Musings
18Jan/0810

சென்னை புத்தக கண்காட்சி 2008 அனுபவம்

இந்தியன் கிரிக்கெட் டீம் போல் இரண்டு நாள் ஸ்டார்டிங் டிரபிளுக்கு பிறகு ஒரு கட்டாய லீவு நாளில் சாயங்காலம் சென்றால் கூட்டமாக இருக்கும் என்று காலையில் சாப்பிட்டுவிட்டு ஆட்டோ பிடித்து புத்தக கண்காட்சியை பத்தரை மணிக்கு அடைந்தால், திறக்கவில்லை.

லைனாக நில்லுங்கள் சார், நான் ஏன் சார் உங்கள் பின்னால் நிற்கவேண்டும், நான்தான் முதலில் வந்தேன், நீங்க வேணா என் பின்னாடி வாங்க என்ற சக இந்தியர்களுடைய கியூ கலாச்சாரத்தில் கருத்தொருமிக்காமல் கலந்து, சட்டை கலைந்து, வழ வழ டிக்கெட் வாங்கி, வாயிலில் உடனே அதை கிழித்துகொண்டு, பதினொரு மணிக்கு முதல் பந்தியில் உள்ளே நுழைந்தேன்.

இருங்கள். உள்ளே செல்லும்முன் உபரி விஷயம். கண்காட்சியில் நுழைகையில் ஆளாளுக்கு நோட்டீஸ் குடுக்கிறார்கள். கீழே போடாமல் வாங்கியதை சேர்க்க ஆரம்பித்தால் உள்ளே செல்லும்முன் அவையே ஒரு புத்தகம் ஸைசுக்கு வந்துவிடும். இந்த பயத்திலேயே வாங்கும் மக்கள் தாண்டி சென்றதும் கீழே போட்டுவிடுகிறார்கள். நோட்டீஸ் குடுப்பவர்களே நேராக கீழே போட்டுவிடலாம்.

இவற்றை நான் கொள்கையாக முறுவலித்து வாங்க மறுத்துவிடுவேன். காரணங்கள் பல. ஒன்று மேலே கூறியது. மற்றொன்று சிறுவயதில் கனகாரியமாக இந்நோட்டீஸ்களை சேர்த்து, ஸ்டாப்ளர் போட்டு, ஒன்ஸைட் நோட்டாக உபயோகித்ததுபோல் இப்போதும் செய்வதற்குவேண்டிய "இது ஜல்லித்தனம்" என்ற ஜட்ஜ்மெண்டெல்லாம் செய்யாத இன்னோஸென்ஸை இழந்துவிட்டது. எப்படியும் படிக்காமலோ அல்லது மேம்போக்காக படித்துவிட்டோ குப்பைத்தொட்டி தேடவேண்டிய சோம்பலில் சக இந்தியர் செய்வது போல் கீழே போட்டுவிடுவேன் என்று தெரியும். பிறகு பிறர் கீழே போட்டிருப்பதை எப்படி ஒரு 'உன்னைவிட நான் புனிதமானவன்' என்ற எண்ணம்கொண்டு கட்டுரையில் எழுதுவதாம்?

எனக்கு தோன்றிய யோசனை, நோட்டீஸை கையில் வைத்துகொண்டு, விஷயத்தை பெரிய தட்டியில் எழுதி முன்னும் பின்னும் தொங்கவிட்டுக்கொண்டு இவர்கள் நிற்கலாம். இல்லை நடக்கலாம். தட்டியை படித்துவிட்டு மேலும் விபரங்களுக்கு அனுகுபவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் கொடுக்கலாம். இல்லையேல், ஸ்டாலில் வாங்கும் புத்தகத்துடன் வைத்து கொடுத்துவிடலாம். வீடுவரை நோட்டீஸ் நிச்சயம் செல்லும். எல்லார் வீட்டிலும் குப்பை தொட்டியோ ஸ்டாப்ளரோ நிச்சயம் இருக்கும்.

சரி, புத்தக கண்காட்சியில் நுழைகிறேன்.

நுழைந்தவுடன் எப்போதும் ஏற்படும் குழப்பம். எங்கிருந்து ஆரம்பிப்பது? தீர்வாக எப்போதும்போல் நுழைந்த ஒரத்திலிருந்து எதிர் ஓரத்தில் ஆரம்பித்தேன்.

முதல் சுற்றில் நோட்டம் விடுதல். எங்கெங்கு நமக்கு வேண்டிய பொக்கிஷங்கள் பதுங்கியிருக்கின்றன என்று. இச்சுற்றில் கோவிலில் அர்ச்சனை தட்டை தொட்டு கொடுப்பது போல் புத்தகங்களை தொட்டு, லேசாக புரட்டி, வாங்காமல் வைத்துவிடுவேன். புத்தகங்களையும், கடைகளையும் அவைகளின் ரிலேடிவ் கோஆர்டினேட்களையும் (புத்தகங்கள் கடையில் எங்கே, கடைகள் காட்சியகத்தில் எங்கே என்று) மனதில் டிக் செய்து கொள்வேன். இழப்பு என்னுடையதே என்பதால், மறக்கமாட்டேன் என்று நினைத்துகொள்வேன்.

வழக்கம் போல் எழுத்தாளர்களுக்கு வாயிலில் கட்-அவுட், சமனில்லாத துணிமூடிய பலகை தரை, சாரி சாரியாக கடைகள், ட்யூப்லைட்கள், மக்கள், புத்தகங்கள். வழக்கம்போல் ஸ்டாலில் கை அறுக்கும் கயிற்று பிடிகொண்ட பை கொடுத்தார்கள். நடக்கையில் காலை மிதித்தார்கள். பேப்பர் கோப்பையில் முதுகில் இடித்து சூடான காப்பியை சிந்தினார்கள். வழக்கம்போல் தமிழ் ஆராய்ச்சி நிலைய கடையில் விற்பவர்களைவிட வாங்குபவர்கள் கம்மியாக இருந்தார்கள்.

சிலுக்கு, தாவூத், சதாம், கேட்ஸ் போன்ற சாதனையாளர்களை பற்றிய நேர்த்தியான அச்சில் வந்துள்ள புத்தகங்களுடன் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தரங்கம்பிள்ளை ரங்கநாயகம்பிள்ளை என்று நினைக்கிறேன் (பெயர் மறந்துவிட்டது. வாசகர்கள் தெரிந்தால் சரி செய்யவும். ஜூன் 2, 2008 பின்னூட்டத்தில் ரமேஷ் வைத்யா சரி செய்துவிட்டார்.), அவரது நாட்குறிப்பும் புத்தக வடிவில் வசந்தா பிரசுரம் கடையில் கண்ணில் பட்டது. புரட்டியதில், கோவையில் நடந்த அன்றாட சம்பவங்களும் அந்நாளில் நாட்டுநடப்பும் தேதியிட்டு சற்றே புரியாத தமிழில் எழுதப்பட்டிருந்தது. இவரது நாட்குறிப்புதான் தமிழில் முதல் ப்ளாகோ? அல்லது முதல் டைரியா? அடுத்தவர்களது டைரியையெல்லாம் விலை குடுத்து வாஙகி படிப்பதா? மனம் ஒப்பவில்லை. வைத்துவிட்டேன். (உண்மையான காரணம், படித்தால் ரொம்ப புரியவில்லை)

ஃபுட் கோர்ட் என்று பெயரிட்டு தட்டிகட்டி மறைத்து சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தனர். ஜூஸெல்லாம் கூட இருந்தது. பெயரிட்டதில் மட்டும் அமெரிக்கா தெரிந்தது.

முதல் சுற்றிற்கு சுமார் இரண்டு மணி நேரம் பிடித்தது. இச்சுற்றின் முடிவில் உடன் வந்தவருக்கு என்னை பிடிக்காமல் போனது. ஒருமுறை என்னுடன் அவரை வரவழைத்த அவர் விதியை என்னிடமே சொல்லி புலம்பினார். சரி, இன்று போய் நாளை மீண்டும் வருவோமா என்று குண்டை போட்டு அடக்கினேன். மினரல் வாட்டர் வாங்கி பகிர்ந்துகொண்டு, அவர் ஒரு மடக்கு அதிகமாக குடித்தார். பாட்டிலை திருப்பிக்கொடுத்தால் இரண்டு ரூபாய் தருவார்களா என்று நான் கேட்டதை, அவரது விதி வலியது என்பதால், கண்டுகொள்ளாமல் விட்டார். நான் இரண்டாவது பிரதக்ஷனிக்கையில் செல்போனில் நண்பருடன் கிரிக்கெட் ஸ்கோர் பற்றி விவாதிக்க ஆரம்பித்தார்.

வழக்கம்போல் ஒலிபெருக்கியில் தமிழாங்கிலம். வழக்கம்போல் இரண்டுமுறை அதட்டிச்சொல்லியும் யார் தொலைந்தார்கள், யார் தொலைத்தார்கள் என்று புரியவில்லை. வெறியாகி ஆறாவது முறை உற்று கேட்டதில் கனடாவிலிருந்து வந்திருக்கும் அஷோக்கை அப்பா காத்திருக்கிறார் உடனே வரவும் என்று அழைத்துக்கொண்டிருந்தார்கள். கனடாவிற்கேவா என்பது தெரியவில்லை.

சங்கர்லால், சாம்பு, சிவகாமியின் சபதம், சீரங்கத்து தேவதைகள் என்று சிறுவயது ஞாபகங்களினால் வாங்குவதைதவிர புதியதாக கதைகள் வாங்குவதை அனேகமாக நிறுத்திவிட்டேன். கட்டுரைகள்தான். அறிவியல், இசை, ஆராய்ச்சி என்று தேர்வு. ஹாஸ்யம் என்றால் வாயில் ஜலம். நிச்சயம் எனக்கு சற்றும் அறிமுகமில்லாத பழைய, புதிய எழுத்தாளர்களை வாங்குவேன். இந்தமுறையும் செய்தேன்.

அடையாளம் பதிப்பு ஸ்டாலில், வ.அய். சுப்ரமணியம் கட்டுரைகளை வாங்குவதை பார்த்துவிட்டு, தமிழ் மொழி பற்றி ஆய்ந்து எழுதியுள்ள எம். ஏ. நுஃமானின் (ஈழத்து தமிழாசிரியர்) புத்தகங்களை காட்டினார் கடைக்காரர். வாங்கிவிட்டேன். கார்டெல்லாம் குடுத்து, தங்கள் கல்லூரிக்கு வருவேன், என்ன புஸ்தகம் வேண்டுமோ சொல்லுங்கள் என்று கூறி, தமிழ் நாடகத்திற்கு வேறு டிக்கெட்டெல்லாம் குடுத்தார்.

எனி இந்தியன் ஸ்டாலில் என்பது ரூபாய்க்கு பச்சக் பச்சக் என்று கைவிரலால் உதைத்து கால்குலேட்டரில் பத்து சதவிகிதம் கண்டு, கழித்து எழுபது ரூபாய் வாங்கிக்கொண்டார். மணிமேகலை ஸ்டாலில் கால்குலேட்டர் இல்லாமல் மனதாலேயே வேகமாக கூட்டி, பத்து சதவிகிதம் கழித்து நடுவில் புத்தகத்துடன் காத்திருக்கும் வாசகர்களிடம் சாரி சொல்லிக்கொண்டே விரைவாக பில் போடும் வயதான பெண்மணி மணக்கணக்கு சொல்லித்தரும் கிராமத்து பள்ளியில் படித்திருக்க வேண்டும்.

வழக்கம்போல் வாங்க நினைக்கும் புத்தகம் பதிப்பிலில்லை (அல்லயன்ஸ் வெளியீட்டில் எஸ்.வீ.வீ.யின் தமிழ் கட்டுரைகள்). இல்லை, வந்து விற்றுவிட்டது (தமிழ் ஆராய்ச்சி நிலையம் வெளியீடான பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள், முதல் பாகம்). புத்தக உலகில் நமது வில்லன் நமக்கு முன்னாடியே செல்கிறான். நமது ரசனை, வாங்கும் திறன், சந்தோஷத்துடன்.

வழக்கம்போல் உயிர்மையில் சுஜாதா தென்படுகிறாரா என்று பார்த்தேன். வழக்கம்போல் படவில்லை.

அடுத்த வருடம் நிச்சயம் நடந்துவிடப்போகிற இந்த சந்திப்பை பலமுறை அசைபோட்டிருக்கிறேன். அவரை பார்த்தவுடன் என்ன பேசுவது? உங்கள் புத்தகங்களையெல்லாம் படித்திருக்கிறேன். ரொம்ப சுமார். ஆனாலும் விடாமல் படித்துவருகிறேன் ஒன்றாவது நன்றாக எழுதமாட்டீர்களா என்று, என்று நம்மை நிச்சயம் அவர் ஞாபகம் வைத்துக்கொள்ளுவதுபோல் மாறுதலுக்காக ஒரு கதை விடுவதா? இல்லை உங்கள் கதைகளைவிட, சிறுகதைகளைவிட, கட்டுரைகள்தான் என்னை மிகவும் பிரமிக்கவைத்தன. உங்கள் மேல் மரியாதையை வரவழைத்தது. தமிழில் எழுதவேண்டும் என்று என்னை (பன்)படுத்துவதும் அவைதான் என்று சற்று சீரியஸாய் பேசி, இதேபோல் பலமுறை பலரிடம் கேட்டுவிட்டதால் ஆயாசத்தில் அவர் "ம்" என்று அதற்கு பதிலுரைத்தால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா? இல்லை கேசமே போயிற்று என்று இங்கிதமெல்லாம் பார்க்காமல் நானும் சீரங்கத்து தேவதைதான், கட்டுரைகளெல்லாம் எழுதுவேன் என்று மூச்சுவிடாமல் பேசி அவருக்கு கொட்டாவியை வரவழைப்பதா?

ஒன்றும் செய்யப்போவது இல்லை. சிரிக்ககூட வாய்வராது. உயிர்மை கடையிலேயே தூர இருந்துகொண்டு, அவர் காந்தீஜியை பார்த்ததுபோல், இங்கு அருண் என்று ஒரு அபிமானி இருக்கிறானாமே, எங்கே அவன் என்று அவர் (மனுஷ்யபுத்திரனிடம்) கேட்பார் என்று நினைத்துகொண்டிருப்பேன். கேட்காதுபோக, அவரை தூர இருந்தபடியே பார்த்துவிட்டு ஷேவ் செய்யாத கண்ணத்தில் போட்டுக்கொண்டு புளகாங்கிதத்துடன் திரும்பிவந்துவிடுவேன்.

எழுத்தும் எழுத்தாளனும் வேறு. எனக்கு பிடிக்கும் எழுத்தை எழுதும் சுஜாதா (ரங்கராஜன்) என்ற மனிதருக்கு என்னையும் என் (சொற்ப) எழுத்தையும் தெரியவேண்டும், பிடிக்கவேண்டும் என்று எனக்கு எண்ணமில்லை. ஒரு நப்பாசை. அவ்வளவே.

வாங்கிய புத்தகங்களை கொட்டி, தட்டி, அடுக்கி, ஆட்டோ பிரயாண குலுக்கல் அவைகளுக்கு மறக்க தடவிக்கொடுத்துக்கொண்டிருக்கையில் வழக்கம்போல் கண்காட்சி இன்னொருநாள் இருந்திருக்கலாமே என்று நினைத்துகொண்டேன்.

------

பி.கு. புத்தகங்கள் பட்டியல் (வேண்டுமானால்) தனியாக ஒரு போஸ்டில் போடுகிறேன்

மற்றவர்களுக்கும் சொல்லுங்களேன்:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • FriendFeed
  • Posterous
  • RSS
  • Tumblr
  • Twitter
  • Yahoo! Bookmarks

இவைகளையும் படிக்கலாமே:

  • சார்ந்த பதிவுகள் வேறெதுவுமில்லை
Comments (10) Trackbacks (1)
  1. நன்று.

    //சிறுவயதில் கனகாரியமாக இந்நோட்டீஸ்களை சேர்த்து, ஸ்டாப்ளர் போட்டு, ஒன்ஸைட் நோட்டாக உபயோகித்ததுபோல் இப்போதும் செய்வதற்குவேண்டிய “இது ஜல்லித்தனம்” என்ற ஜட்ஜ்மெண்டெல்லாம் செய்யாத இன்னோஸென்ஸை இழந்துவிட்டது//

    அது மட்டும் இல்லை. ஸ்க்ரிபிள் பேட் விலை இப்போது ஜுஜுபி…. அப்போது இல்லை :-) இந்த ரவுண்டா இருக்குமே ஒர்ரூவா காய்ன்… அதைக் கையகப்படுத்த எவ்ளோ தில்லுமுல்லு செய்ய வேண்டியிருக்கும் அப்பல்லாம் :-)

    //பி.கு. புத்தகங்கள் பட்டியல் (வேண்டுமானால்) தனியாக ஒரு போஸ்டில் போடுகிறேன்//

    போடுங்க…

  2. ப்ரகாஷ்: நன்றி.

    உங்கள் பதில் சில விஷயங்களை ஞாபகப்படுத்துகிறது. பிறகு எழுதுகிறேன்.

    முதலில், அடுத்த பதிவில் வாங்கிய புத்தகங்கள் பட்டியல்…

  3. Dear Arunn

    Nee solvathu unmaithan. Naan pona varuda calendar ellam cut panni Pin pottu vaithu irukken.

    Enakku niraya thevaipppadum. En Appathan ithai enakku solli koduthar

  4. Dear Arunn supera iruku.Sujatha padithal thanaku ipadi oru super rasikan irukar endru perumaipatu poorithu povar.

  5. உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி
    http://www.desipundit.com/2008/01/22/bookfair08/

  6. டுபுக்கு: வருகை, ரசனை, விளம்பரம் அனைத்திற்கும் நன்றி.

  7. The person who came with you was a wonderful and patient person thats why he was able to stay with you for 3 hours and also came with you on the next day. enna irundhalum blogla ippadi ezuthi iruka kudatho…ok i will forgive you….

  8. Writer Sujatha (Rangarajan) passed away yesterday (27/2/2008) :( .

  9. பாஸு, அது ரங்கநாயகம் பிள்ளை இல்லை, அப்படி நினைவில் தங்கக்கூடிய ‘ஆனந்தரங்கம் பிள்ளை’.

  10. ரமேஷ் வைத்யா: நன்றி. திருத்திவிட்டேன். (நீங்கள் அப்புத்தகத்தை வாங்கி விட்டீரா?)

    அருண்


Leave a comment


Powered by WP Hashcash