[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் மூன்று கட்டுரையின் ஒரு பகுதி]
பல்லவி என்பது நிச்சயம் வெறும் மெலடி மட்டுமல்ல. பல்லவி கலையும் அறிவியலும் கலந்துசெய்த கலவை. இந்த கருத்துக்கு எனக்கு டாக்டர். எம். வேதவல்லி சப்போர்ட். முதலில் ராகத்தை மெலடியாய் ஆலாபனை செய்துவிட்டு, தானமாய் லயம்சேர்த்து, பிறகு முத்தாய்ப்பாய் ராக, மெலடி லய கணக்கு மிளிர பல்லவி சாஹித்யம் அமைத்து பாடுவதே முறை. சாஹித்ய சாதுர்யங்களும், ராக பிடிகளும், லய கணக்குகளும் மெலடி ரிதம் என போட்டிபோட்டு கலக்கிவருவதுதான் பல்லவி.
சிலருக்கு இந்த ஜிகிர்தண்டா கலவை கடவுள் (மெலடி) பாதி, மிருகம் (லயம்) பாதி போல. பல்லவியில் ஆதிதாளம் தாண்டி, மிஸ்ர ஜம்பை என்றொ, இல்லை இரண்டு களையில் முக்கால் இடம் தள்ளி தொடங்கி த்ரிகாலத்தில் அனுலோமம் செய்தல் என்று லயம் சற்று தூக்கினாலே, ரொம்ப கணக்குவழக்கு சௌக்யமே போச்சு என்று அங்கலாய்ப்பர். இக்கட்சியில் பல இசைவிமர்சகர்களும் உண்டு. உண்மை இவர்களுக்கு பெரும்பாலும் தாளம் போட வராது. இல்லை சில ஆவர்தங்களுக்கு மேல் நிற்காது.
பல்லவியை எப்படி அமைக்க வேண்டும் என்று நியதிகள் நிறைய இருக்கிறது. பொதுவாக பல்லவிக்கு மூன்று அங்கங்கள் இருக்கும். பூர்வாங்கம் (அல்லது ப்ரதமாங்கம்), உத்தராங்கம் (த்துவித்தீயாங்கம்), பதகர்பம் (தமிழில் அறுதி). பூர்வாங்கம் பல்லவியின் முதல் பாகம் (முதல் வரி போல), உத்தராங்கம் இறுதி பாகம். இணைப்பது அல்லது பிரித்துக்காட்டுவது அறுதி. ஒரு தாளத்தில் பல்லவி அமைகிறது என்றால், அறுதி தாளத்தின் ஒரு சுற்றில் நடுசெண்டரில் விழும்.
உதாரணமாய்
ராக தான பல்லவியே | கொண்டு வா பல்வலியே ||
என்று ஆதி தாளத்தில் (8 அக்ஷரம்) இரண்டு களையில் சம எடுப்பில் தொடங்கி ஒரு பல்லவி அமைத்தால், அறுதி, நான்கு அக்ஷரத்தில் தாளத்தின் நடுவில், கொண்டுவில் விழும் (பியூரிஸ்டுகளுக்கு: “கொண்டு வா” அக்ஷர கணக்கு இழுவை என்றால், “ஞான கான” என்று மாற்றிக்கொள்ளுங்கள்).
ஆனால் இது கட்டாயமில்லை. நடுசெண்டருக்கு முன்னரும் பின்னரும் அறுதி இருக்கலாம். இப்படி இருந்தால் பல்லவியின் முதல் பாகமோ இறுதி பாகமோ அடுத்ததைக்காட்டிலும் நீட்டம். அறுதியே வைக்காமல் பல்லவி பாடுவேன் என்றும் சிலர் செய்துள்ளனர். அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதுடன் விட்டுவிடுவோம் (இது என் சப்ஜெக்டிவ் ஒப்பீனியன், அகவயமான கருத்து).
ஏகப்பட்ட விதிகள் உள்ளது போலிருக்கே. என்னப்பா இது கேட்பதற்குமுன்னே இவ்வளவு மண்டைக்குள் ஏற்றவேண்டுமா என்றால், பல்லவி சுலப செய்முறையும் உள்ளது. பார்ப்போமா.
ஒரு மூடி போட்ட காலி பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக குலுக்கி, திறவுங்கள். என்ன வரும்? நிறைய நாய்கள். ஏனென்றால், எம்ப்டி வெஸல்ஸ் கிரியேட் மோர் நாய்ஸ்.
சரி, நாய்கள் வெளியேறியதும், மால்ட்டொவாவில் இருக்கும் மால், பக்கத்தில் (அருகில்) பக்கத்தில் இருக்கும் தாள், தீக்ஷதர் முத்திரையான குருகுஹா, தமிழுக்காக முருகா அல்லது மால்மருகா, பழந்தமிழுக்காக ஷண்முகா (புதுத்தமிழில் டண்முகா?), பெண்களை கவர வள்ளிமணாளா என்று சொற்களை பாட்டி(லி)ல் அடைத்து, துணிமேலிட்ட மூடி போட்டு குலுக்கினால் கால்மணியில் பல்லவி திரண்டுவிடும்.
முருகா, மால் மருகா, குருகுஹா, ஷண்முகா
வள்ளிமணாளா, வேல வா,
இப்படி. கடைசி வேலவா வை வேல வா என்று பிரிப்பது முக்கியம். ஏன் என்று படிக்கையில் விளங்கும்.
இது பிடிக்கவில்லை என்றால், பாட்டிலி(லி)ருப்பதை பாத்திரத்தில் கொட்டி, முத்து, குமரா, கந்தா, செந்தில், நாதா, வடி, வாடி, ஆடி, ஓடி, சரவணபவா, மயில், மா, வா, தா, ஆ, அன், என்று வேறு பதார்த்தங்களை சேர்த்து, இம்முறை மிக்ஸியிலிட்டு கலக்குங்கள். இப்போது
முருகன், முத்துக்குமரன், செந்தில்வேலவன்
சரவணன், குஹன், சரவணபவ வடிவழகன்
என்று வரலாம். கச்சேரியில் பாடும்முன் ஏவிஎம் ஸ்டூடியோவில் காப்பிரைட் பிரச்சனை வராதே என்று கேட்டுக்கொள்ளுங்கள்.
இப்படியாக உதிக்கும் பல்லவிகளை பிறகு, ஆதி, கண்ட ஜாதி திரிபுடை என்று ஏதோ ஒரு தாளத்தில் பொருத்தி, ஒரு ராகத்தில் மெட்டமைத்து பாடவேண்டும். இதற்கு முன்னர் கூறியபடி, தானம் தெரிந்திருந்தால் கைகொடுக்கும். இல்லை பல் வலிக்கும்.
மேலும், வார்த்தைகளை போட்டு தாள நேரம் மொத்தத்திற்கும் அடைத்து அந்தண்டை இந்தண்டை இசைவைத்து இழுத்தாலும் இசைந்துகொடுக்காமல் பல்லவி அமைத்தால் அதற்கு யதி பல்லவி என்று பெயர். பெரிதாக நிரவல் செய்யமுடியாது. பல்லவி வாக்யத்தை பாடிவிட்டு முடித்துகொள்ளவேண்டியதுதான். கணக்கு காட்ட முடியாது. பல்லவி பாடிவிட்டேன் என்று வேண்டுமானால் கணக்கு காட்டலாம்.
குறையாய் தெரியவேண்டிய இது இன்று சில மேடையஸ்தர்களுக்கு நிரை. சுருக்க பல்லவி பாடிமுடித்துவிடுவார்கள்.
சரி, கம்போஸிங்கில் அவ்வப்போது தானம்-ஞானம் மிக்ஸி ஓவராய் கிடைந்து
மாதவன் மருகா, மாமயில் முருகா, எனையாளவா
வடிவேலவா, ஓடிவா, விரைந்தோடிவா
என்றும் வந்தால், நீர் கொடுத்துவைத்தவர். விரைந்தோடிவாவில் பொடி வைத்து, தோடி ராகத்தில் அமைத்து சங்கீர்ன திரிபுடை (9+2+2=13 அக்ஷரம்) தாளத்தில் பாடலாம் (நிஜந்தான்).
ஆனால் ஒன்று. பல்லவியில் ஆக்ஷன் வெர்ப், வினைச்சொல் இருக்கவேண்டும் என்று ஒரு நியதி. அதுபடி வரிசையாய் பெயர்ச்சொற்களாய் மேலே மிக்ஸியில் ஆட்டி வெறுமனே கூட்டிச்சொன்னதெல்லாம் பல்லவியாகாது. அதற்காகத்தான் இப்படி வேல வா, ஆடிவா, ஓடிவா, விரைந்தோடிவா, என்றும், முடியவில்லை என்றால் வெறுமனே வா என்றும் ஜல்லியடிப்பது.
அப்படியே போய் சைக்கிள் ஏறிவா, ஸ்கூட்டர் ஓட்டிவா, 12பி பஸ் பிடித்துவா என்றெல்லாம் பாடலாம். எல்லாம் ஆக்ஷன் வெர்ப்தானே.
ஏனெனில், “கத்தரிக்காய் வாங்க வாயேண்டி தோழி”, “உப்புமா கிண்டடி பெண்ணே, நன்றாக” என்றெல்லாம் ஒம்மாச்சி அற்ற பெயர்சொற்களுடன், சரியான வினைச்சொல்லுடன், டைகர் வரதாச்சாரியார் 1920களிலேயே பல்லவி அமைத்துப்பாடியுள்ளதாக தெரிகிறது. அவருக்கு (ம், பெரும்பாலான அவர் தலைமுறையினருக்கும்) சங்கீதமே பிரதானம். சாஹித்யம் சாதாரணம். கேட்டவர் சொல்லிக் கேட்டவர் சொல்வதை கேட்டுச் சொல்கிறேன்.
அதேபோல் ஒம்மாச்சி, மனித பெயர்சொல்தான் பல்லவியில் வரவேனும் என்றில்லை,
குத்தாலத்து குரங்கே | மரத்தை விட்டிறங்கே ||
என்றும் வினைச்சொல்லுடன் பல்லவி அமைக்கலாம். அமைத்திருக்கிறார்கள், பைரவி ராகத்தில், ஆதி தாளத்தில் (ஆதாரம்: பக்கம் 49, சவுத் இண்டியன் மியுசிக், பாகம் 4, சாம்பமுர்த்தி)
மேலுள்ள பல்லவியை யாரராவது கச்சேரியில் பாடினார்களா தெரியவில்லை. ஆனால், அதற்கு முன் மிக்ஸி வைத்து கிடைந்த நம் பல்லவிகள் பலதை பலர் அவரவர் திறனுக்கேற்ப தற்கால கச்சேரிமேடைகளில் பாடியுள்ளனர்.
*****
மிச்சத்தை சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் மூன்று கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள். பல்லவி பற்றி வரலாறும், சில உதாரண ஒலிக்கோப்புகளும் விளக்கங்களும் உள்ளது.







