கிறித்துவர்கள், யூதர்கள், முஸ்லீம்கள் என்று அனைவரும் குறிப்பிடும் எழக்கியல் துறவியின் மனதில் பழைய ஏற்பாட்டின் சில பகுதிகள் இன்னமும் தோன்றியிருக்கவில்லை. யூஃப்ரடெஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகள் வளப்புறச்செய்த பாபிலோனிய பிரதேசமான கால்டியா தேசம் (இன்றைய தென் இராக், குவைத் பகுதி). கி.மு. ஆறாம் நூற்றாண்டு உலகம்.
இலக்கியத்திலிருந்து வேறுபட்டு, ஆள், தேசம் காலம் என்ற தலைகீழ் தொடக்கத்தை தொடருமுன், கி.மு. என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன். இது கரீட்டா எப்போத்திலிருந்து என்பதில் சில குளறுபடிகள் இருக்கிறது. என்றோ இருந்த ஒருவருக்கு முன்பிருந்த காலம் என்று ஏன் சொல்லவேண்டும் என்று அறிவியல் கட்டுரை தொடக்கத்திலேயே சந்தேகம் வந்து இலக்கியம் படிக்க போய்விடாதீர்கள் (இதை படித்துவிட்டு அங்கு செல்லவும்).
உங்களுக்காக எழக்கியல் உலகில் இருந்த காலத்தை இப்போதைக்கு நாம் ஸ்ரீ.மு. 2500 என்று திருத்தி எழுதிக்கொள்வோம். ஸ்ரீ.மு, என்றால் ஸ்ரீதேவி பிறப்பதற்கு முன் (அவருக்கு 40 வயதிற்குமேல் சொன்னால் மனசு கேட்கமாட்டேன்கிறது, அதான் 2500 – கூட்டிகழித்து பார்த்தால் எழக்கியல் இருந்த காலம் சரியாகவே வரும்).
சரி, தொடங்கியதை தொடருவோம். எழக்கியல் துறவி யூஃப்ரடெஸின் பிரதான துணைநதியான காபுர் நதிக்கரையோரம் உலாத்திக்கொண்டிருக்கிறார். அப்போது வானில் வடக்கிலிருந்து ஒளி உமிழ்ந்தபடி பெரும் சூறாவளி தோன்றியது. அதில் இறக்கைகள் போல் அணிந்த நான்கு மனிதர் போல் உருவங்கள் பறந்து வருவதை கண்டார். கூடவே நான்கு மிகப்பெரிய சக்கரங்கள் சுழன்றுகொண்டே பூமியில் இருந்து வானத்திற்கு புறப்பட்டது. சக்கரங்களின் நடுவே மனித கண்களைப்போல் பெரிதாக ஏதோ. சற்றுநேரத்தில் அனைத்தும் வானத்தில் பறந்து மறைந்தது.
இக்காட்சி எழக்கியல் கூறியதாக பைபிளில் (பழைய ஏற்பாட்டில், எழக்கியல் புத்தகம்) உள்ளது.
இதுவே இரண்டாயிரத்து ஐநூறு வருடம் முன் மனிதன் ஏலியன்ஸையும் அவர்களின் பறக்கும்தட்டையும் பார்த்ததற்கான முதல் பதிப்பிக்கப்பட்ட சான்றேடு என்கிறார் பால் டேவிஸ், தன் சமீபத்திய ஈரீ ஸைலன்ஸ் (The Eerie Silence, 2010) புத்தகத்தில்.
டேவிஸே எழக்கியலின் பைபிள் காட்சி வருணனையை சீரியசாய் எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார். ஏதோ தன் கற்பனைத்திறனுக்கேற்ப எழக்கியல் அன்றைய சமுதாயத்தினருக்கு ஏற்றவாறு ஒரு பொருளமைகிறவிதம் ஏற்படுத்திய காட்சி இது. பண்டைய மனிதர்களின் எண்ணங்களை வரலாற்று குவியாடி மூலம் இன்றைய மனிதர்கள் பார்ப்பதற்கு இக்காட்சிகள், வருணனைகள் உதவலாம். அதற்கு மேல் இதில் உண்மையை தேடுவது சரியல்ல.
அதனால்தான் தலைப்பு வரலாறோ சரித்திரமோ அல்லை. ஏலியன்ஸ் புராணம். கதைகளும் புராணத்தில் அடங்கும்.
சரி, ஆனாலும், நம்ம ஊரை இந்த ஆட்டத்துக்கெல்லாம் இவர்கள் சேர்த்துக்கொள்வதே இல்லை. ஒரே ஓரவஞ்சனை. தோராயமாய் பார்த்தா கூட, ராவணனும் அவன் ஏறி வந்த புஷ்பகவிமானமுமே ஏலியன்ஸ் மற்றும் அவர்களின் பறக்கும்தட்டாய் நம்மவர்களுக்கு தெரிந்திருக்குமே. மேலே எழக்கியல் பைபிளில் கதைதான் சொல்கிறார் என்று பால் டேவிஸ் கூறுகிறார். அப்படியென்றால் நம்ம ராமாயண இதிகாச கதையும் பைபிளுக்கும் முற்பட்டதுதானே? கலியுகம், த்வாபர யுகம் தாண்டி பின் சென்று, திரேதாயுகத்திலேயே ஏலியன்ஸை முதலில் கண்டவர் நம்மவர்.
நம்மவர் கண்டவர். ஆஸ்திரேலியர் கண்டுகாதவர்.
மேலே வாக்கியத்தில் நம்மவர் என்றால் எப்படி கமல்ஹாஸன் இல்லையோ அதுபோல ஆஸ்திரேலியர் என்றால் பால் டேவிஸ்.
முதலில் மனிதன் ஏலியன்ஸை பற்றி எப்போது சிந்தித்தான்? எது மனிதன் நிஜமாகவே இருப்பதாக நம்பிய முதல் ஏலியன்? யாரெல்லாம் ஏலியன்ஸ்?
இவ்வுலக மனிதர்கள் கார்பன் அடிப்படையுடன் தோன்றிய உயிரினம். மேலும் ஹட்ரஜன், நைட்ரஜன் என்று கூட்டி, ஆக்ஸிஜன் உட்கொண்டு உயிருடன் திகழும் வேதியியல் பொருட்கள். ஒரு வாதத்திற்கு கார்பன் மற்றும் கால்களுடைய ‘கரி-காலர்’களிலிருந்து, அதாவது உலக ஜீவராசிகளிலிருந்து வேறான, அந்நியர் அனைவரும் ஏலியன்ஸ் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்படியெனின் நம் புராணங்களில் இல்லாத ஏலியப்பயபுள்ளைகளா? ராக்ஷஸர், தேவர், கின்னர கிம்புருடர் என்று தொடங்கி பாதாள, தேவ, கந்தர்வ என்று ஈரேழு பதினான்கு (மைனஸ் ஒன்று) லோகங்களிலும் நாம் ஏலியன்ஸ் கண்டுள்ளோம். அடுத்த ஏலியன்ஸ் புத்தகம் எழுதுமுன் பால் டேவிஸை நம்ம வேளுகுடி கிருஷ்ணனாண்ட அளவளாவச்சொல்லவேண்டும்.
இந்த ரீதியில் யோசித்தால் முடிவு சரியாக வராது. எப்படியும் இப்போது உலகிலுள்ளோர் ஏலியன்ஸ் என்று கூறுவது மேலே இதிகாச புராணங்களிலுள்ளோரை இல்லை. தர்க்க ரீதியாக யாராவது முன்னரே ஏலியன்ஸை கணித்துள்ளாரா? செய்துள்ளார். கிரேக்க டெமாக்ரிட்டஸ். கி.மு. 460லிருந்து 370 வருடம் வரை வாழ்ந்தவர்.
அதாவது இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் முன்னர். எழக்கியலுக்கு சிலபல வருடங்கள் கழித்து. எழக்கியல் வானில் ஏலியன்ஸ்ஸைப் பார்த்தாரென்றால், டெமாக்ரட்டிஸ் நிதர்சனமாய் ‘அணு‘மானித்தார்.
அதாவது, அணுமானித்தார் எழுத்துப்பிழையில்லை. அணு வழியே ஏலியன்ஸ்களை அனுமானித்தார் என்கிறேன்.
(இப்படி ஒரு ஜோக் இல்லை வார்த்தை விளையாட்டு செய்துவிட்டு அதை ’அதாவது, அதாவது’ என்று அருகிலேயே விளக்குவது தேவை என்கிறார் நண்பர் நல்லெண்ணத்துடன். அப்பதாம்மா படிக்கர சிறுவயசு பசங்களுக்கும் புரியும். அதான் மேலே பலமுறை அதாவது செய்துவிட்டேன். ஆனாலும் எனக்கென்னவோ காதலிக்க நேரமில்லை காஞ்சனா “We don’t see Tamil pictures. We see only English pictures. அதாவது, ஆங்கிலப்படங்களை மட்டுந்தான் பார்ப்போம்” என்று வசனம் பேசுவதுபோல் இருக்கிறது.)
டெமாக்ரட்டிஸ்தான் (Democritus) ஆதிகாலத்திலேயே அணுவைப்பற்றி முதலில் கூறியவர். ஒரளவு துல்லியமாகவும் சொன்னார். உலகிலுள்ள அனைத்து மேட்டரும் அணுக்களால் ஆனது, அணுவின் பலவகை சேர்க்கையில்தான் மனிதனையும் சேர்த்து, பல பொருட்கள் தோன்றியுள்ளன என்றார்.
இப்படி இவ்வுலகம் இயற்கையில் அணுக்களின் கூட்டு மூலம் ஏற்பட்டுள்ளதென்றால் பிரபஞ்சத்தில் வேறு இடங்களிலும் வேறு உலகங்கள் சாத்தியமே. அவைகளும் அணுக்களாலானது. அவற்றில் சில உலகங்களில் சூரிய சந்திரன்கள் உள்ளது. சிலவற்றில் கிடையாது. சிலதில் நம் சூரிய சந்திரர்களைவிட பெரிதான சூரியசந்திரன்கள். இவ்வுலகங்களுக்கிடையே வெவ்வேறு தூரங்கள். சில உலகங்கள் தேய்ந்து வருகிறன, சில வளர்கிறது. சிலது உயிரில் சிறக்கிறது. சில செத்துமடிகிறது. சில தங்களுக்குள் மோதிக்கொள்கின்றன. சிலவற்றில் ஒரு வெங்காயமும் கிடையாது. சிலவற்றில் நம்மைப்போல் மனிதர்கள் இருக்கலாம். இப்படி அடித்தார் ஒரு லாங் ஷாட் ஊகம்.
அது யூகமா ஊகமா என்று சண்டைபோடுவதற்குமுன் டெமாக்ரடிஸின் தர்க்கத்தை யோசித்துப்பாருங்கள்.
இத்தர்க்கத்தை மேலும் பாலிஷ் போட்டவர் டிட்டஸ் லுக்ரேஷியஸ் காரஸ் (Titus Lucretius Carus). கி.மு. 99 முதல் 54 வரை வாழ்ந்த ரோமானிய சாமானியர். புதுக்கவிஞர். அன்றைய அறிவியலை அப்படியே டி ரேரும் நேச்சுரா என்று பெயரிட்டு நெடுங்கவிதையாய் எழுதியவர். டெமாக்ரடிஸின் அணுவைப்பற்றிய கருத்துகளை இக்கவிதையிலும் வலியுறுத்தி, பின்னர் ஏலியன்ஸ் பற்றியும் தொட்டுப்போகிறார். இப்படி:
அணுக்களின் தொகை எண்ணற்றவையெனின்
உயிர்கள் எண்ணமுடிவதைக்காட்டிலும் அதிகமாயின்
இயற்கையின் படைப்பூக்கம் இருந்திடுமாயின்
அணுக்களை சேர்த்தடிக்க – இங்கு சேர்ந்திடுவதைப்போல
பிறகு நீ ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
வேறு வானிடங்களில் வேறு உலகங்கள் இருப்பதை
வேறு மனிதகுலங்கள், விலங்கினங்கள் இருப்பதை
லுக்ரேஷியஸ் ரோமானியில் கவிஞதை, ஆங்கிலத்தில் போயமாக்கியதை (கீழே குறிப்பில் கொடுத்துள்ளேன்), மேலே உள்ளதைப்போல் தமிழாக்கலாம். இரண்டு மொழியாக்க மாறுவேடங்களில் எவ்வளவு கற்பனை நட்டமானாலும், ஓரளவு அவர் தர்க்கம் புரியும்.
மேலே ஏலியபுராணத்தை சொல்வோம்.
1640களில் கலிலியோ டெலஸ்கோப், தொலைநோக்கி, கண்டுபிடித்ததும், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் விட்டு, வியாழனின் நான்கு கோள்களை தொலைநோக்கிவழியே கண்டார். அவற்றில் அயோ (அய்யோ இல்லை Io) கோள் வியாழனை இங்கிட்டிலிருந்து சுற்றி பின்புறம் ஒளிந்து அங்கிட்டாய் வெளிப்படும் காலத்தை ஆறுமாத இடைவெளியில் பலமுறை அளந்து அதைவைத்து ஒளியின் வேகத்தின் மதிப்பை ஓலாஸ் ரோமரும் (Olaus Romer) கிறிஸ்டியன் ஹைஜன்ஸும் (Christian Huygens) கண்டறிந்தனர் (இன்றைய மதிப்பிலிருந்து 20 சதவிகிதம் வேறுபாடு). இப்படியாக வானியல் அறிவியல்துறையாய் ஏற்பட்ட சூழலிலும், ஏலியன்ஸ் பற்றிய கருத்துகளும் அனுமானங்களும் அதிகரிக்கவே செய்தது.
கலிலியோவை அடுத்து அவதரித்த யொஹானெஸ் கெப்லர் தன் கிரகங்களின் சுற்றுப்பாதைகளை நிர்ணயிக்கும் விதிகளை வகுத்துவிட்டு இலவச இணைப்பாய் ஸோம்னியம், கனவு, என்று ஒரு புத்தகம் எழுதினார். அதில் சந்திரனில் மிதமான அறிவுடன் ஊர்வன பல இருக்கிறது என்றார். சூரியனை பார்த்திருக்கும் சந்திர பிரதேசங்களில் வசிப்பவர்களை சன்வோல்வன்ஸ் என்றும் எதிர்புறம் வசிப்பவர்களை ப்ரைவோல்வன்ஸ் என்றும் பெயரிட்டார். சூரியர்கள், அசூரியர்கள். தன் கனவை அத்துடன நிறுத்தவில்லை.
பூமிக்கு சந்திரன் இருக்கிறது. பூமியில் நாம் (உயிர்) இருக்கிறோம். வியாழனுக்கும் சந்திரன் இருக்கிறது (கலிலியோ சற்றுமுன் தன் தொலைநோக்கியில் கண்டறிந்தது). அதனால் அநேகமாக வியாழனிலும் உயிர் இருக்கவேண்டும் என்றார்.
இவ்வகை தர்க்கத்திற்கு ஸில்லோஜிஸ்ஸம் (Syllogism) என்று பெயர். தமிழாக்கம் தமிழில் மட்டுமே எழுதுபவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
ஸில்லோஜிஸ்ஸம் என்றால் இரண்டு உண்மை கூற்றுக்களை ஒரு வகையில் இணைத்து, அக்கூற்றுக்களை சார்ந்து அதுவரை மறைந்திருந்த மூன்றாவதாய் தோன்றும் ஒரு புது கருத்தை முன்வைப்பது. அதாவது நாய் குறைக்கும். பூனைக்கு வால் உள்ளது. இவை இரண்டும் இரு உண்மை கூற்றுகள். ஒரு வகையில் சேர்த்து நாய் குறைக்கும், பூனைக்கு வால் இருக்கிறது. நாய்க்கும் வால் இருக்கிறது அதனால், பூனையும் குறைக்கும் என்று மூன்றாவதாய் ஒரு கருத்தை முன்வைப்பது ஸில்லோஜிஸம்.
அநேகமாக சரியாக வரும். கெப்லர்தான் சொதப்பிவிட்டார்.
கெப்லர் மட்டுமல்ல. மேலே ஒளிவேகஅளத்தலில் குறிப்பிட்ட டச்சு விஞ்ஞானி கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் தன் பங்கிற்கு 1698இல் பதிப்பிக்கப்பட்ட தன் காஸ்மோதெரியோஸ் புத்தகத்தில் பக்கத்து கிரகங்களில் வாசிகள் இருக்கிறார்கள் என்று வாசகர்களை வசியம்செய்தார்.
இப்படியே ஏலியன்ஸ் பற்றி சரியாக நிர்ணயிக்க நிரூபிக்க முடியாமல் முன்னூறு வருடம் கழித்து இன்றைக்கு நூறு வருடங்கள் முன்பிலிருந்து மீண்டும் பக்கத்து கிரகங்களில் ஏலியன்ஸ்களை முனைப்பாய் தேடுகிறோம். முக்கியமாக செவ்வாய் கிரகத்தில். இத்தேடலுக்கும் பல கதைகள் காரணம். நிறைய புருடா. சிலதே ட்ருடா.

1858இல் கிறித்துவ துறவி ஏன்ஜெலோ ஸெக்சி (கவனிக்கவும், செக்ஸி இல்லை; ஸெக்-சி. எதுக்கு வம்பு, அவர் பெயர் Angelo Secchi) செவ்வாயில் தெரியும் தாறுமாறான கோடுகளை கனாலி (கால்வாய்கள் போல) என்று கருதினார். இருவது வருடங்கள் கழித்து வானியலாளர் கியோவானி ஷியாபரெல்லி (Giovanni Schiaparelli) செவ்வாய் மேப் போட்டார். கால்வாய்கள் போல கோடுகளுடன் (மேலே படத்தில்). அப்படியே தத்தி தத்தி கால்வாய்கள் போல கோடுகள் ஆங்கிலத்தில் மறுவி, கோடுகள் அழிந்து, போல அழிந்து, கால்வாய்கள் மட்டும் மிஞ்சியது. செவ்வாயில் கால்வாய்கள்.
செவ்வாயில் கால்வாய்கள் அமேரிக்கர் பெர்சிவால் லொவெல் (Percival Lowell) கற்பனையை பாதித்தது. ஒரு வானியல் மையத்தை ஃபிளக்ஸ்டாஃப் ஊரில் நிறுவினார். செவ்வாயின் கால்வாய்களை ஆராய்வதற்கு. 1900 வாக்கில் லொவெல் செவ்வாயில் உயிர்களை கண்டார். செவ்வாயின் பல பகுதிகளை பல பெரிய படங்களாக வரைந்துதள்ளினார். நீர் நிறைந்த கால்வாய்களுடன். இக்கால்வாய்கள் செவ்வாயின் துருவ பிரதேசங்களிலிருந்து மத்திய பிரதேசங்களுக்கு செவ்வாய்வாசிகள் உபயோகிக்க நீரை கொண்டுவருகிறது என்றார். ஒருவராலும் இல்லை என்று நிரூபிக்க முடியவில்லை. படத்தில் லொவெலின் செவ்வாயில் கால்வாய்கள்.

அச்சமயத்தில் எச்.ஜீ.வெல்ஸ் என்ற இலக்கியவாதி, சாரி, எழுத்தாளர், தன் வார் ஆஃப் தெ வேர்ல்ட்ஸ் (The War of the Worlds) புத்தகத்தை எழுதினார். செவ்வாய்வாசிகள் பறக்கும்தட்டுக்களில் வந்து பூமியை தாக்குவதாக கதை கருவுடன். இக்கதை படித்த மக்களிடையே ஏலியன்ஸ்கள் பற்றி பரபரப்பும், ஆவலூட்டும் தர்க்கங்களையும் ஏற்படுத்தியது. பாதித்தது. எப்படி? 1950களில் ஆர்ஸன் வெல்ஸ் குரலில் இக்கதை ரேடியோ அமேரிக்காவில் வண்ணச்சுடராய் படிக்கப்படுகையில், பயத்தில் பல நகரங்களில் மக்கள் தெருவில் இறங்கி ஓட்டமெடுத்தார்களாம் (நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டனராம்).
இருக்கட்டும், ஏலியபுராணத்தில் செவ்வாயின் இன்றைய நிலை என்ன? அடுத்த கட்டுரையில். ஆனால், பின்கதை சுருக்கமாய் இப்போதே ஓரிரண்டு சொல்கிறேன். லொவெல் சொன்னதெல்லாம் கற்பனை. செவ்வாயில் நீர் கால்வாய்கள் இல்லை. தண்ணீர் இருக்கிறது. ஆனால் நாம் குடிக்கும் பதத்தில் இல்லை. ஐஸ் இருக்கிறது. செவ்வாயில் நம்மைப்போல் கரி-காலர்கள் (மனித உயிர்கள்) உஜ்ஜீவிப்பதற்கு ஏற்ற சூழல், காற்று மண்டலம் கிடையாது. ஆனால் உயிரே இல்லையா என்றால்…
பார்ப்போம், அடுத்து செவ்வாயில் உயிர்.

குறிப்புகள்
1. முஸ்லீம்களுக்கு எழக்கியல் துல்-கிஃபுல் துறவி என்று கருதப்படுகிறார்.
2. Titus Lucretiius Carus (99 – 55 BCE) in his De Rerum Natura writes
If atom stocks are inexhaustible,
Greater than power of living things to count,
If Nature’s same creative power were present too
To throw the atom into unions – exactly as united now,
Why then confess you must
That other worlds exist in other regions of the sky,
And different tribes of men, kinds of wild beasts.
இதுவே அவர் எழுதியதின் ஆங்கிலமொழியாக்கம். The Roman Poet of Science, lucretius: (translated by Alban Dewes Winspear), Harbor Press, NY 1955 புத்தகத்தில் உள்ளது. கட்டுரையில் தமிழாக்கியுள்ளேன்.







