சலூன் டி பாரீஸ். ஐந்து நட்சத்திர ராட்சஸகேளிக்கையின் வயிற்றில் முன்பசிக்காக கட்டிய லவுன்ஜில் அஜீரணமாய் இருக்கும் முடிதிருத்தகம். இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் பேச்சுலர் பலர். வீட்டில் பேச்சு இல்லாதவர்.
இதன் சலூனிஸ்ட் லோக்கல் பார்ட்டி. கத்திரியும் கையுமாக, முறுக்கான பாடி. முகத்தில் தாடி. நெற்றியில் பட்டை. கழுத்தில் ருத்திராக்ஷ கொட்டை. சலூனிஸ்ட் பேண்ட் போடுவான். ஜிப் போடுவான். சட்டை நடு இரண்டு பட்டன் மட்டும் போடுவான். மிச்ச சட்டையை கீழே முடிச்சுபோட்டிருப்பான். மேலே மார்ப்பின் உள்ளும் புறமும் தெரியும்படியாக உலாத்துவான். நாரீமணிகள் கிறங்குவர்.
மதுரை வீரன் எம்ஜீயார் போல ப்ளாக் அண்ட் வைட்டிலேயே வழு வழு தொடை மினுக்கித் தெரியும் குட்டைப்பாவாடை அணிந்து, நுணிநாக்கு ஆங்கிலம் பேசி, பார்க்க நன்னாக, சாரி, நன்றாக இருக்கும் யுவதிகள் சலூனிஸ்ட் விரிக்காத வலையில் விழுவர். இவன் கைத்தாங்கலாக வீடுவரை கூட்டிச்செல்வான். தன் வீடுவரை.
மறதி அதிகம்.
வீட்டில் குட்டைப்பாவாடை ஸ்திரீகள் சாப்பிடப்படுத்தினால் சலூனிஸ்ட் பின்னால் இருந்து கையைபிடித்து வாணுரையும் வெண்ணிலவை காட்டி நிலாச்சோறு ஊட்டுவான். பிறகு காண்வாஸ் காலணிகள் அணிந்து பக்கத்து தேத்தாங்குட்டையாண்ட குட்டைப்பாவாடை ஸ்திரி தொடை (மட்டும்) தெரியும் வரை குதித்து குதித்து அவருடன் நடனம் ஆடுவான். சாப்டது செரிக்க. கையை பிடித்து பல்ஸ் பார்ப்பான். சட்டைபோட்ட மார்பில் படுத்து நொடியில் எலக்ட்ரிக் ட்ரீம்ஸ் காணுவான். ஆனால் எக்காரணம் கொண்டும் நங்கையின் முடியை மட்டும் தொடமாட்டான். நங்கையோ நாமோ அவனது முடி-மட்டும்-வெட்டும் செயல்களை தப்பர்த்தம் செய்துகொள்ளக்கூடாது இல்லையா.
இண்டலிஜெண்ட் ஆசாமி. நாலெழுத்து படித்த குட்டைபாவாடை ஸ்திரி வாவ் என்று புரியாமல் யோசித்து அவன் மார்பில் சாயும்படியாக, எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாருன்னு கேப்பான். கொஞ்சம் விவரமானவந்தான்னு நாம பதில் சொன்னா அடிப்பான். பக்கத்தில் பிச்சைக்கார சிறுவர்கள் வாயெல்லாம் பசியாக கண்ணில் மகிழ்ச்சி மல்க, மூக்கில் சளி உறைய, வெண்நிலவையும் வெளீர் தொடையையும் மெச்சுவர்.
தமிள்நாட்ல எந்த நட்சத்திர சலூன் பியூட்டிபார்லரில்தான் இப்படி தினத்துக்கு நடக்கல. சொல்லுங்க.
இன்றும் சலூனிஸ்ட் வேஷமணிந்திருந்தான். உட்கார்ந்த என்னை உற்று கவனித்தான். நான் ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை (முந்தியே சொன்னேனே, ஊருக்கு வெடிவைக்கும்போது மட்டும்…). குட்டை பாவாடை மைனஸ்.
சலூனிஸ்ட் கையில் கத்திரியுடன் பார்த்த பார்வையில், காலை சேர்த்து வைத்துகொண்டேன்.
அருகில் வந்து, முடி வெட்டத் தொடங்கினான்.
என்ன சார் ஆளையே காணோம். நவநாகரீக யுவனாக்கிறீங்க, ரெண்டு வாரத்திற்கு ஒரு தபா இங்கன வந்து குந்தனும்ல. என்ன ஸ்டைல்ல வெட்டனும் சொல்லுங்க. என்ன நம்ம மொயில கலாசுனதும் குஷாலாய்டீங்க போல. நல்லா குந்து மே. வேற மாதிரியும் பேசுவேன். கஸ்டமருக்கேத்தமாரி. உங்களுக்கு ரஜினிகாந்த் மாதிரி முடி. அதான் ரஜினி மாதிரி முடியே இல்லங்கறததான் அப்டி சொல்றேன். புரிஞ்சிக்கோங்க. கஸ்டமர கவர் பன்ன தொழில் ரகசியம். எப்டி ழ கரெக்டா உச்சரிக்கறேங்கரீங்களா. தமிழ் நல்லா வரும் சார் நமக்கு. நமக்குனா எனக்கு. சின்ன வயசுல கிராமத்துல படிச்சது. அப்போலாம் என்ன கிளாஸ்னே தெரியாது. எஸ்ஜீ, கு.வா.சா. ன்னுலாம் செம தமிழ் வாத்தியார்ங. ழ சரியா சொல்லலைனா பெண்டு நிமிர்ந்துடும். அவங்க கத்துகொடுத்ததுல இப்ப வரைக்கும் நல்ல தமிழ் எதுன்னு சரியா சொல்லமுடியுது. ப்ளாக் அண்ட் வைட் ஷோபனா ரவி போனப்பறமே கடை டீவிய உடைச்சிட்டேன். டயனோராவுக்கு சயனோரா. பல்குணன், சரோஜ் நாராயண் சுவாமி இவங்களுக்கு பிறகு ரேடியோ இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கு. நல்ல வளர்த்தியான முடி சார் உங்களுக்கு. நிறைய கொட்டிபோச்சு. அப்படியே லூஸா விட்ருட்டா. வெட்டாம விடுவேனா. கொஞ்சமா வெட்டுவேன். புல்லுபோல வெட்டுனா நீங்க திரும்பி மூனுமாசம் கழிச்சுதான் வருவீங்க. அப்புறம் நம்ம தொழில் எப்படி நடத்துறது. க்ரூ கட்டெல்லாம் இல்ல. ரஜினின்னா இப்டி பம்மறீங்க. கமல் ஃபேனாங்னா? கச்சமுச்சா கட்டுன்னு ஒன்னு இருக்கு. ஆளவந்தானுக்காக அவருக்கு வெட்டிவிட்டேன். மொட்டையில்ல. இது மிலிட்டரி தம்பி வேடத்துக்கு. தூக்கத்தில தலைய கரப்பு அரிச்சா மாதிரி இருக்கும். வேனா செய்யட்டா. ஒருத்தர் இப்போதான் நாலு நாள் முன்னாடி ஆளவந்தான் மொட்டை போட்டார். தாணு இல்ல சார். பேர் தெரில. கஜினி மொட்டைனு நெனச்சீங்களா அத? அதெப்படி அவர நீங்க பார்த்திருக்க சான்ஸே இல்லே. ஏனா, அதவுடுங்க. உன்னைப்போல் ஒருவன் பார்த்தீங்களா. என்னது நானா. நாயில்லை சார். நான் சொல்றது சினிமா. கமல் சொல்ற தீவிரவாதத்திற்கு தீவிரவாதம் சுத்த பேத்தல் சார். நீ என் கண்ண எடுத்ததற்கு நான் உன் கண்ண எடுக்க கிளம்பினா உலகம் முச்சூடும் பொட்டையாயிடும் சார். ஏன் சலூன்காரன் சமத்துவம் பேசக்கூடாதா. வறுமையின் நிறம் சிகப்புல இதே கமல் சலூன் வச்சு, கேரவன்ல ஸ்ரீதேவிய வச்சு, பாரதி பேசினா பணத்தகொடுத்து பாப்பீங்க. நான் காந்தி கருத்து சொன்னா, மீரா, தாரான்னு, நம்பி வந்தவங்களுக்கு வாழ்க்கை கொடுத்தா வாழ்வுடாம்பீங்க. ஹே ராம் படத்துல காந்தி வாயிலா சொன்னதைதான் சொல்றேன். அதுல வரல. சென்சாரில வெட்டிட்டாங்களாம். முடி வெட்டிக்க வந்தபோது சொன்னார். ஒட்டிகிச்சி. அறிவெல்லாம் கம்மி நமக்கு. ஆனா தமிழ் வெறி சார். இப்படித்தான் பாருங்க நேற்று ஒரு தீந்தமிழ் என்னார்ஐ அமெரிக்காவில் இருந்து செந்தில் டிராயர்ல வந்தான். டி பாரீஸ்ன்னு நம்ம சலூனை பார்த்து உவகையாகி முடிவெட்டனும்னான். அஞ்சு வருஷம் முன்னாடி பொழைக்க அமேரிக்கா போயிருக்கான். வாவ், உங்க தமிழ்நாட்ல இப்டிலாங்கூட சலூன்ஸ் இருக்கான்னான். இண்டர்நேஷனல் ஸ்டேண்டர்ட்ஸ். ஐ.எஸ்.ஓ. சர்டிபிகேஷன் இருக்குன்னு ஆட்டையபோட்டேன். ஆடிபோய்டான். பேசுகையில் என்னமா தமிழ் விளையாடுது. திருவிளையாடல் வசனம், தி. ஜா., திகம்பர சாமியார், திரிகடுகம், திருமந்திரம், திருத்தக்கதேவர் எல்லாத்த பத்தியும் ஏதேதோ சொல்றான். ஜெயமோகனுக்கு ரெண்டு தபா ஈமெயில் அனுப்பிருக்கானாம். அவர் கண்டுக்கலையாம். வளர்ச்சி கிளர்ச்சி பற்றி கட்டுரையெல்லாம் எழுதியிருக்கானாம். ஆனா மாப்புவோட பப்பு நம்ம பாப்புகிட்ட வேகலை. வச்ச ஆப்புல முடிவெட்றதுக்குள்ள மூச்சுமுட்டி செத்துட்டான். ஆனாலும் வெட்டிட்டுதான் விட்டேன். முடியத்தான். குப்பைத்த
ொட்டியாண்ட கார்ல இஸ்திகினுபோய் காடாசிட்டேன். இஸ்திகினுன்னு பேசினா சிங்கப்பூர்லகூட புரியும். நக்கலா சிரிப்பாங்க. என்ன சார் உங்களுக்கு குரல் ஈனஸ்வரமாயிடிச்சி. கடைசிவரை போராடி பார்த்தான் நம்ம பேச்சோட. ஏதோ சொன்னானே, ஆங். இணையத்தில் இலக்கியத்தில் நேற்று இல்லாதிருந்து இன்று இக்கணம் புதிதாக நிகழ்ந்து சாத்தியமாகி பிராகசித்து பரிமளித்துகொண்டிருக்கும் ஒரு பரிமாண உற்சாகம், விஸ்தாரம், அசைவூட்டமுடையகேலிசித்திரஒளிதக்கலை. தியேட்டரைச் சார்ந்த திரைப்படத்துறை எல்லைகளிலிருந்து பிய்ந்து எடுக்கப்பட்டதனாலும் விஸ்தாரம் சாத்தியமகிவிட்ட இக்கணத்திலிருந்து அது இலக்கியத்தை சார்ந்த எல்லையாகிவிட்டமையால்…
எனக்கு மூச்சு முட்டியது. மார்பு விண் விண் என்று விம்மித்தெறித்தது. தலைசுற்றி, கண்கள் செருகி, இருண்டு, மயக்கமாய், பேசும், படிக்கும் தமிழெல்லாம் க்ளீஷேயாக மீண்டும் மீண்டும் மனக்கண்முன் விரிந்து, இதுவரை கடந்த என் வாழ்க்கையே ஒரு கெட்ட தமிழ் சினிமா படம்போல மனக்கண்முன் ஓடி, மாதவன் நானாகவும், சங்கீதா சாகடிக்கரா கோஷாகவும், ஐஸ்வர்யா ராய் ஐஸ் ஆகவும் வந்து வழக்கம் போல் தமிழ் பேச, நடிக்க திணறி அதுவே கேரக்டருக்கு பொருந்தி, படம் (பெயர், எவனோ மற்றொருவன்) போஸ்டரிலேயே நூறு நாளை தாண்டி ஓடுவதுபோல…
[அடுத்த பாகத்தில் முடியும்]
கொளை கதை: பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10 | பாகம் 11







