ராகம் தானம் பல்லவியை பற்றி ஒரு விமர்சன கட்டுரை எழுதுவதாக தொடங்கி, இழுத்து இழுத்து பல பாகங்களாக சொல்வனம் இணைய இதழில் என் கர்நாடக இசை (பற்றிய) கட்டுரைகள், ஏதோ ஒரு திசையில் போய்கொண்டிருக்கிறது. கட்டுரையின் நான்காவது பாகத்திற்காக, ஆர்வக்கோளாரில் சில விளக்க வீடியோக்கள் வீட்டில் இருப்பவர்களை இரவு தூங்கவிடாமல் படுத்தி, எடுத்துப்பார்த்தேன். சுற்றியுள்ள விளக்கங்களை சுருக்கமாக கொடுத்து, இங்கு அவ்வீடியோக்களை தருகிறேன்.
விரிவாக, சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் நான்கு கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள்.
சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு
Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.
மேலே உள்ள சதுர் ராகமாலிகை பல்லவியை விளக்குகிறேன் பேர்வழி என்றுதான் மிச்சத்தையெல்லாம் எழுதுகிறேன். எப்படியும் பல்லவியை கட்டுரைத்தொடர் முடிவதற்குள் விளக்கிவிடுவேன்.
முதலில் ஆவர்த்தம்; என்றால், சுற்று. ரவுண்ட். ஒரு ஆவர்த்தம் என்றால் ஒரு சுற்று. ஆவர்த்தம் இசைக்கு, பாடலுக்கு, மிக உபயோகமான கால அவகாசம். தாளத்தின் அங்கங்கள், கால இடவெளிக்கேற்றவாறு ஆவர்த்தத்தின் அவகாசம் கூடவோ குறைந்தோ மாறுபடும். பாட்டின் அவகாசத்தை நீட்டவோ குறைக்கவோ, பாட்டின் கட்டுக்கோப்பை, வரிகளில் வார்த்தைகளை நிர்ணயிக்கவோ, ஆவர்த்தங்கள் இன்றியமையாதவை.
அடுத்து ஆதி தாளம்.
ஆதி தாளம் உங்களில் பலருக்கு தொடையில் கைவத்து போடத்தெரிந்திருக்கும். தெரியாவிடின், இப்படி செய்யவேண்டும்.
ஆதிதாளம், ஒரு களை சவுக்கத்தில் ஒரு பாட்டு. அதிலேயே ஆவர்த்தம், குறைப்பு, தீர்மாணம் போன்றவற்றை விளக்குகிறேன். எனக்கு பாட வராது, அதனால் டி.எம்.எஸ்ஸை துணைக்கு கூப்பிட்டுக்கொள்கிறேன். தன் பங்கிற்கு அவர் கே.வி.மகாதேவனையும், சிவாஜி கணேசனையும் துணைக்கு கூட்டிக்கொள்வது அவர் இஷ்டம்.
இசை, பாடகர், வாயசைத்து நடித்தவர் என்று ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் அரங்கேற்றிய பாட்டும் நானே பாவமும் நானே என்று கௌரிமனோஹரி ராகத்தில் அபாரமான பாட்டு நமக்கு பரிச்சயம். இப்பாடலின் இறுதியில் கொன்னக்கோல், மற்றும் வாத்தியங்கள் ஆதி தாளத்தில் சில ஆவர்த்தங்கள் எப்படி வாசிக்கின்றனர் என்பதை இசையை ரசித்துக்கொண்டே அனுபவியுங்கள்.
பாட்டும் நானே – குறைப்பு விளக்கம்
பாட்டும் நானே – தீர்மாணம் விளக்கம்
கச்சேரியில், மெயின் பாட்டில் இந்த விஷயங்களை செய்வார்கள். ரா. தா. பல்லவியிலும் தீர்மாணம் போன்றவற்றை செய்வார்கள்.
இப்போது நடை பற்றி இன்னொரு விளக்க வீடியோ. ஆதி தாளத்தை சதுஸ்ர நடைக்கும், கண்ட நடைக்கும் வித்தியாசப்படுத்தி ஒரு சிறு விளக்கம் கொடுப்போம்.
[மேலே விடியோவில் நூறு வருஷம் பாடல் ஆதி தாளத்தில், திஸ்ர நடையில் உள்ளது. சதுஸ்ர நடை என்று சொல்லிவிட்டேன். மூன்று நடைகளையும் காட்டுவதற்காக எடுத்து, குறிப்பிடாமல் சொதப்பிவிட்டேன். மற்றதெல்லாம் ஓகே.]
பல்லவியின் சாஹித்தியமும் (பாட்டும்) தாளமும் அதே நேரத்தில் தொடங்கினால் பல்லவி சமத்தில் ஆரம்பிக்கிறது என்று பொருள். பாட்டு தாளம் தொடங்கிய பின், அதைத் தாண்டித்தான் தொடங்குகிறது என்றால் அனாகத எடுப்பு. அதீத எடுப்பு என்றால் பாட்டு தாளம் தொடங்குவதற்கு முன்னரே தொடங்குகிறது என்று பொருள்.
இதைப்பற்றியும், இன்னபிற பல்லவி விஷயங்களையும் அடுத்த பாகத்தில் விளக்குவோம். லைட்டாய் ஒரு திரையிசை சர்ப்ரைஸ் உதாரணம் கொடுத்து இப்பாகத்தை முடிப்போம்.
ஜெண்டில்மேன் படத்தில், ரஹ்மானின் சிக்குபுக்கு ரயிலே பாட்டு பிரபலம், நமக்கு பரிச்சயம். மேலே படிக்கும்முன் சட்டென்று சொல்லுங்கள், பாட்டு எப்படி தொடங்கும்? அதாவது, சுரேஷ் பீட்டர்ஸ் பாடுகையில், பாட்டு எப்படி தொடங்கும்? சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்றுதானே?
தொடக்கத்தில் கொயந்தை பாடிமுடித்ததும் வரும் இசைக்கு ஆதிதாளம் போடுங்கள். நான்கு ஆவர்த்தத்தில் முடிந்துவிடும். ஆனால் முடிகையில் இரண்டு அக்ஷரம் அமைதி. பிறகு சமத்தில் சுரேஷ் பீட்டர்ஸ் பாட, பாடல் தொடங்கும். ஆனால் பாட்டு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று தொடங்காது. புகு சிகு புகு சிகு புகு ரயிலே என்று தொடங்கும்.
அடுத்த சுற்றில், இரண்டாவது முறை பல்லவியை சொல்கையில், சமத்தில் டிரம்ஸ் அடி விழுந்ததும், சற்று காலம் தள்ளியே, சிகு புகு சிகு புகு ரயிலே என தொடங்கும். இதை சரிகட்டதான் சுரேஷ் பீட்டர்ஸ் முதல் சுற்று தொடக்கத்தில், சமத்தில், ஒரு புகு சேர்த்து தொடங்குவார்; சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா என்றெல்லாம் கேட்டுவிட்டு மீண்டும் பல்லவியை தொடங்குகையில் புகு சிகு புகு சிகு என்று கோரஸாய் தொடங்கும்.
இந்தாருங்கள் என் விளக்க வீடியோ.
ஒரு களை சவுக்கத்தில் ஆதி தாளத்தில் இப்பாடல் அரை இடம் தள்ளி தொடங்குகிறது. அதாவது கையை தொடையில் சமத்தில் தட்டிய முதல் அக்ஷரத்திற்கும் அடுத்து சுண்டுவிரலை விடும் இரண்டாம் அக்ஷரத்திற்கும் நடுவில் சிகு வருகிறது.
ஸோ (ஆகையால்), சிகு புகு சிகு புகு ரயிலே என்று பாட்டை சொன்னால், இப்பாடல் ஆதி தாளத்தில் அனாகத எடுப்பு பாடல். மேலும் பல உதாரணங்கள் அடுத்த பாகத்தில்.
கட்டுரை தொடக்கத்தில் சொன்ன சதுர் ராக மாலிகை பல்லவி இரண்டு ஆவர்த்தம், இரண்டு களை சவுக்கம் (இரண்டு அக்ஷரங்களுக்குள் ஒரு களையை விட இரு மடங்கு நேர அவகாசம்). இப்பல்லவியும் அனாகத எடுப்பே. தாளத்தின் சமத்தில் இருந்து முக்கால் இடம் தள்ளி.
கர்நாடக இசையா கொக்கா.
வீடியோவே இருக்கிறது, எதற்கு இதையெல்லாம் எழுதவேண்டும் என்றால் வீடியோ பார்க்கமுடியாதவற்காகவும் (பிரிண்ட் போட்டு படிப்பவர்களுக்காகவும்) எழுத்திலும் விளக்கியுள்ளேன். அதேபோல் நான் வீடியோ வல்லுனரில்லை. சும்மா சொல்வனம் கட்டுரைத்தொடருக்காக ஆர்வக்கோளராய் ஒத்தகையில் கேமிராவை பிடித்தபடி ஷேக் வெல் வைல் இன் யூஸ் என்று எடுத்துள்ளேன். இதெற்கெல்லாம் டொஸ்க்சொல்லி விமர்சனம் இடது கையால் எழுதிப்பழகுங்கள்.
மிச்சத்தை விரிவாக, சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் நான்கு கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள்.







