நான் ஒரு ஆசிரியர். ஆராய்ச்சியாளன். அருண் என்று பலமுறை நீங்கள் கூப்பிட்டால் நான் சிலமுறையாவது திரும்பிப்பார்ப்பேன். அவ்வப்போது புன்னகையும் செய்வேன். மற்றபடி தெருவோரமாக விஞ்ஞானி வேஷ்டி கட்டிக்கொள்ளலாமா என்பது போன்ற உபத்திரவமில்லாத சிந்தனைகளுடன் அரைநிஜார், செருப்பு, செல்போன் அணிந்து நடந்து செல்லும் சென்னைவாசி. ஸ்ரீரங்க விசுவாசி.
அறிவியல் விளக்கங்களை தமிழிலும் எழுத வேண்டும் என்ற ஒரு விபரீத ஆசையில் இந்த வலைதளத்தை சில வருடங்கள் முன் தொடங்கினேன். நடுக்கம் குறைய அவ்வப்போது கர்நாடக இசை விளக்கங்கள் அனுபவங்கள், புத்தக, திரைப்பட விமர்சனம், கலை, கதை போன்ற விஷயங்களையும் எழுதி வருகிறேன்.
இவைகளில் சில இசை மற்றும் அறிவியல் கட்டுரைகள் சொல்வனம் மற்றும் தமிழ்பேப்பர் தளங்களில் வெளிவந்துள்ளது. ஓரிரண்டு (பழைய) திண்ணை, (காலாவதியாகிவிட்ட) வெப்புலகம் போன்ற வலைதளங்களிலும் இடம்பெற்றது. மெட்ராஸ் பாசி என் முதல் சிறுகதை. ஒரு கொளை கதை என் முதல் குறுநாவல் (முடிந்துவிட்டது).
பள்ளியில் தமிழ் ஆசிரியர்களுக்கு என்மேல் மிகுந்த நம்பிக்கை. சுட்டு போட்டாலும் இவனுக்கு தமிழ் வராது என்பதால் தமிழ்தாய் இவனிடமிருந்து பிழைத்தாள் என்று. ஆனாலும் கலியுகமல்லவா… என் தமிழ் ஆசிரியர்கள் என்னை மன்னிப்பார்களாக.
*****
மேலும், இங்கு எழுதியுள்ள என் சொந்த கருத்துகளுக்கு என் வேலை நிறுவனம் பொறுப்பேற்பதாக பொருள் விளக்கம் எடுத்துக்கொள்ள இயலாது. என் கருத்துகள் எத்துணை பகுத்தறிவுள்ளதாகவும், சாதுர்யமானதாக இருப்பினும்.