«

»

சுவர்களுடன் பேசியவள், ஆனால்…

ஒரு ஊரில் ஒரு மாமியார் வாழ்ந்தாள். ஆனால் அவள் குறைகளை யாரிடமும் சொல்லமுடிவதில்லை.

அவளுக்கு இரண்டு மாட்டுப்பெண்கள். இரண்டு பிள்ளைகள். இரண்டு கைகள். இரண்டு கால்கள். ஆனால் மொத்தம் இருபத்தியொரு விரல்கள்.

மாட்டுப்பெண்கள் அவளை படுத்தினர். பிள்ளைகள் உதாசீனப்படுத்தினர். ஆனால் அவள் நான்கு வைர மோதிரங்கள் அணிந்திருந்தாள்.

கணவன் இருந்த காலங்களில் ஊரில் கோப்யமாக வாழ்ந்தவள் வாயைத்திறந்து பிறரிடம் குறைபட்டுக்கொள்வதே தெரியாது. ஆனால் அவள் மறுமணம் புரிந்துகொள்ளவில்லை.

இன்று தினமும் தனக்கு நேரும் துன்பங்களையும் கொடுமைகளையும் அவள் அமைதியாக தாங்கிக்கொண்டாள். ஆனால் அவள் காலில் மெட்டிகள் சப்தம் செய்யும்.

வெளியே செல்லாத துக்கம் அவளுள்ளேயே வியாபித்து வளர்ந்தது. ஆனால் அவள் மார்பகத்தின் அமிர்த்தம் மட்டும் வெள்ளையாகவே வெளியேறியது.

துக்கத்தினால் அவள் குண்டானாள். ஆனால் நன்றாக தோய்த்த ஒன்பது கெஜம் புடவைகளையே உடுத்தினாள்.

அதற்காகவும் அவள் அந்நால்வராலும் கேலிசெய்யப்பட்டாள். ஆனால் அவள் தன் உணவையோ உடையையோ குறைக்கவில்லை.

ஒரு நாள் அந்நால்வரும் வீட்டிலில்லாத சமயம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டாள். ஆனால் அவள் மனம் துக்கத்திலிருந்து எழவில்லை.

இருபத்தியொரு விரல்களில் பத்தின் உதவியுடன் வீட்டைவிட்டு வெளியேறி மனம்போன போக்கில் சென்றாள். ஆனால் அவள் தலையில் சூட்டியிருந்த மலர்கள் சீக்கிரம் வாடிவிட்டது.

ஊரை அடுத்துள்ள இன்றைய காட்டிற்கு அவள் மனம் இட்டுச்சென்றது. ஆனால் தன்னுள்வளரும் துக்கம் தொண்டையை அடைப்பதை உணர்ந்தாள்.

தாகம் தீர, கானகத்தில் தேடி, நான்கு சுவர்களுடைய ஒரு சிதிலமடைந்த வீட்டை கண்டாள். ஆனால் காடு ஊராய் இருக்கையில் அவ்வீட்டில் சாம்பிராணி புகை வாழ்ந்தது.

எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடும் என்ற வீட்டினுள் தாகம் தீர, துக்கத்துடன் தைரியமாக நுழைந்தாள். ஆனால் மறுமணம் புரிந்துகொள்ளவேண்டும் என்று அவளுக்கு தோன்றவேயில்லை.

ஆள் அரவமற்ற வீட்டினுள் சுவற்றில் ஆளுயரக் கண்ணாடி. ஆனால் துக்கம் அவள் தொண்டையை அடைப்பதை நிறுத்தவில்லை.

பலகாலம் உள்ளே தேக்கிய துக்கம் வாய் வழியே சுவரில் பீறிட்டு அடித்தது. ஆனால் தன் தாகத்திற்கு சாந்தியில்லை என்று கண்ணாடியில் அவளுக்கு தெரிந்தது.

தன் மேல் விழுந்த துக்கத்தின் கனத்தில் ஒரு புறச் சுவர் உடைந்து விழுந்தது. ஆனால் உளுத்துப்போன கட்டையொன்று உத்திரத்தை தாங்கி நின்றது.

வெளியேறிவிட்ட துக்கத்தினால் அவள் கைகால்களும், வயிறும் சுருங்கிவிட்டதை கண்ணாடியில் கண்டாள். ஆனால் ஒன்பது கெஜப் புடவை நெகிழாமல் இடுப்பிலேயே இருந்தது.

அடுத்த சுவரை தன் துக்கத்தின் மற்றொரு பகுதியை வீறிட்டு அடித்து உடைத்தாள். ஆனால் அவள் மார்பகம் இரண்டிலும் அமிர்த்தம் சுரக்கவில்லை.

மூன்றாவது சுவர் துவண்டு விழும் வரை இரண்டாவது மாட்டுப்பெண் செய்த கொடுமைகளை துப்பினாள். ஆனால் அவ்வீட்டில் தன் தாகத்திற்கு தண்ணீர் இல்லை என்பதை மறந்துபோனாள்.

கண்ணாடியில் ஒன்பது கெஜப் புடவை தன் மெலிந்த இடையிலிருந்து நெகிழ்வதை கண்டாள். ஆனால் அவள் தலை மட்டும் பெரியதாக கனத்துடன் இருந்தது.

நான்காம் சுவற்றிற்கு இரண்டாவது பிள்ளையின் உதாசீனத்தை உரக்கச்சொன்னாள். அவள் தலைக்கனம் குறைந்தது. ஆனால் கண்ணாடியும் சுவற்றுடன் சேர்ந்து நொறுங்கியது.

இப்போது அவள் என்றோ கணவனுடன் குலவுகையில் பொங்கும் இடையும், விம்மும் மார்பகங்களுமாய் அமைந்த வனப்பும் வாளிப்புமுள்ள தேகத்துடையவளானாள்.

ஆனால் நான்கு சுவர்களையும் இழந்த வீடு கூரையுடன் இடிந்து அவள் மேல் விழுந்தது.

ஒரு காட்டில் ஒரு மாமியார் வாழ்ந்தாள். ஆனால் அவள் குறைகளை யாரிடமும் சொல்லமுடிவதில்லை.

Print Friendly

இவைகளையும் படிக்கலாமே:

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1915