«

»

ஒரு கொளை கதை – பாகம் 12

கண்விழித்தபோது எட்டாம் நம்பர் வார்டே பெண்டத்தால், புஷ்பம் கலந்த  நாற்றமாய் இருந்தது. நாற்றம் என்றால் நறுமணம். கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ நாச்சியார் திருமொழி வகை நாற்றம். டேப்பில் அபிராமி அந்தாதி. என்னடா குணமாக்குறதுக்கு பதில், குணாவாக்கிட்டான்களா…

ஹலோ, மார்னிங்…

அருகில் ரோஜா நாற்றத்தில் டாக்டர் சாகடிக்காத கோஷ். வாழ்வளிக்கும் கோஷ். இளமை ஜோஷ். தேவையான வாளிப்புகளை வெள்ளை ஏப்ரனில் மறைத்து, கழுத்தில் தங்க ஸ்டெத் தொங்க (கணவர் பம்மல் சம்பந்தம் கொடுத்ததாம்), இளமையாய் சிரித்து, முதுமையாய் குனிந்தாள்.

மீண்டும் சிலிக்கன் வாலி.

கண்கள் செருகி, சே, சொருகி, (சொருவிருவேன், செருகிதான் சரி…) கிரக்கமாய்.. சே, உற்சாகமாய் இருந்தது. நான் கான்பது கனவா இல்லை நினைவா? சே, க்ளீஷே. இருங்க, மறுபடியும் முயல்கிறேன். மீண்டும் குனிந்தாள். நான் கான்பது சிலிக்கனா, இல்லை நிஜமா?

நிஜம்தான்.

சதியாய், பக்கத்தில் லொடபடவா தோன்றினான்.

குருட்டு அதிர்ஷ்டம்டா உனக்கு. தலைக்கு வந்தது தலைமுடியோட போச்சு. பெண்டத்தால் மயக்கத்தில் லொடபடவா தலையில் மயில் பீலிபோல தெரிந்தது. உற்றுப்பார்க்க முயல்கையில் தோளில் காண்டீபம் இழுத்தது. ஈசீஜி ஒயர்கள்.

என்னடா ஆச்சு? கொலைகாரன் மாட்னானா? நாம துலக்கியது சரிதானா.

சொன்னான்.

கொலைகளை செய்தது சலூனிஸ்ட்தான். கத்திரி வைத்து ரத்தம் பொங்க சீரியல் கில்லர் ரேஞ்சில் எல்லாம் இல்லை. தமிழை பேசியே கொன்றுள்ளான். முதலில் மாரடைப்பு பேஷண்ட் ஒருவரை தற்செயலாக இப்படி செய்யப்போக நாளடைவில் பழகிவிட்டது. ருசி கண்டு குட்டைப்பாவாடையோ இல்லையோ, எந்த ஆரோக்கியமான நபரையும் தமிழ் பேசியே கழுத்தை அறுக்கும் திறமை இருக்கிறதா என்று டெஸ்ட் பண்ணியிருக்கிறான். தமிழார்வல என்னார்ஐ என்றால் தொக்கு. எட்டப்பன் காலத்தினோடே காலாவதியாகிவிட்ட தமிழில் அவர்களுக்கு பிடிக்குமாறு பேசி நொக்கிவிடுவான்…

பின்பு என்ன, அவன் பேச்சு மூளையில் கழலையம் போன்றது. ஒருவருக்கும் அதிலிருந்து ஏமமில்லை. பேச்சு முடியும் முன் கேட்பவர்கள் மூளையில் குருவுகுப்பு நிகழும். சாவுதான். இதையெல்லாம் டியூமர், கட்டி, இம்யூனிட்டி, எதிர்ப்பு, மூளையில் ரத்தக்கசிவு என்று மற்றவர்களுக்கு புரியவைக்கவே எனக்கு சில மணித்துளிகள் பிடித்தது, சே, கொஞ்ச நேரம் ஆச்சு. அறிவியல தமிழ்ல சொல்றது கஷ்டம். சே, கச்டம், சே கஸ்மாலம், வுடுங்க…

இவ்வகை கொளைகலுக்கு முடிவு, தீர்வு என்ன?

கேஸ் சற்று கஷ்டம். சாரி, கடினம். கொலைகளை கண்டுபிடித்ததே தற்செயல் (இந்த துப்பறியும் பொழப்புல ஆர்வக்கோளார இருக்கிற நம்ம மாதிரி ஆளுக்கு என்னிக்கி கிரெடிட், சே, அங்கீகாரம் கிடச்சிருக்கு சொல்லுங்க). தீர்ப்பு தமிழ்மக்கள் அனைவரையும் பாதிக்கும் என்பதால் ஏழு கடல், ஏழு மலை, ஏழு கடலை என்று பார்த்திபன் புரவியில் பயணித்த பல காத தூரம் தாண்டி, ரகசியமாக, பாதாள சாக்கடையின் அடியில், தீப்பந்த வெளிச்சத்தில், மொழிப்பாசறையில், தமிழ் மக்கள் சார்ப்பில் படிக்கப்பட்டது. நானும் பாசறையில் வீல்சேரில் விரவியிருந்தேன். படிக்கும்முன் ஜட்ஜ் மாமா கனிவுடன் என்னை நோக்கி, தம்பி உன் நோக்கியாவை ஆஃப் செஞ்சுடு என்றார்.

கொலைகள் நடந்துள்ளது என்று அனைவரையும் நம்ப வைக்க பல முயற்சி எடுத்துக்கொண்ட, பிறகு தன் உயிரை துச்சமென மதித்து துணிந்து முடிவெட்டிக்கொள்ள சென்ற ஆர்வக்கோளரை இந்த கோர்ட் கௌரவித்து அவருக்கு பட்டம் வழங்குகிறது. இனி அவரை தமிழ்கூறும் செல்லுலகம் அனைவரும் தமிழார்வக்கோளாறு என்று விலிப்பார்கள்.

தமிழ் நாட்டில் அநேகர் தமிழ் பேசுவதில்லை. பைந்தமிழ் பேசுபவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்துவிட்டனர். அப்பால, இன்னிக்குசொல்ல தமிழ் நாட்ல கதைக்கப்படும் மொயி போன நுப்பது வருசமாயிட்டும் தமிளே இல்ல நய்னா. தமிழ்நாட்டில் பேச்சு ஒரு நோய். வெறும் பேச்சு வெட்டிப் பேச்சு. திண்ணைப்பேச்சு, திண்ணையே போச்சு. தமிழ் பேச்சு போயே போச்சு. இட்ஸ் கான். போயிந்தே. சோலேகாச்சி. கொலையாயிடிச்சி. இவ்வகை கொலைகளுக்கு அமிர்தான்ஜனைவிட நல்ல மருத்தைக் காங்கலெ. பொது நலத்துடனும், பொது மக்கள் வளத்துடனும் இருப்பவர்கள், தம்மக்கள் நலன் கருதி தமிழை, வடக்கில் இருந்து, சே, வடக்கிருந்து ஸெம்மொயியாக்கி உயிர்துறத்து விட்டார்கள்.

இப்படியெல்லாம் ஆரம்பித்து, சே, தொடங்கி, தீர்ப்பு மூவாயிரம் பக்கம் சென்றது. முடிக்கும்முன் கேட்ட எல்லோரும், சே, அனைவரும் நாக் அவுட். நாக்கை புடிங்கினு செத்துட்டாங்க.

நான் எப்டி தப்பிச்சேங்கறீங்களா, நான்தான் தமிழ் ஆர்வக்கோளாரன் ஆச்சே. எனக்கு டமில் அவ்லோவா வ்ராதூ. படிச்சது மொத்தமா புரியல. தப்பிச்சேன். கண்ணயர்ந்து கையில் இருந்த செல்போனில் பச்சக் என்று அமுக்கிவிட, போன் ரிங்டோனாய் தீர்ப்பின் கடைசி வரியை ரெக்கார்ட் செய்துகொண்டது. அது

’இங்கு யாரும் அரசியல் பேசக்கூடாது’ என்று முடிதிருத்தகங்களில் இருக்கும் தமிழறிவிப்புப்பலகைகளில் இனி அரசியல் என்ற வார்த்தையை நீக்கிவிடவேண்டும்.

*****

அன்று ஞாயிறு. இந்த கதைக்கு கிழமை முக்கியமில்லை. டாக்டர் சாகடிக்காத கோஷை விட்டு விலக மனமில்லாமல் எட்டாம் நம்பர் வார்டிலேயே குடிபுகுந்துவிட்ட என்னை பார்க்க வந்தான் லொடபடவா. சட்டென்று உன்னை பார்ப்பதற்கு பிரேதமா பொணமான்னே பிடிபடலைடா என்றான்.

அதான் கேசமே போனாலும் பரவாயில்லைன்னு கொளை கதையை சக்ஸஸ்புல்லா துலக்கி முடிச்சிட்டியே. சீர் அப். தமிழ பத்தி கவலப்படாத.

மொழி கலாச்சரத்தின் நீட்சி. மனித குலத்தின் சஹஸ்ர யுகாந்திரங்களின் பார்வை வெளிப்பாடுகள், தொன்மை கலாச்சாரங்களின் பெருவெடிப்பு சிதறல்கள். வார்த்தைகளால் ஆகாத மனதசைவின் பரிமாற்றலின் வீழ்ச்சி. செம்மை மொழி என ஒன்று எப்போதுமே புழக்கத்தில் இருந்திருக்காது. அது ஏடுமொழி. கல்வெட்டுகளில் இருப்பதும் அப்போது புழக்கத்தில் இருந்ததும் அக்காலத்துக்குரிய அவ்வட்டாரவழக்கே. செம்மொழியில் எப்போதும் எவரும் பேசியதில்லை-ஸெம்மொழியர்கள் என்று இப்போது உருவாகியிருக்கும் புதிய இனம் தவிர.

தமிள் யினி மொள்ல ஸாகும்னு நீ ஸொன்னா, மத்தவனுக்கு அது தமிழ்னு புரியுதுல்ல. அத்தோடு விடு. மனுஷங்க தமிழ்ல பேசரதுனாலயே தமிழ் எப்படி தேயும், சாகும். சாகாது.

கொளை கதை போய் அடுத்தது என்ன கொளை கவிதையா? நான் வேனா ஒரு கொளை கவிதை சொல்லட்டுமா? நந்தவனத்தினுள் ஒர் ஆண்டி… இரு, அவசரப்படாதே. நீ கேட்டதில்லை இத. படிப்பதற்கும் பேசுவதற்கும் இடையே தமிழில், மொழியில் பல உன்னதங்கள். சாதாரணமா மதிப்பீடாதே. பல பொக்கிஷங்கள், சாத்தியங்கள். சபீதா பாபி மாதிரி. தொட்டதில்லை நீ. உணர்ச்சிவசப்படாமல் குழந்தையை போல அப்படியே சாப்பிட கத்துக்கோ.

நந்தவனத்தினுள் ஒர் ஆண்(ட்)டி

அவள் நாளாரு மாதமாய் முயவனை வேண்டி

கொண்டுவந்தாள் ஒரு பேண்(ட்)டி

அதில் கூத்தாடி கூத்தாடி பித்தாக்கினாள்டி

சுபம்

கொளை கதை: பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10 | பாகம் 11 | பாகம் 12

Print Friendly

இவைகளையும் படிக்கலாமே:

  • சார்ந்த பதிவுகள் வேறெதுவுமில்லை

Permanent link to this article: http://www.ommachi.net/archives/1684