அறிவுமஹாசமுத்திரத்தினில் தெறிக்கும் திவலைகளில் திளைக்கும் என் ஆராய்ச்சிகளினால் மனிதத்திற்கு என்ன பயன்? பெற்றார் சுற்றாருக்கு புரிவதில்லை. உற்றார் உறவினர் முகத்தில் சலனமில்லை. ஆராய்ச்சிமுடிவினால் நிறுத்தும் ஆட்டோவில் என் கட்டணம் குறையவில்லை. கச்சா எண்ணை பற்றாக்குறை தீரப்போவதில்லை. உலகளாவிய சூடேற்றம் குறையப்போவதில்லை. உலகமோ உச்சியோ குளிரப்போவதில்லை. அறிவியலாளர்கள் என்று பறைசாற்றும் இந்த மேட்டிமைவாத மெருகூட்டல்களினால் என்னைவிடுத்து தனியொருவனுக்கு உணவுகிட்டப்போவதில்லை. ஜெகத்தினை அழித்திடவுமில்லை. சாதித்த தனிமையிலும் இனிமை காண இயலவில்லை.
எவ்வகை விளிம்புகளையும் எட்டாத, புதிர்களை விடுவிக்காத, புரிதல்களை மேம்பிக்காத என் ஆராய்ச்சி என்ற இந்த முக்கியானுஷ்டானத்தில் இவ்வாறு நியூட்டனின் புத்தகத்திற்கு பள பள அட்டைபோடுவதினால் என்ன பலன்? கிட்டப்பார்வையின் உற்றுநோக்கலில் சக ஆராய்ச்சியாளர்களின் அங்கீகரிப்பு பரிந்துரைகளில் எனக்கு ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியாகிறது. இதைவைத்து சிலகாலம் சிலரை ஏய்க்கலாம். பலமுறை பலகாலம் செய்தால், பலரை ஏய்க்கலாம். பொறாமை அஜீரணத்தில் சிலரை ஏப்பம் விடவும் வைக்கலாம். மிஞ்சினால், என்னைப்போல் வெப்பம் சார்ந்த அறிவுச்சலனங்களில் நாட்டமுள்ள கும்பலுக்குள் ஒரு ஜான் உயரமாகலாம்; சில மணித்துளிகளுக்கு. பிறகு சலனங்களின் கொந்தளிப்பில் இயற்கையாக வேரொருவர் எ(ழு)ம்புவார். தன்னிச்சையாக எனக்கு ஏப்பம் வரும்.
நேரங்களில் சிலர் துள்ளியும் குதிப்பார். எங்கள் உலகத்திலிருந்து தற்காலிகமாக வெளியே. குளத்து மீன்களைப்போல்.
இது ஒரு வேடிக்கை குளம். முழ்காதிருக்க தன்னிச்சையாக வாலையாட்டியபடி, தலையை மேலே உயர்தியபடி, சுற்றிலும் எதிரிகளை, புகழை, நுகர்ந்தபடி, துள்ளும் மீன்களடங்கியது. அவை துக்கத்திலும் தூக்கத்திலும் கண்களை மூடுவதில்லை. அயராது ஓடிக்கொண்டே இருக்கும்; குளத்தினுள் ஆரோக்கியமாக இருப்பதற்கு. கரையில் சிலர் இந்த உற்சாகத்தை வேடிக்கை பார்த்து பிரமிப்பர். குளத்தின் கலங்கலும் மீன்களின் இரத்தத்தை நீல நிறமாய் காட்டும். கரையிலிருந்து வேடிக்கையின் ஆழம் புரியாது.
குதிக்கும் மீன்களைப்பார்த்து குழந்தைகள் கைதட்டும். பிறகு மீன்களைப்போல் தாங்களும் குதித்து நீந்த முயலும். செயல்களின் வெளிப்படை ஆற்றலில் மேல்மட்ட நீர் ஆர்ப்பரிக்கும். பரமகுஷியாகி அங்கும் இங்கும் துள்ளி, சாதித்துவிட்ட களைப்பில் திளைத்து, மீன்கள் குளத்தினுள்ளே அமிழும். ஆழ்கையில் ஆழ்வார் எனத்தோன்றும்.
காலையில் சேவலாகி கொக்கரிக்கும். குளம் கரைவரை கொப்பளிக்கும். உயரே துள்ளும் மீன்கள் வலைகளில் எளிதில் சிக்கும். அவைகளின் முயற்சி திரு வினை ஆகும். வர்த்தகமயமாக்கலில் பொரிந்து, துண்டங்களாக டப்பிகளில் அமர்த்தப்பட்டு, சோமபானத்துடன் கனவான்களுக்கு விருந்துணவாகும். வலைகளை வெறுக்கும் சில பெரிய மீன்களும் உண்டு. இவை தூண்டிலுக்காக காத்திருந்து குதிக்கும். பிறகு, அகெதெமியில் விருதுணவாகும்.
ஊரின் வளர்ச்சியில், ஆலைகளின் எழுச்சியில், கழிவுகள் பாதையமைத்து குளத்தினுள் சேரும். கழிவிரக்கத்தில் மீன்கள் பொறுக்கும். ஜொலிக்கும் கழிவில் பிறகு இரத்தினங்களை பொறுக்கும். இயற்கையின் மருட்சியில், பருவநிலை வரட்சியில் வெப்பசலனமற்று குளம் குட்டையாகி நாறும். மீன்கள் எலிகளாகி மிரளும். மூச்சு முட்டும். பெரியவை சிறியதை விழுங்கும். கற்றவை பெற்றவை நாடும். கற்றதை கரை(வ)தனில் கிடத்தும். துள்ளல் துணிவின்றி, தூண்டில் தேவையின்றி சில துறக்கும். பல இறக்கும்.
எப்படியும் குளத்தினின்று ஆத்மாக்கள் மீன்களாக வெளியேறுவதில்லை.
குழந்தைகள் பெரிதாகி கடந்து செல்லும் வேடிக்கை குளம்.
சிறுமீனைப் பெருமீனாம், சிறுமாயை பெருமாயை,
வற்றாத செல்வமே வாழ்க! நீ வாழ்க!








