிக்னலில் ஒரு போலீஸ் ஜீப்பிற்கு பின் அபாயகரமான நெருக்கத்தில் நிறுத்தியதைத் தவிர வேறு எந்த அட்வென்சரும் செய்யாமல் வீடு வந்து சேர்ந்தேன்.

மாமாக்கள், தாத்தாக்கள், மடிசார் மாமிகள், அடங்கிய மையிலாபூர் மஃபியா அரசோச்சியிருக்கும், மெயின் உருப்படி ரக்தி ராக பேட்டையில் ரஸிகப்ரியா ஆலாபனை செய்த முத்துகுமார், நிச்சயம் ஒரு வளரும் சங்கீத சொத்துகுமார்.

————

பாடகர்: டில்லி முத்துக்குமார்
வயலின்: மேலக்காவேரி தியாகராஜன்
மிருதங்கம்: ட்ரிவான்ட்ரம் பாலாஜி
இடம்: P. S. ஹைஸ்கூல், R. K. மட் ரோடு, மைலாபூர்.
நாள்: 13 ஜூன் 2006

தொய்வை (kutcheri dullness index): 30 – 15 = 15% மட்டுமே (மெயின் உருப்படி காம்போதி பாடினாலும், ரஸிகப்ரியா ஆலாபனை செய்ததால்)

[கச்சேரி மொத்த உருப்படி பட்டியல் கிடைக்க செல்க இங்கே]

Print Friendly

இவைகளையும் படிக்கலாமே:

  • சார்ந்த பதிவுகள் வேறெதுவுமில்லை

Permanent link to this article: http://www.ommachi.net/archives/22