என்னை பற்றி
நான் ஒரு ஆசிரியர். அறிவியலாளனும் கூட. அருண் என்று பலமுறை நீங்கள் கூப்பிட்டால் நான் சிலமுறையாவது திரும்பிப்பார்ப்பேன். எப்போதாவது புன்னகையும் செய்வேன். மற்றபடி தெருவோரமாக விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் அரைநிஜார், செருப்பு, செல்போன் அணிந்து நடந்து செல்லும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.
பள்ளியில் தமிழ் ஆசிரியர்களுக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை. சுட்டு போட்டாலும் இவனுக்கு தமிழ் வராது என்பதால் தமிழ்தாய் இவனிடமிருந்து பிழைத்தாள் என்று. ஆனாலும் என்னை சுற்றி ஒரு நான்கு பேர் (மனைவி, மக்கள், இரண்டு மனிதாபிமானிகள் ஹி, ஹி...) நான் தமிழில் சுமாராக எழுதுவதாக என் காதுபட பேசுகிறார்கள். கலியுகமல்லவா! நான் அவர்களை மன்னித்துவிட்டேன். என் தமிழ் ஆசிரியர்கள் என்னை மன்னிப்பார்களாக.
அறிவியல் விளக்கங்களை தாய்மொழி தமிழிலும் எழுத வேண்டும் என்ற ஒரு விபரீத ஆசையில் இந்த வலைதளத்தை சில வருடங்கள் முன் தொடங்கினேன். நடுக்கம் குறைய அவ்வப்போது கர்நாடக இசை, புத்தக, திரை விமர்சனம், தினவாழ்வில் பீட்டர், இணையத்தில் ட்வீட்டர் போன்ற வேறு பல விஷயங்களையும் எழுதி வருகிறேன். இவைகளில் சில சொல்வனம், திண்ணை மற்றும் வெப்புலகம் போன்ற வலைதளங்களில் பிரசுரமாகி படித்த சிலரை படுத்தியுள்ளது. மெட்ராஸ் பாசி என் முதல் சிறுகதை முயற்சி. ஒரு கொளை கதை என் முதல் குறுநாவல் (முடிந்துவிட்டது). சில வருடங்கள் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை இங்கு எழுத முடிந்தால், உபயோகமாக இருப்பதை புத்தக வடிவமாக்கலாம் என்று ஒரு எண்ணமும் இருக்கிறது.
முடிவாக, நான் இங்கு எழுதுபவை அனைத்தும் என்னால் மட்டுமே பதிப்புரிமைபடுத்தப்பட்டுள்ளவை. மேலும், இங்கு எழுதியுள்ள என் சொந்த கருத்துக்களுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாக பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துக்கள் எத்துணை பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாக இருப்பிணும்.
*****
இத்தளத்தில் உள்ள பின்னூட்டங்கள், பதில் கருத்துக்கள், அதை எழுதியவருக்கு (மட்டுமே) சொந்தமானவை. உங்கள் முதல் பதில்/பின்னூட்டம் மட்டும் மேனா, மெஷினா, என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டு மாடரேஷனில் புகுந்து சற்று காலதாமதமாக வெளிவரும்.
கெட்ட வார்த்தைகள், தனிமனித நிந்தனை, ஜாதி இன மத வெறியை தூண்டும் தேவையற்ற பேச்சுக்கள், சோப்பு விற்கும் விளம்பர வாசகங்கள் போன்றவையை இங்கு வந்து உங்கள் பின்னூட்டங்களில் கருத்தாக சொந்தம் கொண்டாட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மாறாக இங்கு நான் எழுதும் கருத்துக்களை நிச்சயம் வெட்டியோ ஒட்டியோ எழுதலாம். முக்கியமாக, எழுதப்பட்டுள்ள விஞ்ஞான விளக்கங்களில் ஏதேனும் தவறிருந்தால் தெரிவிக்கவும்.
*****
தேவையெனில் என்னை தொடர்புகொள்ள arunnnarasimhan அட் gmail டாட் com என்ற மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்கவும்
