செம்மொழிப்பிரதேசங்களான குறிஞ்சி, முல்லை, கோவை, திருமாலிருஞ்சோலை அடுத்து ஏலியன்ஸ் மற்றும் ஏலியன்ஸ் சார்ந்த அறிவுப்பரப்பிற்கு ஏலியன்சோலை என்று பெயர். பின்இணையத்துவ நவீனத்தமிழ் சொல்லாக்கம் என்றால் இலக்கிய நெடி கமழலாம். ஆனால் இது ஒரு இலக்கிய கற்பனை வரண்ட பிரதேசம். கேளிக்கை விஞ்ஞானப்புனைவுகள் கட்டட்ற காளானாய் தோன்றிச்செழிக்கும் வெறும் அறிவுத்துறை. இப்பரப்பை பற்றிய கதைகள் கட்டுரைகளில் படைப்பூக்கம் கம்மி. எழுதுபவர்களும் வெறும் மனிதர்களே. ஏலியன்ஸ்கள் இல்லை.
வாசிப்பவர்களை பற்றி இன்னமும் முடிவாகவில்லை.
ஈதிப்படியிருந்தாலும், அன்றாட பயன்பாட்டிற்கு, மனிதர்களாய் நாம் ஏலியன்ஸ் – அந்நியர்கள் – பற்றி ஒரு அறிவார்த்தமான கருத்துகொள்வதற்கு பல விஷயங்களை பலவருடங்களாக இத்துறை அறிவியல் செட்டியார்கள் (SETI-யார்கள் ) திறம்பட கற்பனைசெய்திருக்கிறார்கள். அநேகமாக சாமன்யர்க்கும் புரியும் எளிமையான அறிவியல் சிந்தைகளே.
குன்சாய் தெரிந்துகொண்டு அதைவிட குறைவாய் தெரிந்துள்ளவர்களிடம் அறிவார்த்தமாய் கதைவிடவும், நம்மைவிட அதிகம் தெரிந்தவர்கள் பேசுகையில் புரிவது போல தலையாட்டவும் இணைய விஷயங்கள் போதும். வல்லுனராகும் அளவிற்கு விவரமாக தெரிந்துகொள்ள வேண்டுமெனில் இணையம் மட்டும் பத்தாது. சில அச்சிட்ட புத்தகங்களையும் கட்டாயம் படிக்கவேண்டும். என்ன, விஷயம் மொத்தமாக ஆங்கிலத்தில் இருக்கும். படித்து, தமிழில் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு தொடக்கத்திற்கு இங்கே குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை சார்ந்து இணையத்திலும் புத்தகங்களிலும் தேடிப் படிக்கலாம். உங்கள் விரயநேரத்தைப் பொறுத்து உங்கள் ஏலியன்ஸ்-துறையறிவு நிர்ணயமாகும்.
இப்படி ஏலியன்சோலை புரிதலை வளர்த்துக்கொண்டால் மனித அறிவுத்துறை மேம்பாட்டையொட்டி சில நிச்சய சம்பவங்கள் நிகழலாம். (சம்பவங்களே சிலருக்கு நிகழ்வாகலாம்).
உதாரணமாய் செவ்வாய் சனி நவக்கிரகங்களே; நம்மை (பூமியை) அவை சுற்றவில்லை, நாம்தான் அவைகளை (கோவில்களில்) சுற்றுகிறோம் என்று திடமாய் நம்பும் பா(ர்)ட்டிகளிடம், இவ்வார்த்தைகளை புரிதல்களை வைத்து ஜல்லியடிக்கலாம். சிலர் கேட்டுவிட்டு காசுபோடலாம். பலர் போடா போக்கத்த பயலே என்று இலக்கியம் படிக்க எழுந்துசெல்வர்.
ஏலியன்சோலையின் எதிர்விளைவாய், இலக்கியம் வாசிக்க ஆள் சேர்த்த புண்ணியம் உங்களைவந்தடையும்.
ஏலியன்சோலை பற்றிய முதல் சுற்றிற்கு தேறும் ஒரு இருபது முப்பது வார்த்தைகள் கீழே கொடுத்துள்ளேன். இவைகளில் சிலவற்றை ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் விளக்கியுள்ளேன். [ இங்கு பாருங்கள் - ஏலியன்ஸ் இருக்கிறர்களா: ஒன்று இரண்டு மூன்று ]
மற்றவைகளை வரும் பதிவுகளில் விளக்கமாக எழுதப்போகிறேன்.
ஏலியன்சோலைபற்றி ஆங்கிலத்திலிருந்து இணையத்திலும் புத்தகங்களிலும் தேடிப்பிடித்து படித்து முடிந்தவரை எளிமையாய், தமிழில், இல்லை வேண்டாம், எதுக்கு ரிஸ்க், தமிழ்சார்ந்த ஒரு புரிகிற பேச்சில், சொல்வது என் வேலை.
துரதிருஷ்டவசமாய், வாசிப்பது இணையத்தில் இதுவரை வந்துவிட்ட உம் விதி.
அதனால் இப்போது ஒரு வேண்டுகோள்: படித்த கொதிப்பை மறக்க, மறக்காமல் விளக்கங்களில் எழும் சந்தேகங்களை தவறுகளை, தவறாமல் பின்னூட்டங்களில் குறிப்பிடுங்கள். ஒரு Tit for tat என்று இருக்கட்டுமே (எதற்கும் பின்னூட்ட விதிகளையும் பார்த்துக்கொள்ளுங்கள்).
இனி, ஏலியன்சோலையிலே…

1. மனிதர்கள்: டிடஸ் லுக்ரேஷியஸ் காரஸ் (கி.மூ. ஆள்), ரெவரெண்ட் தாமஸ் டிக் (1600களில்), யொஹனெஸ் கெப்லர் (கிரகங்களின் சுற்றுப்பாதையை நிர்ணயித்தவர், ஏலியன்ஸ் பற்றியும் பேசியுள்ளார்), பெர்சிவால் லொவெல் (செவ்வாயில் கால்வாய் (கதை) ஓட்டியவர்), குக்லியல்மோ மார்கோனி (ஜெகதீஸ் சந்திரபோஸின் புகழை தற்செயலாய் அபகரித்த ரேடியோ அறிவியலாளர்), எச்.ஜீ.வெல்ஸ் (எழுத்தாளர், கதைவிடுபவர், இலக்கியவாதியன்று), கார்ல் சாகன், பிரான்சிஸ் டிரேக், பால் டேவிஸ், ஸ்டீபன் ஹாக்கிங், டேவிட் பிரின் (இவர்களையெல்லாம் ஏற்கனவே ஏலியன்ஸ் கட்டுரைகளில் அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளோம் – சுட்டி கீழே), ஆர்தர் க்ளர்க் மற்றும், பல விஞ்ஞானபுனைக்கதையர்கள், சிந்தனையாளர்கள், நீங்கள், நான், விக்ரம் (அந்நியன், ஏலியன்), ஏலியன்ஸ் (அந்நியர்கள், அதாங்க நமக்கு தெரியாத மனிதர்கள்)…
2. ஏலியன்ஸ்கள்: ஆண்டிரோமிடான்கள், டிரோப்பா, ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன், நைட் ஷியாமளன் போன்றோரின் ஏலியன்ஸ்கள், ஊர்பவர்கள் (ஊர் மேய்பவர்களன்று, பாம்பு பல்லி என ஊர்வன போல் உடல் உள்ளவர்கள்), சிரியன்கள் (சிரியஸ் நட்சத்திரத்துடன் சம்பந்தம். சிரிப்பார்களா என்று இதுவரை தெரியாது), குள்ள கேசரி (hairy dwarfs), டக்ளஸ் ஆடம்சின் அறிவுள்ள நீலக்கறை, டெர்ரி பிராட்செட்டின் வட்டுலக வாசிகள், மற்றும் நியூயார்க்கர்கள் (தெருவில் எதிர்படுகையில் சட்டென்று பார்த்தால் பெரும்பாலானவர்கள் ஏலியன்ஸ் போலவே இருப்பார்கள்)
3. துறைகள்: அஸ்ட்ரோபயாலஜி, எக்ஸோதியாலஜி, எக்ஸோஜெனிஸிஸ் இப்படி உலகிலுள்ள துறையை முன்னாடி எக்ஸோ சேர்த்து ஏலியன்ஸ் பற்றிய துறையாக்கி படிப்பது, ரேடியோ வானவியல், வின்வெளிப்பயணம், வசிக்கத்தக்க கிரகங்கள்
4. கொள்கைகள்/சித்தாந்தங்கள்: டிரேக் சமன்பாடு, ஃபெர்மி முரண்மெய் (இவற்றை ஏற்கனவே தொட்டிருக்கிறோம்), மத்தியமர் கொள்கை, கர்டஷாவ் அளவை (சமுதாயத்தின் அறிவுமுதிர்ச்சியை அளப்பது), டைசன் உருளை (நட்சத்திரத்தின் ஆற்றலை உறிஞ்சும் ஐடியா), ஏலியன்ஸ் தொடர்பு, ரேடியோ தொடர்பு, நிழல் உயிருருளை (shadow biosphere), சிந்தெட்டிக்கா (செயற்கை உயிர்?), பான்ஸ்பெர்மியா, ஆரீலியா மற்றும் நீல நிலா
5. நிகழ்வுகள்/பொருள்கள்: ALH84001 (எரிகல்லின் பெயர்), யூ.ஃப்.ஓ.க்கள், பறக்கும் தட்டு, வாவ் சிக்னல் (ஆ! சமிஞ்சை), அரசிபோ (ரேடியோ வானியல் ஆராய்ச்சி மையம்), அரசிபோ சமிஞ்சை செய்தி, ஆலன் டெலஸ்கோப் அணிவகுப்பு, பயொநீர் பட்டயம், வாயேஜர் வட்டு, ஹப்பிள் டெலஸ்கோப், செவ்வாயில் உயிர், செவ்வாயில் நீர், டைட்டனில் நீர், க்ளைஸி 581 c மற்றும் d (கிரகங்கள்), ஏரியா 51 (அமேரிக்காவில் ரகசியமாய் வைக்கப்பட்டுள்ளதாய் நம்பப்படும் ஏலியன்ஸ் ஆராய்ச்சிதளம்)
6. துறைவார்த்தைகள்/இயக்கங்கள்: எக்ஸோ-கிரகங்கள், பல்சார், மகா வடிகட்டல், ஹைப்பர்ஸ்பேஸ், காலப்பயணம், விண்வெளிக்கப்பல், ஃபோட்டான் டிரைவ், ஹைபர்னேஷன், ஒளிவேகப்பயணம், டாக்கியான்கள், நாஸா, SETI என்று எழுதப்படும் செட்டி, CETI என்று எழுதப்படும் செட்டி, SETI @ home எனப்படும் வீட்டில் செட்டி, மெட்டி (METI) மற்றும் வெட்டி (இது தமிழ் வார்த்தை)








