வாங்ஸ் கிச்சன். வேண்டாத இடங்களில் பளீரென்று வெளிச்சங்கள். வேண்டிய இடங்களில் சுவற்றில் அழுக்கை மறைக்க. ஆங்கிலம் பேசும் சர்வரிடம் லொடபடவா ஒரு ப்ளேட் ஆனியன் ரிங்ஸ், ரெண்டு கப் காப்பி என்றான்.
நடந்த காரணம்புரியாத கொளைகலின் துப்பேதும் துலங்காமல் எனக்கு இருந்த வெறி லொடபடவாமேல் திரும்பியது. ஏண்டா, தமிழ் தமிழ்னு சொலினுகுர. ரெண்டு கப் காப்பிங்கற. ரெண்டு கப் காப்பிகள் அப்டினு சரியா சொல்லு. வாரினேன் அவனை.
லொடபடவா கெட்டிக்காரன். அப்படியே பார்த்தாலும் ரெண்டு கப்கள் காப்பி அப்டினுதான் சொல்லனும்.
தொங்கிப்போனேன். எங்கேந்துறா உனக்கு இதெல்லாம் தெரியுது? அப்பாவா, தாத்தாவா, யார் கத்துகொடுத்தாங்கடா இத?
இல்லை. இது அப்பாவின் ஒன்றுவிட்ட நண்பர். பெயர், கந்தசாமி பிள்ளை. அவருடைய அப்பா என் தாத்தா வடுவூர் சாமித்துரைக்கு அவ்ளவா ஆகாது.
அவனே தொடர்ந்தான். இப்படி காப்பிகள், கப்கள்னு அவதானிப்பதுல ஒன்ன மறந்துட்டோம் கவனிச்சயா?
அவதானிப்பா, அப்டீனா? சரி சொல்லு.
காப்பினாலும், காப்பிகள்னாலும், பித்தம் தலைக்கேறி குடிக்கற காப்பிய பரங்கியர் மொழியில்தான் சொல்றோம். ஏன்னு யோசிச்சுபார். காப்பி தமிழர் பானமில்லை. இந்தியர் பானமுமில்லை. அந்த காலத்தில் காப்பி இல்லை. வேங்கடாசலபதி ஆராய்ந்து சொல்லியிருக்கார் (1). 1920கள்ல தமிழ்நாட்டு மிடில்கிளாஸ் மாதவன் வீட்டுகுள்ள காப்பி வந்தபோதே ஆங்கில காப்பியாத்தான் வந்தது. என்பதாண்டுகாலம் பரங்கிய, ஆர்ய, திராவிட ஆட்சி கழித்து இப்பவும் அப்படியேத்தான் இருக்கு. கொளையாயிடல.
சூடான காப்பி வந்தது. குடித்தவுடன் லொடபடவா இன்னும் சூடானான். தமிழ் காதலன்.
நம் மொழியில் இல்லாத ஒரு கருத்தை, நம் மொழியில் ஏற்கவேண்டிய அவசியம் ஏற்படும்போது அக்கருத்துக்குண்டான வார்த்தைகளைத் தோற்றுவிப்பதில் நாம் மிக ஜாக்கிரதையாக பணியாற்ற வேண்டும். உதாரணமாக காப்பி என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். நமது மொழியில் இதற்கு வார்த்தை கிடையாது. இப்போது அதற்கு வேறு வார்த்தை உண்டாக்குவதைவிட வழக்கிலிருந்து வரும் அதே வார்த்தையை நாம் தமிழில் ஏற்றுக்கொள்ளலாம். சொன்னது நா இல்லடா. தந்தை பெரியார் (2).
நாம டெலிபோன தொலைபேசியாக்கி, பின் முண்டகூவியாக்குறோம். செல்போன நாமா கண்டுபிடிச்சோம் செல்லிடைபேசியாக்குறதுக்கு? ஏன் உக்காந்து பேசினா செல்போன்ல கேக்காதா?
நம் நாகரீகத்துக்கு, கலாசாரத்துக்கு, மொழிக்கு புதுசா ஒரு கருத்து வந்தா அது ஒண்டவந்த பிடாரி இல்ல. ஊர் பிடாரிதான் அப்படி நினச்சு விரட்டுது. ஆங்கில ஜகர்னாட்ல இல்லாத ஜகன்நாதரா, பாண்டிகூட்ல இல்லாத பந்தி குக்கயா? ரோடு, பாங்க், யூஸ், காப்பி, சார், பில் மாதிரிதான் நாம போட்ருக்கர சட்டையும். அத மெய்புகுபைன்னு ஊர்பிடாரிதான் போட்டுக்கவிடாம கழட்டுது.
பில் எவ்வளவு சார்? கொடுக்கையில் கவுண்டரில் சுவற்றில் வெங்கடாசலபதி. வாங்ஸ் கிச்சனில் வெங்கடாசலபதி.
அந்த முரண்பாடு தந்த தெளிவிற்கு முத்தாய்ப்பாக வெளியேவருகையில் லொடபடவா ஒன்று சொன்னான்.
மொழி கலாச்சரத்தின் நீட்சி. எண்ணம், கலாச்சாரம் காலத்திற்கேற்ப மாறும். மாற்றம் என்பது மானுட தத்துவம். பாரதிதாசன் இருந்த ஊரோடு வாழனும். புத்தகத்துடன் இல்லை. தமிழ் ஆர்வம்னு சாருக்கெல்லாம் ஐயான்னு போடறதில்லை நான். அப்புறம் சியர்ஸுக்கு தமிழ்ல சொல்லி தட்ட முடியாட்டி என்ஆர்ஐ தமிழார்வலர்களோட பீரே அடிக்கமுடியாம போய்டும்.
காப்பியுடன் சேர்ந்து லொடபடவா கொளைகலுக்கு கொடுத்த வியாக்கியானங்களில் சூடேறிப்போயிருந்த மூளையுடன் மார்ச்சுவரிக்கு வந்து நாலாவது பிரேதத்தை மீண்டும் பார்க்கையில் தற்செயலாய் கண்ணில் பட்டது அதன் க்ரூ கட்.
அந்த குட்டைப்பாவாடை சிலிக்கன் வாலி பாப் கட் இல்லையோ. சின்னதாய் மனதில் பொறி.
***
லொடபடவாவை இழுத்துக்கொண்டு ரெக்கார்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு ஓடினேன். கம்ப்யூட்டரில், சே, கணினியில் தட்டி கொட்டி நாலு சாவுகளையும் ஆராய்ந்ததில், காதல் தோல்வியா வெற்றியான்னு தெரியாமல் முதலில் செத்தவன் மொட்டை அடித்திருந்தான். கஜினி மொட்டை. லேசாய் முடி. அக்குள் ஷேவ் செய்யப்பட்டிருந்தது. செத்து மூன்று நாள் வரை மழிக்கப்பட்டிருந்த மொட்டையும் மீசையும் வளருமாம். நகம் போல.
மனதினில் ஒரு வாக்கியம் உருவெடுத்தது. இதுவரை உயிருடன் இருந்த நாம் செத்தாலும், செத்தே வெளிவரும் நம் செல்கள் செத்தநாள் முதல் செத்த நாட்கள் வளர்கின்றன… டேய், இதுக்கெல்லாம் இப்போ நேரமில்ல.
அடுத்த பிரேதம் குட்டைப்பாவாடை கேஸ். பாப் கட். இதெல்லாம் வேறயா என்பதுபோல் பார்க்கும் லொடபடவாவை பொருட்டாமல் சிலிக்கன் மேல் போர்த்தியிருந்த உடைகளை முகர்ந்தேன். லேசாக ஒடிக்கலோன் வாசனை. காலரில் துண்டு துண்டாக முடிப் பொடிகள்.
தான் சாவதற்குமுன் சாகடிக்கரா சென்ற ஐந்துநட்சத்திர அலம்பல் எது என்று தெரியவில்லை. நம் ரகசிய சிநேகிதி சந்திரமுகியை பிடித்தால்…
லொடபடவாவை கூட்டிக்கொண்டு புல்லட்டில் பயணித்து மணித்துளிகளில் வேட்டைய ராஜாவின் மாளிகையில் ஒத்தை சலங்கை கட்டி டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த சந்திரமுகியை பிடித்தேன். பார்த்ததும் ஆட்டத்தை நிறுத்தி, டேய் பொறுக்கி நாயே வாடா என்று வரவேற்று, தலைமுடியை அள்ளிமுடிந்து போய் வந்து, காப்பி கொடுத்தாள்.
முகி, (நாயே), நான் கேக்ரதுக்கு கரெக்டா யோசிச்சு பதில் சொல்லு (சரிடா…). சாகடிக்கரா (கேள்விப்பட்டேன்…) என்னை ஒழித்துவிடுகிறேன்னு கருவிவிட்டு போனாளே (ஆமா, மிஸ் ஆயிடிச்சி. நா வேனா ராத்திரி…). அன்று நீங்கள் பார்ட்டி போனீங்களே (ஆமாம்). எங்க (சொன்னாள். சே, பீட்ஸா ஹட்). முடியும் வரை இருந்தியா (இல்ல. பாதியில வேட்டையராஜா ஜீன்ஸ் பாண்ட், வாக்கிங் ஸ்டிக், பாதுகை சகிதமாய் லகலகலகன்னு ஓட்டவண்டியில வந்து அள்ளிகினு வந்துட்டார்) சரி, சாகரிக்கா பாய் கட் பன்னியிருந்தாளா? இல்லை யா. நிச்சயம் தெரியுமா? ஓகே. ஒகே. நீயில்ல நீயில்ல…. அவசரமாய் அவளிடமிருந்து விடுவித்துக்கொண்டு புல்லட்டில் படவாவுடன் விர்ரினேன்.
பிடித்துவிட்டேன் மொடஸ் ஓபராண்டியை. இரண்டு ஆம்பிளை. இரண்டு பொம்பிளை. கஜினி மொட்டை, பாப் கட், பாய் கட், க்ரூ கட். அனைவரும் சாவதற்கு முன் முடிவெட்டிக்கொண்டுள்ளனர். அந்தப்பக்கம் கடற்கரை, இந்தப்பக்கம் ஐந்துநட்சத்திர அலம்பல், குறுக்கில் இந்தப்பக்கம் குப்பைத்தொட்டி, அந்தப்பக்கம் மிச்ச சிட்டி. கிட்டதட்ட மூன்றுமைல் ரேடியஸில் சர்கிளுக்குள் மத்தியில் இருக்கவேண்டும் கொலைகாரனின் உரைவிடம்.
கேட்டதும் லொடபடவா மீண்டும் செல்லரித்துப்போனான். இந்த முறை ஆனால் உபயோகமாக டாக்டைம் தீருவதற்குள் கண்டுபிடித்துவிட்டான். சலூனை.
[தொடரும்]
***
ஆலோசனைகள்
(யார் சொன்னது குறுநாவல்ல ஆலோசனைகள் கூடாதுன்னு?)
(1) அந்தக் காலத்தில் காப்பி இல்லை – ஆ. இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம் ISBN 81-87477-00-9
(2) பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் 2, பக்கம் 922. – வே. ஆனைமுத்து, சிந்தனையாளர் மன்றம், திருச்சி, 1974.
[கொளை கதை: பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 | பாகம் 7 | பாகம் 8 | பாகம் 9 | பாகம் 10 ]







