[சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் ஒன்று கட்டுரையின் ஒரு பகுதி]
ஆழ்வாரின் கிளரொளி இளமையொத்த தற்கால கச்சேரி மூட்டைகளில் வழக்கொழிந்துபோய்கொண்டிருக்கும், கர்நாடக சங்கீதத்திற்கு இன்றியமையாத அங்கங்களில் ஒன்று, ராகம் தானம் பல்லவி. சுருக்கமாக RTP.
ஒரு நூற்றாண்டிற்கு முன் ராகம் தானம் பல்லவி தான் கச்சேரியை தொடங்கியதாம். பல வேளைகளில் ஒரே RTPயே மொத்த கச்சேரியாகவும் வியாபித்து பரிமளிக்கும். ஆனால் இக்கால – முக்கியமாக, சென்னை டிசெம்பர் சீசன் – கச்சேரிகளை கவனித்தால், பெரும்பாலும் இப்படி அமைந்திருக்கும். 1 வர்ணம், 1 சப் மெயின், 1 மெயின் உருப்படி், 1 சொதப்பல் முயற்சி (புது ராகம், இல்லை கீர்த்தனை), 1 அபார முயற்சி (அந்த சீசனிற்கு கலைஞரின் உழைப்பு), 3 துக்கடா, 2 பஜன், 1 மங்களம் (ரசிகர்கள் எழுந்து செல்வதற்கான பின்னனி இசை) ஆகிய பத்துப்பாட்டு. இவ்வகை கச்சேரிகள் அனைத்து தர கர்நாடக ரசிகர்களையும் திருப்தி செய்யும், இரண்டரை மணி நேர, தலை கலையாத, நேர்வகிடு சமாச்சாரங்கள்.
நகர வாழ்கையின் அவசர கதி சிலுவையில் அறையப்பட்டுள்ள இக்கச்சேரிகளில் விஸ்தாரமான இரண்டு மணிநேர ராகம் தானம் பல்லவியை எதிர்பார்ப்பது அறிவியல் துறைகளில் இந்தியாவிலிருந்தபடியே இந்தியர் நோபல் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு ஒப்பானது. என்றாவதே நடக்கலாம்.
இத்தேய்மானம் ஒன்றும் புதிதல்ல. ஒருவிதத்தில் தற்கால சங்கீதகச்சேரி என்ற அமைப்பே அரியக்குடியார் ஐம்பதுகளில் (1950) கொண்டுவந்த கர்நாடக சங்கீத தேய்மானம்தான். இதனால் விஸ்தாரமாய் நுணுக்களை கவனித்து கேட்டு புரிந்துகொள்ளுமாறு மணிக்கண க்கில் ஒருசில கீர்த்தனைகளையும் ராகங்களை மட்டுமே பாடிவந்த முறை க்ஷீனித்தது என்பர்.
நாள் முழுக்க சில பாட்டுக்களே விஸ்தரித்து பாடி, நுணுக்கங்களை அனுபவிப்பதற்கான உல்லாச நேர அவகாசங்களும், சங்கீதக்கலையைத்தான் பொழுதுபோக அனுபவிக்கவேண்டும் என்ற தேவைகளும் தொழில்நுட்ப விழிப்புற்ற மக்களிடையே குறைந்து வருகிறது. சில பாட்டுக்களை மட்டும் பாடி, கர்நாடகசங்கீதத்தை கேட்கும் மக்கள் எண்ணிக்கையை போரடித்தே குறைக்கக்கூடாது என்றுதான், விஸ்தாரமான யானைக்கட்டி போரடித்தால் ரசிகர்க்கு மாளாது என்று துரித குதிரைகட்டி போரடிக்கப்பார்த்து, மூன்று நான்கு மணிநேர பலசரக்கு உருப்படிகள் அடங்கிய கச்சேரி என்று அரியக்குடியார் கொண்டுவந்தார்.
மேலும் சில மணி நேரங்களே பிடிக்கும் கச்சேரி முறையில் கலைஞர்கள் சங்கீதத்தை ஊர் ஊராய் சென்று வயிற்றுப்பொழைப்பாக செய்ய முடியும். மாதத்தில் பல கச்சேரிகள் செய்யலாம்.அதேபோல் இசை கேட்கும் ரசிகர்களும், குவித்து, பாத்திகட்டி சாம்பார்சாதத்தை மட்டுமே வெட்டி நாக்கு செத்துபோய் சாப்பிடுவதையே குறைத்துக்கொள்ளாமல், இலையில் பல பதார்த்தங்களை பார்க்கையில் பசி வள ரும்.சில புரியாத பதார்த்தங்கள் இருந்தாலும், புரிபவையும் இருப்பதால், விரும்பி பலமுறை சாப்பிடுவார்கள்.
இக்கச்சேரி அட்டவணையை எழுபது என்பதுவரையில் டெஸ்ட் மாட்சுகளாக விஸ்தரித்து ஆடிவந்தவர்கள், சமீபகாலங்களில் ஐந்து நாள் டெஸ்ட் மாட்ச் பாணி கச்சேரியை வழக்கொழித்து, ஒருநாள் ஆட்டமாக்கி, இப்போது டுவெண்டி டுவெண்டியில்தான் காசு புரள்கிறது, என்று சுருக்கியுள்ளனர்.
கச்சேரிகளை மட்டும் நம்பி பொழப்பை நடத்தும் வித்வான் பாப்புலராக இருக்கவேண்டுமெனில் சில அநாவசியங்களை, அனுசரித்தல்களை இன்று செய்யத்தான் வேண்டும் என்பது ஒரு கூற்று. கூடவே சில அவசியங்களை தேவைக்கதிகமாய் செய்யாமல் போகிறார்கள். ராகம் தானம் பல்லவியை பாடாதது போல.
(RTPஐ) அவாளே வேண்டாம்னுட்டா சார், அதுக்கு பதிலா துக்கடா செட் பாடிட சொல்லிட்டா என்று வித்வான்கள் கூறும் சால்ஜாப்பில் ஓரளவு உண்மையுமிருக்கிறது. சீசன் சமயத்தில் பல சபாக்களில், ராகம் தானம் பல்லவியை வித்வான் கச்சேரியின் அங்கமாய் விஸ்தாரமாய் பாடுவதற்கு, காரியதரிசிகள் முகம் சுளிக்கிறார்கள். வியாபார நேர விரயம் என்று.
ஆந்திராவில் பொதுவில் இப்படி இல்லையாம். இங்கு கச்சேரிகளில் நிச்சயம் பல்லவி பாடுகிறார்கள். ஒருவேளை டிசம்பர் சீசன் எனும் கமர்ஷியல் அளவுகோல் இல்லை என்பதாலா? இன்னொரு கூற்று ஆந்திராவில் கர்நாடக இசை கேட்கும் மக்கள் தமிழ்நாட்டைவிட கம்மி, ஆனால் சுத்தம்; சாஸ்திர இசை நீர்க்கடிக்கப்படுவதை விரும்புவதில்லையாம். பல்லவிகளும் இன்னமும் பிழைக்கிறது. சமீபகாலமாக நான் கேட்டுவரும் ஆந்திர பாடகர்கள் பந்துலராமா, எம்.எஸ்.ஷீலா, மண்டா சுதாராணி என்று அனைவரும், மேலேயுள்ள கூற்றை மெய்பிக்குமாறு, தங்கள் அனைத்து கச்சேரிகளிலும் பல்லவி பாடியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பல கச்சேரிகளில், கூட்டம் சேர (இல்லை அடுத்தமுறை வர) அநேகரை திருப்திபடுத்தவேண்டும். இதற்காக கடினமான விஷயங்களை சற்று ஒதுக்கி, இசையையே நீர்க்கச்செய்கிறோம். இதில் முதலில் அடிபடுவது RTPயே. ஒன்று மொத்தமாய் தூக்கிவிடுகிறோம். இல்லை இடக்கு ராகத்தில் சிறு பல்லவியாய் திஸ்ர தாளத்தில் 20 நிமிடத்திற்குள் சுருக்க முடித்துவிடுகிறோம். வேண்டாவெறுப்புடன் தீபாவளி மருந்து சாப்பிடுவது போல.
மேட்டிமைவாதம் என்று ஆந்திராவை சாடுவதா, எளியோர்க்கு எளியோனாய் RTPஐயே பெரும்பாலான கச்சேரிகளில் தூக்கிவிடும் தமிழ்நாட்டை பாடுவதா.
கலைஞன் தேய்ந்தால், ”சிந்து பைரவி” உட்பட, சில காரணங்களே. கலை தேய்ந்தால் சமுதாயம் மொத்தமும் பொறுப்பே.
மிச்சத்தை சொல்வனம் இணைய-இதழில் வெளியாகியிருக்கும் என் ராகம் தானம் பல்லவி – பாகம் ஒன்று கட்டுரையில் படித்துக்கொள்ளுங்கள்.







