«

»

ராகம் தானம் பல்லவி – சில பதில்கள்

[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் இரண்டு கட்டுரையின் ஒரு பகுதி]

ராகம் தானம் பல்லவி பற்றிய என் சொல்வனம் கட்டுரை முதல் பாகத்தில் எனக்கு தெரிந்தமட்டில் மூன்று பிழைகள் இருந்தன. எம்.எஸ்.ஷீலா கர்நாடகா. வாக்கியத்தில் ஆந்திரப்பாடகர்களுடன் சேர்த்துவிட்டேன். ஆனாலும் அவரும் அநேக கச்சேரிகளில் ரா.தா.ப. பாடுவார். 1965 கலாநிதி ஆலத்தூர் வெங்கடேச ஐயர் என்று குறிப்பிட்டுவிட்டேன். சரியானது ஆலத்தூர் சகோதரர்களே. அதைப்போல அரியக்குடி ஐம்பதுகளில் (1950) கொண்டுவந்த கச்சேரி பாணி என்று எழுதியிருந்தேன். 1930 40 களிலே அவர் அதைசெய்துவிட்டாராம். முன்னூறு வயது மதிக்கத்தக்க என் இசைநண்பர் குட்டுகிறார். மகிழ்ச்சி.

ஆனால் பல்லவி பட்டமாள் என்று பலராலும் அழைக்கப்பட்ட டி.கே.பட்டமாள் பற்றி பெண்களும் பல்லவியை லயப் பிடிப்புடன் பாடி ப்ராபல்யப்படுத்தமுடியும் என்று காட்டினார் என்ற என் கருத்து அவ்வளவு தவறானது இல்லை. நான் கூறுவது பல்லவி மட்டும். கர்நாடக இசையை மேடையில் பாடிய முதல் பெண்மணி என்பதுபோல் இல்லை (ஆனாலும் அவரே கர்நாடக இசையை மேடையில் பாடிய பிராமண குலத்தை சேர்ந்த முதல் பெண்மணி). மேலும், தானம் வீனை தனம்மாள் கூட நன்றாக செய்திருக்கிறார். பிறகு கீர்த்தனை வாசித்துவிடுவார். பட்டமாளுக்கு சமகாலத்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியும் ரா.தா.ப.. செய்திருக்கிறார். ஆனால் பட்டமாளுக்கு இருந்த லய  ஞானத்திற்காகவே அவருக்கு மிருதங்கம் வாசிக்க விழைந்தவர் பால்காட் மணி (உறவினராக இல்லை). இதை பட்டமாளும் பேட்டியில் கூறியிருக்கிறார் (ஆதாரம் பக்கம் 255, The Shaping of an Ideal Carnatic Musician, by Pantula Rama,Gyan Publishing House).

முன்கட்டுரை ராகம் தானம் பல்லவியை ஏற்கனவே இசை தெரிந்தவர்களுக்காகத்தான் அறிமுகம் செய்கிறது. அதில் சந்தேகம் வேண்டாம். எவ்வளவு தெரியவேண்டும் என்பதில்தான் அபிப்பிராயபேதம். சில சங்கேதவார்த்தைகள் புரிதலுக்கு இடையூறு போல் தோன்றும். உதாரணமாய், நான் எழுதியிருப்பதை மேற்கோளிட்டு இப்படி ஒரு கேள்வி வருகிறது.

நான் எழுதியிருந்தது: பொதுவில் சௌககாலத்தில் ராகத்தை மெதுவாய் விஸ்தரித்து ஆலாபனை செய்திருக்கையில், மத்தியமகாலத்தில், அதாவது மிதவேகத்தில் தானம் செய்வது ஸொஸ்தமானது.

கேள்வி: இதை நீங்களே படித்துப் பாருங்கள். எனக்கு செளககாலம் என்றால் என்னவென்று தெரியாது. ஸொஸ்தமானது என்றால்? சுகமானதா? இந்த வரியில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை.

என் பதில்: சௌககாலம் புரியவில்லை என்றால் அவ்வார்த்தையை விடுத்து படித்தாலும் மேலுள்ள வாக்கியம் ஒரளவு புரியும். சௌககாலத்தில் வார்த்தைக்கு இரண்டு வார்த்தைகள் தாண்டி மெதுவாய் விஸ்தரித்து என்று குறிப்பிட்டபின்னும், சந்தேகம் வருவதெல்லாம் சற்று மிகை. சௌககாலம் என்றால் மெதுவாக. எவ்வளவு மெதுவாக என்று இப்போது சந்தேகம் வரும். அதேபோல மத்தியமகாலத்தில் என்றால் அடுத்து வரும் மிதவேகத்தில் என்பதுதான் பொருள். இது உறுத்தாமல் துறைவார்த்தைகளை கேட்பவர்களுக்கு, வாசகர்களுக்கு, தரும் உத்தி.

போன கட்டுரையில் ஷட்காலம் த்ரிகாலம் என்பது புரியவில்லை என்றால் சரி. இன்னமும் இவற்றை விளக்கவில்லை. ஆர்வமூட்டவே தூவியிருந்தேன். வரும் பாகங்களில் நிச்சயம் விளக்குவேன். ஸொஸ்தமானது என்றால் சுகமானதா என்றால் ஆமாம் சுகமானதுதான். ஏன் சுகமாய் இருக்கவேண்டும் என்றால் கச்சேரி போய் கேட்கையில்தான் தெரியும்.

இசையை படித்தே புரிந்துகொள்ளமுயல்வது, நீச்சலையோ சைக்கிளோட்டுவதையோ புத்தகத்தில் மட்டுமே படித்துவிட்டு கற்க எத்தனிப்பதைப்போன்றது. சைக்கிளோட்டுவது எப்படி என்ற புத்தகத்தில் சைக்கிளைபற்றி ஹாண்டில்பார், பால்ரஸ், பெடல் என்று அன்றாடம் அதுவரை பேசும் மொழியில் இல்லாத சில சைக்கிள் ஓட்டும் துறை சார்ந்த வார்த்தை பிரயோகங்கள் இருந்தே தீரும். ஹாண்டில்பார் என்றால் என்ன என்று சந்தேகம் வரலாம். சைக்கிள் பற்றி தெரிந்தவரிடம் கேட்டுதெரிந்துகொள்ளலாம்.ஆனால் விளக்குபவர் சைக்கிள் முன்னாடி வளைந்து கையால் பிடித்துகொள்வதுபோல் இருக்குமே என்று விளக்குகையில் அவர் கேள்விகேட்பவர் சைக்கிளை ஏற்கனவே பார்த்திருப்பார் என்றே விளக்குகிறார். இல்லையெனின் இவ்வகை விளக்கம் வீண். அதுபோல்தான் என் ரா.தா.ப.. கட்டுரை அறிமுகமும். கர்நாடக இசை சற்றேனும் கேட்டிருக்கவேண்டும். ராகம், ஆலாபனை ஸ்வரங்கள், தாளம் போன்ற வார்த்தைகளின் இசை அர்த்தங்களுடன் பரிச்சியம் இருக்கவேண்டும். ரா.தா.ப.. என்பதை மட்டுமே விளக்குகிறேன். கர்நாடக இசையையே அல்ல.அதையும் செய்யலாம், ஆனால் தனிக்கட்டுரைகளில்.

அதனால், சிலவார்த்தைகள் புரியவில்லை என்றால், கவலையின்றி, அவ்வார்த்தைகளை விட்டுவிட்டு நம்பிக்கைவைத்து சைக்கிளை குரங்குபெடல் அடித்தாவது ஓட்டிப்பாருங்கள். முடிந்தவரையில் கட்டுரையை அப்படித்தான் அமைக்கமுயல்கிறேன். ஆனால் கூடவே உங்கள் பங்கிற்கு ரா.தா.ப. வருகிற சில கச்சேரிகளுக்கு நேரடியாக செல்லுங்கள் (சேஷகோபாலன், சஞ்சய், ரவிகிரண், காயத்ரி, டி.எம்.கிருஷ்ணா போன்றோர் அநேக கச்சேரிகளில் செய்வர்). வயதான தாத்தா பாட்டிக்கள் அருகில் அமருங்கள். இதுதான் ரா.தா.ப. வா என்று தயங்காமல் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள். இல்லை ஒத்தவயதுடைய இசைநண்பர் அழைக்கையில் ஒரு கச்சேரிக்காவது உடன் செல்லுங்கள். அவரை கேட்கவிடாமல் சன்னமாய் கேள்வி கேட்டுதுளையுங்கள். கை தட்டுகையில், ஆஹா பேஷ், உச் உச் என்கையில், ஏன் எதற்கு எந்த விஷயத்தை பாரட்டுகிறாய் என்று கேட்டு (அவர் மேடையில் இசையை ரசித்திருக்கும் பட்சத்தில்) தெரிந்துகொள்ளுங்கள். சைக்கிளோட்டுவதுபோல சில சிராய்புகளுக்குப்பின் கர்நாடக இசை கேட்பது நிச்சயம் பிடிக்கும். ஒரே முக்கிய தேவை பொறுமை. மீண்டும் இக்கட்டுரைகளை படிக்கையில் ரா.தா.ப. அறிமுகம் புரிதலை மேம்படுத்த உபயோகமாகலாம்.

சிலவற்றை விளக்காமல் விடுவதற்கு அடுத்த காரணம், நான் இங்கு எழுதுவது அனைத்தையும் பாடமாக விளக்கி நூற்றாண்டுகளாக ஏற்கனவே பல  இசைப்புத்தகங்கள் உள்ளன. மொத்தத்தையும் ஒரே (அல்லது மூன்று நான்கு) கட்டுரையில் இங்கு என்றால், என்றால் என்று விளக்குவதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முற்படுவது சரியல்ல. கூடவே இசையை கச்சேரியில் சென்று நிறைய கேட்கவேண்டும். மேலும் அப்படி விளக்க முற்பட்டால் நீ பெரிய குடுமியா, கர்நாடக இசையை காலை காப்பியில் கலக்கி அடித்த இவனாட்டம் ஜெர்க்விட்டு போரடிக்கிறாப்போல பாடம் நடத்தரே என்று அயர்ச்சியில் எண்ணவைக்கும்.

இப்போது, போன வரி சுஜாதா எழுதுவதைபோல் உள்ளது, சுஜாதா போல வாக்கிய விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதை விட்டு, விஷயத்தில் கவனம் செலுத்தினால் என்னைப் போன்ற தற்குறிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று ஒருவர் எழுதுகிறார். அடுத்தவர், இசையை பற்றி எழுதினாலும் உங்கள் நடையும் பிய்து ஒதறுகிறது சார், படித்துவிட்டு எனக்கு இப்போது இசையை எழுதவே தயக்கமாய் உள்ளது என்கிறார்.

இ ருவகை கருத்துள்ளவர்களும் என் கட்டுரையை வாசிப்பதற்கு வந்தனம். தமிழர்களின் கலைப்பொக்கிஷமான கர்நாடக இசை, கட்டுரை வார்த்தைகளின் பாதிப்பை தாண்டியது. என் குறை எழுத்து ஏற்படுத்தும் சாதக பாதக மனக்கிளர்ச்சியை விடுத்து, ஊடுருவி, இசையை மட்டும் அணுகுங்கள். அதுதான் நிஜப்பயன்.

*****

மிச்சத்தை சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் ராகம் தானம் பல்லவி – பாகம் இரண்டு கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள் (தானம் பற்றி விளக்கியிருக்கிறேன்).

Print Friendly

இவைகளையும் படிக்கலாமே:

  • சார்ந்த பதிவுகள் வேறெதுவுமில்லை

Permanent link to this article: http://www.ommachi.net/archives/2034